கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Monday, January 30, 2006

இசைக் கதம்பம் - 3

இசைக்கதம்பம் போட்டு ரொம்ப நாளாச்சி. சரி இன்னைக்கு மறுபடி ஆரம்பிக்கிறேன். கேட்டு மகிழுங்கள் நண்பர்களே.

ஹிட்டு பாட்டு:

'கன்னி ராசி'. சூப்பர் காமெடி படம். கவுண்டமணிக்காகவே இந்த படத்தை பார்க்கலாங்க. அதுவும் சோத்துக்குள்ள இருந்து முட்டையை தோண்டி எடுப்பாரே, அந்த ஒரு காட்சி போதும் படம் பார்க்க. அதில் ஒரு எஸ்.பி.பி-வாணி ஜெயராம் பாட்டு 'ஆள அசத்தும் மல்லியே மல்லியே' . ராஜாவின் ரெகுலர் 80ஸ் கலக்கல். படத்தில் ரேவதி சின்ன பொண்ணா இருப்பாங்க. அவங்க குதித்து குதித்து இந்த பாட்டுக்கு ஆடும் அழகே தனிங்க. அருமையான டிரம்ஸ் இசை. கேட்டு ரசிங்க.

அடுத்தாத்து ஆல்பட்:

இசையமைப்பாளர் ஆதித்யன் வரும் போது எனக்கு ரொம்ப எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. 'அமரன்' படத்தில் 'வசந்தமே அருகில் வா' ரொம்ப அருமையான பாட்டு. அவரது சீவலப்பேரி பாண்டி பாட்டு எல்லாம் நல்லா ஹிட்டாச்சி. அவர் இசையமைத்த 'உதவும் கரங்கள்' 'தொட்டில் குழந்தை' எல்லாம் என்னோட விருப்ப பாடல்களில் இருந்தது. சுட்டு போட்டாரா, இல்லை சொந்த சரக்கா என்றெல்லாம் தெரியவில்லை. திடிரென்று சடை வளத்துக்கிட்டு ஜெயா டி.வில சட்டி கிண்ட போய்ட்டார். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அவர் இசையில் 'ரோஜா மலரே' படத்தில் இருந்து எனக்கு பிடித்த 'அழகோவியம் உயிரானது' . இது எஸ்.பி.பி பாட்டு. வேறேன்ன சொல்ல :-). எஸ்.பி.பி குரல் கலக்கலோ கலக்கல். பாட்டு இங்கே.

அக்கம் பக்கம்:

இன்று ராஜாவின் கன்னட பாட்டு ஒன்று கேட்கலாம். என்னிடம் சில கன்னட சி.டிக்கள் இருக்கிறது. ராஜாவின் மலையாள பாடல்கள் அனைத்தும் கேட்டிருக்கிறேன். எனக்கென்னமோ கன்னட பாடல்கள் ரொம்பவே நல்லா இருக்கு. மலையாளத்தில் ராஜாவுக்கு அந்த அளவு சுதந்திரம் இல்லையோ என்று தோன்றும். முதலில் பாடகர் தெரிவிலேயே யேசுதாஸை விட்டா யாரும் பாடினா மலையாளிகளுக்கு புடிக்காது போல. இல்லை ஸ்ரீகுமார் மாதிரி கொஞ்சம் மலையாள் வாடை உள்ள ஆட்கள் தான் பாட வேண்டும். எஸ்.பி.பியே சுத்தமாக ஆகாது. அவரே ராஜா இசையில் ஒன்றோ இரண்டோ தான் மலையாளத்தில் பாடி இருக்கிறார். மனோ, அருண்மொழி - வெட்டு தான். :-). பெண் குரலிலும் அப்படி தான். சித்ரா வரும் வரை வேறு வழியில்லாமல் ஜானகியை கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரே மாதிரி குரலால் எனக்கு எல்லா பாடல்களும் ஒரே மாதிரி ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இசை அமைப்பிலும் ராஜாவின் முத்திரை அவ்வளவாக எனக்கு தெரியவில்லை (குரு, சிறைசாலை தவிர) கன்னடத்தில் நிறைய வித்தியாசமான பாடல்களை பார்க்க முடிகிறது. இது என் அபிப்பிராயம் மட்டுமே.

இன்று 'குலாபி' படத்தில் இருந்து ஒரு பாட்டு. 'கேளிசதே ப்ரேம வேதா'. ராஜா-எஸ்.பி.பி-சித்ரா குரலில். ஒரு தடவை கேட்டு தான் பாருங்களேன். ராஜாவின் தொடக்க குரல் அறுவடை நாள் பாடலை நினைவு படுத்தும். அருமையான மெலோடி பாட்டு.


காணவில்லை:

'பாரு பாரு பட்டணம் பாரு' இப்படி ஒரு படம் வந்ததாங்க. தெரிந்தவர்கள் சொல்லுங்க. கல்லூரி படிக்கும் போது ஊரில் உள்ள கடையில் கேசட் பதிந்து அடுக்கி வைத்திருப்பேன். ஒவ்வொரு கேசட்டுக்கும் கலெக்சனுக்கு ஏத்த மாதிரி தலைப்பு எழுதி வைத்திருப்பேன். அப்படி ஒரு கலெக்சனுக்கு 'யார் தூரிகை தந்த ஓவியம் - இளையராஜா' அப்படின்னு இந்த பாடலின் தொடக்கத்தை எழுதி வைத்திருப்பேன். ராஜாவின் தூரிகை தந்த ஓவியங்கள் தானே எல்லா பாடல்களும். அதிலும் இந்த பாடல் ரொம்ப அருமையான ஓவியம். என்னோட Favorite உமா ரமணன்-ம் எஸ்.பி.பியும் சேர்ந்து பாடும் ஒரு அருமையான பாட்டு. உமா ரமணன் குரலில் எப்போதும் எனக்கு ஒரு கிறக்கம் உண்டு :-) ரொம்ப வித்தியானமான கம்போசிங். வித்தியாசமான கிடார் இசை. சின்ன வயசில் இருந்தே என்னோட Favorite இந்த பாட்டு. உங்களுக்கு எப்படி?
Thursday, January 26, 2006

சின்ன புறா ஒன்று ( SPB - தனி ஆவர்த்தனம் - 2)

எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் -1 ல் நிலா அவர்கள் இப்படி கூறியிருந்தார்கள். "அடுத்த ஜென்மத்தில அவருக்கு மகளா பிறந்து அவர் பாடற தாலாட்டில தூங்கணும்னு பேராசை". இப்படி நிறைய பேரு ஆசைப்பட்டா அடுத்த ஜென்மத்துல அவரு எத்தனை பிள்ளை பெத்துக்க வேண்டிய வரும் :-). உண்மை தான். திறமையான பாடகர் என்பது வேறு. சங்கீதம் கற்றுக் கொள்ளலாம். குரல்? குரல் என்பது கடவுள் கொடுத்த வரம். அந்த வரம் எல்லோருக்கும் கிட்டுவது இல்லை. எஸ்.பி.பி வரம் வாங்கி வந்த ஒரு பாடகர். இந்த பதிவில் எஸ்.பி.பி பாடிய ராஜாவின் தொடக்க கால பாடல்கள் சில பார்க்கலாம். ( ராஜா தவிர மற்ற இசையமைப்பாளர்களை அடுத்த பதிவில் பார்த்துடலாம்).

முதல் பாடல். இதை ராஜாவின் சிம்பொனிக்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம். இசையை கவனித்து பார்த்தால் தெரியும். வயலின், ஹம்மிங் எல்லாமே அந்த காலத்திலேயே இவ்வளவு நுணுக்கமாக பயன்படுத்தியது ராஜாவாக தான் இருக்கும். 'சின்னப் புறா ஒன்று' பாட்டு. 'அன்பே சங்கீதா' படத்தில் இருந்து. ஆனால் படத்தில் பரிதாபமாக தேங்கா சீனீவாசன் பாடிக்கிட்டு இருப்பார் (இந்த பாட்டு தானே. இல்லன்னா சொல்லிடுங்க). SPB தனி ஆவர்த்தனம் என்று சொல்லியாச்சு. அதற்கு மறுபேச்சு உண்டோ :-). பாட்ட கேளுங்க.

அடுத்த பாட்டு 'பகலில் ஒரு இரவு'. எல்லோருக்கும் தெரிந்த பாட்டு தான். 'இளமை எனும் பூங்காற்றி' . ஹம்மிங் எல்லாமே கிட்டத்தட்ட சென்ற பாடலை போலவே இதிலும் கலக்கல்.

மூன்றாவதாக, 'வா பொன் மயிலே..நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது'. பூந்தளிர் படத்தில் இருந்து. பாட்டுல prelude ரொம்ப நல்லா இருக்கும்.

கடைசியா, ராஜாவின் ஆரம்ப பாடல்கள் சில M.S.V ஸ்டைலில் இருக்கும். ராஜாவா M.S.Vயா என்று எனக்கு நிறைய தடவை குழப்பம் வரும். அவை பொதுவாக சிவாஜி படத்தில் வரும் பாடல்களாக இருக்கும். அப்படி நான் ரொம்ப நாளா ராஜா பாட்டு இல்லன்னு நெனைச்சுக்கிட்டு இருந்த பாட்டு ஒன்று. 'கவரி மான்' படத்தில் இருந்து ஒரு அருமையான பாட்டு. குழந்தை பாட்டு. 'பூப்போலே உன் புன்னகையில்'. மற்ற மூன்று பாடல்களுக்கும் இந்த பாடலுக்கும் இசை அமைப்பில், இசை கருவிகளில், பாடும் விதத்தில் ரொம்பவே வித்தியாசம் இருக்கும். கேட்டு பாருங்கள்.

இன்னொரு விசயம். இந்த பதிவில் போட்ட நாலு பாட்டுமே ஒரே ஆண்டில் வெளி வந்த பாடல்கள். வருடம் 1979 ( நான் அப்போ ஸ்கூலுக்கே போகலையே :-). ஒரே வருசத்துல SPB-க்கு இத்தனை கலக்கல் தனி பாடல்களா :-)).

Saturday, January 21, 2006

நான் ஒன்று கேட்டால் தருவாயா!!

நம்ம தமிழ் படத்தில் காதல் ஹீரோக்களை மூன்று விதமாக பிரிக்கலாம். ஒன்று 'நீ காற்று நான் மரம். என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்" (தலையாட்டி தானே ஆகணும்) வகை. அதாவது ரெண்டு சைடும் ஓகே ஆன காதலர்கள். இன்னொன்னு 'இதயமே! இதயமே! உன் மௌனம் என்னை கொல்லுதே'..இது நம்ம முரளி டைப் காதல். பசங்க ஒரு தலை காதல். இந்த பதிவில் மூனாவது வகை ஒன்னு பார்க்க போறோம். அதான் 'மயிலே நீ போ! வேணாம் வீராப்பு' வகை. புரியலையா. அதாங்க நம்ம ஹீரோ பரம ஏழையா இருப்பார், இல்லன்னா குவாட்டர் அடிச்சிட்டு கைல அருவாளோட சுத்துற பொறுக்கியா இருப்பார். நம்ம ஹீரோயின் ஹோண்டா சிட்டில வர்ற கோடிஸ்வரியா இருப்பாங்க. அப்புறம் லவ்வு தான். ஹீரோ பெருந்தன்மையா 'நான் குப்பை. நீ வானம். லவ்வு பண்ணாலும் வெளங்காதடி' அப்படின்னு அட்வைஸ் பண்ணி பார்ப்பார். அப்புறம் இடைவேளையோட ஏதாவது சூழ்நிலையில ஹீரோ கவுந்திடுவார். எனக்கு இந்த மூனாவது வகை மாதிரி முரளிய வச்சி யாராவது படம் எடுக்க மாட்டாங்களான்னு ஆசை. பாவம் அவரு எவ்வளவு நாள் தான் பொண்ணு பின்னாடியே சுத்துவார்.

சரி சரி புராணம் எல்லாம் வேண்டாம். பாட்டுக்கு போய்டலாம். மூனாவது வகைல ரெண்டு பாட்டு இன்று. இந்த வகை பாடல்களில் பொருள் புகுந்து வெளையாடும். "வெண்ணிலவிலே உன்னை குடியமர்த்த தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே" என்று ஹீரே சொல்லுவார். அம்மணி "குடியிருக்கும் சின்ன குடிசையிலும் தேன்னிலவு தென்றலுடன் செல்வதில்லையோ' திருப்பி கொடுப்பாங்க. ரசித்து கேட்க வேண்டிய பாடல்கள் :-).

முதல் பாட்டு. ராஜா பாடிய பாடல். எதிர் பாட்டு ஜானகி. படம் 'மலையூர் மம்பட்டியான்'. ராஜா ரொம்ப அருமையாக பாடியிருப்பார். அதுவும் 'மனச தாள் போட்டு மயிலே நீ போ! வேணா வெளையாட்டு' வரியில் ரொம்பவே ராகம் நெளிந்து வரும். என்னை ரொம்ப கவர்ந்த இடம். நம்மை தாளம் போடவைக்கும் மெட்டு. கேட்டு ரசிக்க பாட்டு இங்கே.

போன பாட்டு கிராமம். இப்போ மாடர்ன். அதாங்க ரெண்டு பேரும் கல்லூரில படிக்கறாங்க. ரொம்ப அருமையான அரிய பாட்டு, இந்த படத்தில் எல்லா பாடல்களுமே ரொம்ப நல்லா இருக்கும். 'ராஜாவுக்கு டச் விட்டு போச்சுன்னு' மீடியா முதல் கொண்டு மக்கள் எல்லோரும் கத்திக்கொண்டிருந்த காலத்தில் வந்த படம். உங்களுக்கு டச் விட்டு போச்சுன்னா அவர் என்ன பண்ணுவார் :-). நமக்கு எதற்கு அந்த கதை. படம் இளைய ராஜாவின் 'இளைய ராகம்' . அருண் மொழியின் ஒரு சிறந்த பாடல். எதிர் பாட்டு இங்கே சித்ரா. முதல் சரணம் ரொம்ப அழகாக தாள வாத்தியங்கள் இல்லாமல், அமைதியாக கிட்டாரில் கொண்டு போயிருப்பார். ரொம்ப சூப்பராக இருக்கும். அதையே இரண்டாவது சரணத்தில் வித்தியாசமாக பீட்டோடு கொடுத்திருப்பார். அந்த கால கட்டத்தில் (அவர் சிம்பொனி இசை அமைத்து வந்தவுடன்) அவர் இப்படி சில பாடல்களில் வித்தியாசம் காட்டியிருப்பார். மீடியா எல்லாமும் வரிந்து கட்டிக்கொண்டு 'இசை ராஜாவாம். டைட்டிலில் போடுகிறார்கள்' என்று இப்படி நிறைய பாடல்களை அதல் பாதாளத்தில் தள்ளியது. ம்ம்ம்ம்ம்ம்...சரி சரி நான் வேற பொலம்ப ஆரம்பிச்சிட்டேன் பாட்ட கேளுங்க.
Wednesday, January 18, 2006

எஸ்.பி.பி ( தனி ஆவர்த்தனம் - 1)

இந்த பாடல் பதிவை ஒரு தொடராகவே கொண்டு போகிறேன். இசையமைப்பாளர்களில் ராஜா எனக்கு பிடித்த மாதிரி, பாடகர்களில் எஸ்.பி.பி (நிறைய பேருக்கு அப்படித்தானே). அவர் பாடிய தொடக்க பாடல்களில் இருந்து சமீபத்திய பாடல்கள் வரை இங்கே கேட்கலாம். தனி பாடல்கள் மட்டுமே. பொதுவாக ஒரு பாடகர் ரிடையர்ட் ஆகும் போது அடுத்த காலகட்டங்களில் நமக்கு ஒரு சிறந்த பாடகர்(கள்) கிடைப்பார்கள். இப்போதெல்லாம் எவரும் இந்த அளவுக்கு வருவதில்லை. அந்த காலங்கள் அவ்வளவு தானா?.

'பனி விழும் மலர்வனம்' பாட்டுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ராஜாவின் திறமையை பார்த்து ஆச்சரியபடுவதுண்டு. அத்தனை வாத்திய கருவிகளையும் இந்த பாடலில் கேட்கலாம். அத்தனையும் ரசிக்கும் படி இருக்கும். ட்ரம்ஸ் ஆகட்டும், கிடார் ஆகட்டும், தபேலா ஆகட்டும், வீணை ஆகட்டும் அத்தனையும் அருமை. அதை விட பாடல் முழுவதும் வரும் பேஸ் கிட்டாருக்காக கேட்டுக்கிட்டே இருக்கலாம். ரொம்ப வித்தியாசமான கம்போசிசன். இளையராஜா-வைரமுத்து இணையில் இன்னொரு வைரம்.எஸ்.பி.பி-யால் மட்டுமே சில பாடல்கள் பாட முடியும். அதில் ஒன்று இந்த பாடல்.

'தேவதை இளம் தேவி'. அடிக்கடி கேட்க முடியாத பாடல். இந்த பாடல் வெளியான போது ரோட்டோர கடைகளில் பதிந்து கேட்ட பாடல்.அப்போது அடிக்கடி ரேடியோவிலும் கேட்கலாம். 'ஆயிரம் நிலவே வா' படத்தில் இருந்து. நான் கேள்வி பட்டவரை கார்த்திக் இறந்து விட்டார் என்று அவருக்கு பதிலாக வேறு யாரையோ சமாதியாக்கி விடுவார்கள் (எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா). இவர் பேயாக அலைந்து கொண்டிருப்பார். படம் பார்த்தவர்கள் கதை சொல்லிட்டு போங்க. பாடலில் கவிதை அருமை. எஸ்.பி.பி குரல் அருமை. குரலிம் என்ன ஒரு உருக்கம், என்ன ஒரு ஏற்ற இறக்கம். இசை அருமை. ஹம்மிங் அருமை. மொத்தத்தில் அருமையான பாட்டுங்க. மிஸ் பண்ணிடாதீங்க.
Sunday, January 15, 2006

மனோ பாட்டு

மனோ. ராஜாவால் உருவாக்கி வளர்த்து விடப்பட்ட பாடகர். இவர் மற்ற பாடகர்களுக்கு ட்ராக் பாடிக்கொடுத்துக் கொண்டிருந்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ட்ராக் பாடுவது என்றால் ஒரு இசை அமைப்பாளர் ஒரு பாடலுக்கு வடிவம் கொடுக்கும் போது, அந்த பாடலை ஒரு சிறிய பாடகர் பாடி அதை அந்த பாடல் பாடவிருக்கும் பாடகருக்கு அனுப்புவார்கள். பாடகர் அந்த பாடலை கேட்டு, ரெக்கார்டிங் வரும்போது தயாராக வருவார். அப்படி ஒரு சிறிய பாடகராக ராஜாவிடம் இருந்த மனோவை 'அண்ணே அண்ணே..நீ என்ன சொன்னே' என்று பூவிலி வாசலிலே-வில் பாடவைத்தது ராஜா தான். அந்த பாடல் வெளியாகும் போது பாடகர் பெயர் 'நாகூர் பாபு" (மனோவின் நிஜ பெயர்). படத்தில் பார்த்தால் 'பிண்ணனி பாடகர்கள்' பட்டியலில் அப்படித் தான் வரும். (இப்போது என்னிடம் இருக்கும் குறுந்தட்டில் 'மனோ' என்று இருக்கிறது). அப்போது எஸ்.பி.பி-ஜானகி என்று இந்த ஜோடி கலக்கிக் கொண்டிருந்தது. சித்ராவிற்க்கு ஜோடிப்பாடகர் ஒன்று கொண்டு வந்து அதை எஸ்.பி.பி-ஜானகி போலவே கொண்டுவர ராஜா ஆசைப்பட்டார். மனோச்சித்ரா என்பது நன்றாக இருக்கும் என்று 'நாகூர் பாபு' என்பதை மனோ என்று மாற்றியது ராஜா தான்.

ராஜாவின் பாடல்கள் அனைத்துமே அருமை. அதில் மனோ மட்டும் விதிவிலக்கா என்ன?. எல்லா பாடல்களிலும் கொடுத்த வேலையை அலட்டாமல் தகுந்த உச்சரிப்புடன் ரொம்ப அழகாக பாடியிருப்பார் மனோ. அதை தவிர்த்து சில வித்தியாசமான பாடல்களை பாடிய பெருமையும் மனோவுக்கு உண்டு. அவற்றில் சில 'வேதாளம் வந்து நிக்குது' (சூரசம்ஹாரம்) "ஆயிரத்தில் நான் ஒருவன்" (இருவர்) "ஏய்! ஷப்பா..ஏய் ஷப்பா' (கர்ணா) போன்று சில பாடல்களில் வித்தியாசம் காட்டியிருப்பார்.

யோசித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட 20 க்கும் மேலாக பாடல்கள் சேர்ந்து விட்டது. ஒரே பதிவில் அத்தனையையும் போட முடியுமா?. அதனால் இந்த பதிவில் ஒரு ஐந்து பாடல்களை கொடுக்கிறேன்.

முதல் பாடல். மனோ தனித்து பாடிய பாடல். இந்த வகையில் ஏற்க்கனவே சில பாடல்கள் கொடுத்திருக்கிறேன். இன்று 'புதிய ராகம்' படத்தில் இருந்து 'ஓ! ஜனனி..என் ஸ்வரம் நீ'. தொடக்கம் முதல் முடியும் வரை ஒரே சீரான தாளம். நம்மையறியாமல் நம்மையும் பாட வைக்கும் ஒரு பாடல். பாடல் இங்கே.

போன பாட்டு போட்டி போட்டதில் இருந்து உஷா இந்த பாடலை முழுவதும் போடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் இந்த பாடலுக்கு நேரம் வந்திருக்கிறது. 'தங்கமனசுக்காரன்' படத்தில் இருந்து மனோ-ஜானகி ஜோடியில் 'பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு'. கிராமத்து இசையில் தொடங்கும் பல்லவி, சரணத்தில் ராஜாவின் விருப்ப தபேலாவிற்க்கு மாறுகிறது. பாடலில் சரணம் ரொம்பவே அழகாக இருக்கும். 'இந்த உடலுக்குள் வந்த உயிருக்குள் வந்து புகுந்தவளே' என்று மனோ ஆரம்பிக்கும் இடம் ரொம்பவே அழகு. பாட்டு கீழே

இப்போ மனோ-சித்ரா. ஒரு துள்ளல் பாட்டு. 'இரட்டை ரோஜா'வில் இருந்து 'சிறுவாணி ஆத்து தண்ணி'. குஷ்பு பாட்டு. கேயார் படங்களுக்கு ராஜாவின் இசை என்றுமே ஸ்பெசல் தான். வெறும் கதை மட்டும் ஒரு இசையமைப்பாளரிடம் இருந்து நல்ல இசை வாங்க போதாது, ஆட்களை பொருத்து என்பதை கேயார் படங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஆட்களை பொருத்தது என்று நான் சொல்வது, ஜால்ரா கோஸ்டி என்று அர்த்தம் அல்ல. ராஜாவிடம் உட்கார்ந்து நல்ல பாட்டு வாங்குவதற்க்கும் கொஞ்சம் ஞானம் வேண்டும். அதில் கமலுக்கு ஒரு தனி இடம் உண்டு. சமகாலத்தில் வெளியான 'விருமாண்டி'யையும் 'கொஞ்சி பேசலாமா' வையும் கேட்டாலே வித்தியாசம் புரியும். சரி இப்போ பாட்டு.

இப்போ மனோ-சுசிலா. இந்த ஜோடியில் ரெண்டு மூனு பாட்டு நல்ல பாட்டு இருக்கு. இந்த பாடலும் கிட்டத்தட்ட 'பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு' பாட்டு மாதிரி தான். கிராமத்து இசை. சரணத்தில் அப்படியே ராஜாவின் வழக்கமான தபேலாவிற்க்கு மாறும். பாட்ட கேட்டு ரசிக்க..

இறுதியாக, மனோ-சுவர்ணலதா ஜோடி பாடல் ஒன்று. 'மலைக்கோவில் வாசலிலே' (வீரா) போடலாமான்னு நெனைச்சேன். அது அடிக்கடி கேட்கிற பாடல் தானே. என் விருப்பமாகவும் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சோக பாட்டொன்னும் போடலாம் என்று இதை போடுகிறேன். "கண்மணி காதல் வாழ வேண்டும்' ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் இருந்து. சுமாராக போன படம். ராஜா பாக்கியராஜ்க்கு கடைசியாக இசை அமைத்த படம். அதற்கு அப்புறம் பாக்கியராஜ் ராஜாவிடம் கா சொல்லிட்டு மூன்று டப்பா படம் எடுத்து (வேட்டிய வரிஞ்சி கட்டு, ஞான பழம், அம்மா வந்தாச்சி) அத்தோடு ரிட்டையர்ட் ஆகிட்டார். இந்த மூனு படமும் ஊத்தியதில் ஒரு அல்ப சந்தோசம் எனக்கு (தப்பா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வராதீங்க :-). இந்த பாடலை எதிர்பார்த்து போன எனக்கு பெரிய ஏமாற்றம். இந்த பாட்டு படத்தில் க்ளைமாக்ஸ்சில் விட்டு விட்டு வரும். காட்சிக்கும் கதைக்கும் ஏற்ற அருமையான பாட்டு. அருமையான தபேலா. கேட்டு சொல்லுங்க.


இன்னும் நிறைய பாட்டு இருக்கிறது. வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Friday, January 13, 2006

தை பொங்கலும் வந்தது

காலையில் பொங்கலுக்கு நம்ம புராணம் ப்ளாக்ல பதிவு போட்டச்சி. ப்ளாக்ல எல்லாவற்றுக்கும் பாட்டு போட்டாச்சி. பொங்கலுக்கு பாட்டு போடலன்னா எப்படி?. குலவையோடு ஆரம்பிக்கும் இந்த மகாநதி பாடல் உங்களை இரண்டு நிமிடம் கிராமத்திற்க்கு அழைத்து செல்வது நிச்சயம்.

நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி.


அப்படியே நண்பர்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ராஜாவின் இசையோடு பொங்கலை கொண்டாடுங்கள்.

அன்புடன்,
சிவா.

Thursday, January 12, 2006

இன்றைய பாடல் - உங்கள் கருத்து

நண்பர்களே!

இன்றைய பாடலை கேட்டீர்களா?. புடிச்சுதா?. நேரம் இருந்தால், ஏதாவது இன்றைய பாடலை பற்றி சொல்லணும்னா இங்கே பின்னூட்டம் இடுங்கள். அந்த பாடலை பற்றி விவாதிக்கலாம்.

அன்புடன்,
சிவா.

Wednesday, January 11, 2006

கீதம்...சங்கீதம்..

என்னடா ப்ளாக் பேரையே தலைப்பா வச்சிருக்கான்னு பாக்கறீங்களா?. ப்ளாக் ஆரம்பிக்கும் போது என்ன பேர் வைக்கலாம்னு யோசிக்கும் போது இந்த பாட்டு தான் மனதில் வந்தது. அதையே ப்ளாக் பேராக வச்சாச்சி. சில பாடல்கள் தனிபதிவாக மட்டுமே போடுவேன். பத்தோடு பத்னொன்றாக போட மனசு வராது. அப்படி ஒரு பாடல். 'கொக்கரக்கோ' படத்தில் இருந்து 'கீதம்...சங்கீதம்'. அருமையான தாளம். எஸ்.பி.பி-யின் சிறந்த பாடல்களில் நிச்சயம் இடம் பெறும் பாடல். படம் சில நேரம் ராஜ் டி.வியிலோ, விஜய் டி.வியிலோ போடும் போது பார்க்காமல் விட்டு விட்டேன். இப்போ பார்க்கலாம்னு தேடு தேடுன்னு தேடி பார்த்தாலும் கிடைக்க மாட்டேங்குது. பாடலின் தொடக்கத்தில் பாடும் பெண் குரல் S.P.சைலஜா. கேட்டு மகிழுங்கள்.
Monday, January 09, 2006

இளையராஜா - 2

இரண்டாவது இளையராஜா பாடல் பதிவு. முதல் பதிவுல நிறைய பேர் நிறைய பாட்டு மிஸ் ஆகுதே அப்படின்னு சொல்லிருந்தீங்க. என்னால் முடிந்த அளவு இந்த பதிவில் பாடல் போடுகிறேன். உங்க பாட்டு வரவில்லை என்றால் கூறுங்கள். வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஒரு அறிதான பாடல். 'உதிரி பூக்கள்' படம் நான் பார்க்கவில்லை. ஆனால் ரொம்ப நல்ல படம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். மகேந்திரன் படமா?. தெரிந்தவர்கள் படத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். இந்த படத்தில் எல்லாமே பெண் குரல் பாட்டு தானே என்று நினைக்கிறீங்களா?. ராஜா பாடின ஒரு அருமையான தலைப்பு பாட்டு ஒன்னு இருக்கு. பாடிக்கிட்டே இருக்கலாம் இந்த பாட்ட. ரொம்ப சிம்பிளாக தோன்றும் ஒரு பாட்டு. ராஜாவின் தொடக்க கால குரல். அழகிய கண்ணே பாட்டின் prelude இந்த பாட்டிலும் prelude -ஆக வருவது நன்றாக இருக்கிறது. பாட்ட கேட்டு பாருங்க.

ஒரு துள்ளல் பாட்டு. முரளி தொடக்க படங்களில் இருந்தே ராஜா பாடினால் பாட்டு/படம் சூப்பர் ஹிட் என்று ஒரு சென்டிமெண்ட் இருந்தது. அது சமீபத்தில் வந்த பூமணி, பூந்தோட்டம் வரை தொடர்ந்தது. அப்படி ஒரு ஹிட் படத்தில் இருந்து ஒரு ஹிட் பாடல். "பூவிலங்கு" படத்தில் இருந்து "ஆத்தாடி பாவாட காத்தாட".

இந்த பாட்டு இந்த படத்திலா என்று கொஞ்சம் சந்தேகம் வரும். "தாய்க்கு ஒரு தாலாட்டு" படத்தில் இருந்து "காதலா! காதலா! கண்களால் எனை தீண்டு". இந்த படத்தில் சிவாஜி தான் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பர். ரொம்ப நல்ல படம். இந்த பாடல் அவரது வேலைகாரனாக (தத்துப்பிள்ளை??) வரும் பாண்டியனுக்கு வரும் பாடல் என்று நினைக்கிறேன். சித்ராவின் குரல் கூடுதல் கவர்ச்சி. இதுவும் "பூமாலையே தோள் சேரவா" போல மிக அருமையான பாடல். ஆனால் ஏனோ அந்த அளவுக்கு மக்களை எட்டவில்லை.

இறுதி பாடல், தங்கம் (Thangs) விருப்பமாகவும், என் விருப்பமாகவும் "வானம் பார்த்த கரிசக்காடு" பாட்டு. கஸ்தூரிராஜாவின் கரிசக்காட்டுபூவே படத்தில் இருந்து. பாட்டோட வரிகள், இசை, ராஜாவின் உருக்கும் குரல் என்று எல்லாமே இந்த பாடலின் சிறப்பம்சங்கள் தான். பாட்ட கேட்டு மகிழுங்க.
Friday, January 06, 2006

சிரிப்பு வருது..சிரிப்பு வருது

பொதுவா இந்த பசங்ககிட்ட பொண்ணு 'உங்கிட்ட எனக்கு காதல் இல்ல. கா' அப்படின்னு சொல்லிட்டுன்னு வச்சிக்கோங்க. பார்ட்டி நம்ம கிட்ட வந்து "மாப்பிள்ள! நான்னா அவளுக்கு உசுருடா! எல்லாம் அவ அப்பன் காரன் பண்ணுற வேல" அப்படின்னு பொலம்புவானுங்க. அப்பவும் அப்பா மேல பழிய போட்டுட்டு பெண்ண விட்டு கொடுக்க மாட்டானுவ. எல்லா இடத்துலயும் இப்படி இடி வாங்குறது பொண்ண பெத்த அப்பன் தான்.

சினிமாவிலும் அதே தான். 'ஏன் சோக கதைய கேளு தாய்குலமே" பாட்ட மறக்க முடியுமா. அப்படி ரெண்டு பாடல்கள் இந்த பதிவில்.

கஸ்தூரி ராஜாவின் படங்களில் ராஜா நாட்டுப்புற இசைக்கு ஒரு புது இலக்கணம் வகுத்தார் என்றே சொல்லலாம். சினிமாவில் நாட்டுப்புற பாடல்களை உச்சத்திற்க்கு கொண்டு சென்றார். 'ஒத்த ரூவா' (நாட்டுபுறப் பாட்டு) ஊரெல்லாம் கலக்கியதை மறந்திருக்க மாட்டோம். இன்னும் 'வீர தாலாட்டு" 'கரிசகாட்டு பூவே" "கும்மி பாட்டு" போன்ற கஸ்தூரி ராஜா படங்களுக்கு ராஜாவின் இசையே தனி. இன்று வீரதாலாட்டில் இருந்து "வாடிபட்டி மாப்பிள்ள எனக்கு". கங்கை அமரன்-சைலஜா குரல் இந்த பாட்டிற்க்கு செம பொருத்தம். நான் முதல் பத்தியில் சொல்லியது போல "கூடலுரு கோணக்கண்ணன், கூட நக தாரமுன்னு கொழப்பிப்புட்டன் எங்கப்பன் மனச! ஆச ராசாவே" என்று பொண்ணு கூற "எல்லா உங்கப்பன் பண்ணுண வேல தானா" என்று இவரு வரிக்கு வரி அப்பனை வாரு வாருன்னு வாருவதும், சிரித்துக்கொண்டே கேட்கலாம். நேற்று ராஜாவின் பாட்டு DVD ஒன்ன தட்டிவிடும் போது, இந்த பாட்டில் மனசு மாட்டிக்கிட்டு. செம ஆட்டம். அப்படியே இன்று பதிவா போட்டச்சு. ஆடாம பாட்ட கேளுங்க :-)

இப்போ சின்ன வயசுல பாடிக்கிட்டே திறிஞ்ச ஒரு பாட்டு. தூரல் நின்னு போச்சு படத்தில் இருந்து 'ஏன் சோக கதைய கேளு! தாய்குலமே". இதுவும் ஊரெல்லாம் ஒலித்த பாட்டு. இந்த படமே இரு கிளாசிகல் காமெடி படம். T.M.S நம்பியாருக்கு 'மன்னாதி மன்னனை எல்லாம் பார்த்தவன் நான்" என்று தொடங்கும் ஆரம்பமே கலக்கல். மலேசியா வாசுதேவனுக்கு ஏற்ற பாடல். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பாக்கியராஜ் ரொம்ப அழகாக காண்பித்திருப்பார் (அந்த பாட்டி பாக்யராஜிடம் 'மாப்ள மாப்ள' என்று சைடு சப்போட்டு கொடுக்கும் காட்சிகள் சூப்பர்). இவரும் "அப்பனோட பேச்ச மட்டும் பெரிசாக நெனைக்கிறா" என்று அப்பனை வம்புக்கு இழுக்கிறார். "மங்களத்த பெத்தனே! ஒம்மனச மாத்திக்கடா" என்று கோரிக்க வேற வைக்கிறார். சிரித்து மகிழ பாடல் இதோ,
Tuesday, January 03, 2006

குயில் பாட்டு

இந்த பதிவில் சில என் விருப்பங்கள். நிறைய பேருக்கு புடிக்க வாய்ப்பில்லை :-). இருந்தாலும் என் விருப்பமும் போடணும்லா. என்ன சொல்றிய?. சில மென்மையான அருமையான சின்ன(இப்போ பெரிய குயிலாயிட்டாங்க) குயில் சித்ரா பாடல்கள். சித்ரா பாட்டு என்றால் சொல்லிக்கிட்டே போகலாம். பூவே பூச்சூடவா, சிந்து பைரவி இப்படி நிறைய (கமெண்ட் கொடுக்கும் போது கண்டிப்பா பட்டியல் போடுவீங்க). இவை எல்லாம் தவிர்த்து சில அறிய பாடல்கள். அவ்வளவாக கேட்காத பாடல்கள் இவை.

1. "புதிய ராகம்" பாடல்கள் எல்லாமே மிகவும் அருமையான பாடல்கள். நடிகையின் பெயர் ஜெயசித்ரா என்று நினைக்கிறேன் ( பணக்காரன்ல ரஜினிக்கு அம்மாவா வருவாங்களே). அவுங்களு ரொம்ப லேட்டா ஹீரோயினா நடிக்கணும் என்று வந்த ஆசையின் பயனே "புதிய ராகம்". ரகுமான் தான் ஹிரோ. இந்த படத்தை பார்க்க மறைந்த ராஜீவ் காந்திய வேற கூப்பிட்டதாக சொல்லிருந்தாங்க (அரசியல் செல்வாக்கு அதிகமோ?). படத்தின் மிக பெரிய புண்ணியம் ராஜாவின் இசை. சில பாடல்கள் கேட்க கேட்க போர் அடிப்பது மாதிரி தோன்றும். "புதிய ராகம்" பாடல்கள் எனக்கு அப்படி இல்லை. தினமும் கேட்பேன். கேட்டுக்கொண்டே இருக்கிறேன். நீங்களும் கேளுங்க.

2. ஒரு கிராமத்து குயிலின் பாட்டு. எங்க ஊரு காதல பத்தி என்ன நெனைக்கிற. இந்த குயில் பதில் சொல்கிறது. சித்ராவுக்கென்றே போட்ட பாட்டு போல. புது பாட்டு படத்தில் இருந்து.

3. 'சின்னப்பதாஸ்'. சத்யராஜ்-ராதா நடித்த படம். சாதா மசாலா படம். 'பாடும் பக்த மீரா' கேட்டிருக்கீங்களா?. இந்த படத்துல இன்னொரு அருமையான பாட்டு 'வானம் தொடாத மேகம். பாட்டு இங்கே.

4. 'இரவின் மடியில்' என்ற தலைப்பில் போட வேண்டிய பாட்டு இது. அமைதியோ அமைதி. எங்கேயுமே ஓங்கி ஒலிக்காத இசை. 'நினைவு சின்னம்' படத்தில் இருந்து. ராஜாவின் ஹம்மிங் நல்லா இருக்கு.


சூப்பர் டூப்பர் ஹிட் எல்லாம் எங்கேன்னு கேட்க கூடாது :-). வரும் பதிவுகளில் வரும். இப்போ கேட்ட பாட்டெல்லாம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

( போட்டி எண்-4 கேள்வி 1 க்கு ஒரு சின்ன க்ளூ. அது ஒரு முரளி படம். விடை அடுத்த பதிவில் வரும் :-)).

Monday, January 02, 2006

நேயர் விருப்பம்- 5 & போட்டி எண் - 4

( போட்டி எண்-4 கீழே)

புது வருசம் எல்லாம் நல்லா கொண்டாடுனீங்களா?. மீண்டும் நேயர் விருப்பத்தில் சில ராஜா பாடல்கள் ரசிக்கலாம். பாடல் கேட்டதற்க்கு நன்றி. முதல் பாடல், நண்பர் முத்துகுமரன் அமீரகத்தில் (துபாய்) இருந்து 'இளையராஜா' பதிவில் 'எனக்கு புடிச்ச ராஜா பாட்ட கண்டுபுடிங்க' பாப்போம் என்று ஒரு குவிஸ் கொடுத்தார். குவிஸ் போடுற எனக்கே குவிஸ் போட்டுட்டு போய்ட்டார். "ராஜா தான் எல்லாமே. ஆனா படத்தில் ராஜா கெடையாது" என்று சொன்னார். ஐயா! எமக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும். :-). சரின்னு அவரே பதில் சொல்லிட்டார். "இதயம் ஒரு கோவில்" இதயக் கோவிலில் இருந்து. ராஜா பாடியது. இப்போ..

அடுத்து, கீதாவின் விருப்பப் பாடல். பவித்ரன் என்று ஒரு இயக்குனர் இருந்தார். சரத்குமாரை வைத்து நிறைய படம் செய்திருப்பார் (வசந்தகால பறவைகள், சூரியன், ஐ லவ் இந்தியா). ரெண்டு பேருக்குமே கொஞ்சம் இசை ஞானம் அதிகம். இருவர் படங்களிலுமே அவ்வளவாக ராஜா இசையை பார்க்க முடியாது. அப்படி அபூர்வமாம வந்தது தன் 'ஐ லவ் இந்தியா". ராஜா ரொம்ப அருமையாக இசை அமைத்திருப்பார். "எங்கிருந்தோ என்னை" "காற்று பூவை பார்த்து" "குறுக்கு பாதையிலே" அப்புறம் "அடி ஆடி வரும் பல்லாக்கு". தீவிரவாதிகள் சரத்தின் தங்கையை அவர் கண் முன்னாடி காரில் இருந்து இறக்கி விட்டு ஓட விட்டு சுடுவார்கள். தேசிய கீதம் ஓடிக் கொண்டிருப்பதால், சரத் அட்டெண்சனில் இதை பார்த்து கொண்டிருப்பார். இப்படி நெறைய புல்லறிக்கும் காட்சியினால் படம் ஊத்திக் கொண்டது :-). கீதாவின் விருப்பமாக அடி ஆடி வரும் பல்லாக்கு. "ஜிங்கு ஜிங்கு ஜிக்கு ஜிய்யாலே" தாளம் போட்டுக்கிட்டே கேளுங்க.

அதே காலத்தில் ராஜா இதே போல இன்னொரு பாட்டும் கலக்கலாக போட்டிருந்தார். அது "விளக்கு வைப்போம்" ஆத்மாவில் இருந்து. அதையும் கேட்டு ஒரு ஆட்டம் போடுங்கள். இரண்டுமே S.ஜானகி பாடியது தான்.

மூன்றாவதாக, அக்கா மதுமிதா முதல் தடவையா "ஏண்டே! தென்பாண்டி சீமையிலே பாட்டு போடாம என்ன இளையராஜா பதிவு போடுற" என்று நம்ம போன பதிவில் சொல்லிருந்தாங்க. அக்காவின் விருப்பமாக இதோ 'தென்பாண்டி சீமையிலே" இளையராஜா ஆரம்பித்து வைக்க, கமல் தொடருவார். இது எப்படி பட்ட ஹிட் என்று சொல்ல தேவையில்லை. பாட்டு இதோ,

கடைசியாக, உஷா அக்காவின் விருப்பம். ஒரு பக்தி பாடல். "குரு ரமண கீதம்" ஆல்பத்தில் இருந்து "எங்கே சென்றாலும்". இது ஒரு டூயர் பாட்டுக்கு தான் சரியான தாளம். அதனால் தான் என்னவோ ராஜா இதை 'பொன்முடிபுழயோரத்" படத்தில் இதையே வைத்து கலக்கலாக ஒரு பாட்ட போட்டிருப்பார். ஏனோ! இதை பக்தி பாடலாக எடுத்து கொள்ள முடியவில்லை. சினிமா பாட்டு போல தான் இருக்கிறது. பாட்டு இதோ.

இதோ ஒரு கலக்கல் மலையாள பாட்டு. பக்தி பாட்டை ராஜா எப்படி டூயட் பாட்டாய் மாற்றி விட்டார் பாருங்கள். இது கேரளாவில் சமீபத்தில் பட்டையை கிளப்பிய பாட்டு. 'பொன்முடிபுழயோரத்" தில் இருந்து "ஒரு சிறி கண்டால்"


போட்டி எண் - 4:

கேள்வி கேட்டு நாளாச்சில்லா? அதான் இன்று போட்டாச்சு. இன்று Ludes எல்லாம் வேண்டாம். எளிதான பாட்டு ரெண்டு. பாட்ட கேளுங்க. பாட்டோட மொத வரி, பாட்டு என்ன படம் என்று சொல்லுங்க. சீக்கிரம் சொல்லுங்க, எளிது தான்.

2. S.P.Bக்கு அலம்பல் மன்னன் என்று ஒரு பட்டம் கொடுக்கலாம். நெனைச்சா ஹை பிச்-ல பாடுறதும், டக்குன்னு லோ பிச்-ல வருவதும், சிரிப்பதும். அடடா! கேட்டு பாட்ட கண்டு பிடிங்க. படமும் என்னன்னு சொல்லிறணும்.