கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, June 11, 2006

விடை பெறுகிறேன்.

நண்பர்களே! விடை பெறுகிறேன். என்னடா பதிவு தலைப்பு என்று நெனைச்சிறாதீங்க. கொஞ்ச நாள் இந்த ப்ளாக் உலகத்தில் இருந்து விடுப்பில் போய்ட்டு வரலாம் என்று தோன்றியது. அது தான் இந்த 'விடை பெறுகிறேன்'. காரணம் ஒன்றும் பெரிசு இல்லை.

ரொம்ப நாளைக்கு முன்னாடி என் குரு (அப்படி தான் சொல்வதுண்டு :-) CSR எங்கள் இளையராஜா யாஹு குழுமத்தில் இசை பற்றி சில பாடம் நடத்தினார். என் மண்டையில் ஒன்றும் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். ரொம்ப ஆர்வம் முத்தி போய் மட மடன்னு கடைக்கு ஓடிப்போய் ஒரு யமஹா கீ-போர்ட தூக்கிட்டு வந்து ( Yamaha PSR-275) ஒரு மூனு மாசம் தட்டு தட்டுன்னு தட்டிக்கிட்டு இருந்தேன். (ஒன்னும் தேறலைன்னாலும் ஒரு ஆசை..ஒரு முயற்சி தானே :-)) இப்போ ஒரு வருடமா அந்த கீ-போர்ட் அப்படியே கெடக்குது. சரி அதை மறுபடி எடுத்து கொடுமை படுத்தலாம் என்று ஒரு ஆசை..

அப்புறம் CSR இப்போ மறுபடி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு Westen Classical Music பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டார். சரி! போன தடவை தேறாம போய்ட்டாலும் மறுபடி படிச்சு பார்க்கலாமே என்று இன்னொரு ஆசை...

எதுக்கும் சம்பந்தம் இல்லாம ஒன்னு. ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கலாம்னு தேடினப்போ இந்த கேமிரா கையில் மாட்டியது. SONY DSC-H2. அப்படியே இனையத்தில் தேடிய போது இந்த கேமராவில் எடுக்கப் பட்ட சில படங்கள் கிடைத்தது. மனசுக்குள் இன்னொரு ஆசை வந்துடுச்சு. நாமும் கொஞ்சம் Photography கத்துக்க முயற்சி பண்ணலாமா என்று. அதையும் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா..

இப்படி நிறைய பேராசைகள். இதுக்கெல்லாம் கொஞ்சம் நேரம் தேவை படுகிறது. அதான் கொஞ்ச நாள் இந்த ப்ளாக் வேலைகளில் இருந்து தள்ளி இருக்கலாம் என்று முடிவு செய்தேன்.( போடே..ரொம்ப தான் பில்ட் அப்பு...ஹி ஹி ஹி :-)).

அதுக்கு முன்னாடி உங்களிடம் சில வார்த்தைகள்.

ராஜா என்றால் எனக்கு ரொம்பவே கிறுக்கு. அவர் போட்டோவை வெட்டி ஒட்டி சந்தோச படுவதில் இருந்து, தியேட்டரில் அவர் பெயர் போடும் போது விசில் அடித்து சந்தோச படும் அளவுக்கு ரசிக்கும் ஒரு சராசரி ரசிகன். பாட்டுன்னா ராஜா இசை அமைக்கிறார். ரெண்டு பேர் பாடறாங்க. இதுக்கு மேல இசை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. இப்படி சரக்கே இல்லாம, பாட்டு ப்ளாக் ஆரம்பிக்கும் ஆசை ஏன் வந்தது?

பொதுவாகவே என் ராசியோ என்னவோ என் நட்பு வட்டத்துக்குள் இசையை பற்றியோ, ராஜாவை பற்றியோ, ஒரு சராசரி பாடலை பற்றி கூட ஆர்வத்துடன் பேச நண்பர்கள் கிடையாது. அப்போது கிடைத்தது தான் இந்த ப்ளாக். சரி என்று ஆர்வ கோளாறில் ஆரம்பிச்சு 8 மாசம் ஓட்டியாச்சு. எனக்கு மனசுல என்ன தோனிச்சோ, ராஜா பற்றி, இசை பற்றி பேச ஒரு நண்பன் கிடைத்தால் என்ன பேசுவேனோ, அத்தனையையும் உளறி கொட்டியாச்சு.

எனது நண்பர்களாக, இது வரை அனைத்து பதிவையும் ஆர்வமுடன் கேட்டு என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் கோடி நன்றிகள். ரொம்பவே சந்தோசமா திருப்தியா என் ஆசையை நிறைவேற்றியது நீங்கள் தான். உங்களுக்கு நேரம் இருந்தால், ஏதாவது சொல்லணும்னா gsivaraja@gmail.com க்கு மடல் அனுப்புங்க. சந்தோசமா பதில் அனுப்புகிறேன்.

இதுவரை எத்தனை நண்பர்கள். தவறாமல் எனக்கு ஊக்கம் கொடுத்த நண்பர்கள் ஏராளம். நன்றி நண்பர்களே. நிறைய பேருக்கு கமெண்ட் கொடுக்க நேரம் இருப்பதில்லை. 'நான் உங்கள் ப்ளாக்கை தவறாம படிப்பேன். இப்போது தான் கமெண்ட் கொடுக்கிறேன்' என்று நிறைய நண்பர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கும், படித்து விட்டு, பாடலை கேட்டு விட்டு இது வரை கமெண்ட் கொடுக்க நேரம் இல்லாமல் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா திரும்பி வருவேன். அப்பாடான்னு சொல்லிட்டு போய்றாதிய..என்ன :-)

என்றும் அன்புடன்,
சிவா.

-----

CSR ( CSRamasami) எங்கள் யாஹு குழுமத்தில் ஒரு மூத்த உறுப்பினர். தன் நேரத்தை எல்லாம் செலவிட்டு எங்களுக்கு ஒரு மூன்று மாதம் இசை வகுப்புகள் எடுத்தார். இப்போது அந்த சேவையை ப்ளாக் மூலமாக செய்து வருகிறார். இங்கே சென்று பாருங்களேன்.

இளையராஜாவுக்கு தனியாக கடிதம் போட்டு ஒவ்வொரு பாடலையும் பற்றி இசை விமர்சனம் கொடுத்து, ராஜாவும் மூன்று பக்கம் பதில் விளக்கம் கொடுத்து கடிதம் எழுதுவார். 'நான் இன்று டெல்லி செல்கிறேன். 3 நாளில் வந்து விடுவேன்' என்று கடிதத்தில் ராஜா கூறி செல்லும் அளவுக்கு அவரிடம் கடித தொடர்பில் இருந்த ஒரு ரசிகர் தான் CSR. ஆச்சரியமா இருக்கு இல்லையா. இங்கே போய் படிச்சி பாருங்க.


சரி..வரட்டாடே...

Tuesday, June 06, 2006

பாடாய் படுத்தும் காதல் (கட்டம்-4)

கட்டம் 4. காதலை சொல்லி அங்கேயும் கிரீன் சிக்னல் கெடைச்சா நேரே டூயட்டு தான். அந்த கட்டத்தை அப்படியே விட்டுடலாம் (நம்ம ஊருல டூயட்டுக்கா பஞ்சம். படத்துல 3 பாட்டு டூயட் தான்). 90 களில் இயக்குனர் வாசு, கேயார் எல்லாம் கொடிகட்டி பறந்த போது பாதி படங்களில் இடைவேளை விடும் காட்சி ஒரே மாதிரி தான் இருக்கும். பையனும் பொண்ணும் முதலில் அடிச்சிக்குங்க, அப்புறம் காதல் மலர்ந்து வரும் வேளையில் 'ஏ! எங்கய்யா நாட்டாம, உங்க ஐயா பகையாளியாச்சே' அப்படின்னு யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிச்சு போட்டு, அப்படியே ரெண்டு பேரும் பிரிகிற மாதிரி ஒரு காட்சி அமைத்து 'இடை வேளை' அப்படின்னு போட்டுடுவாங்க.

அப்புறம் ஊருக்கு நடுவுல ஒரு கோட்டைய கட்டி ரெண்டு பக்கமும் அருவா கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கும். அப்புறம் இதுக ரெண்டும் சோகமா ரெண்டு பாட்டு பாடி, ரெண்டு கூட்டமும் மாத்தி மாத்தி வெட்டிக்கிட்டு, ரெண்டும் சேர்வதற்கும் நம்மள படுத்தி எடுத்திருவாங்க. அப்படி பிரிவு பாடல்கள் தான் இன்று. கட்டம்-4. பாடலுக்கு போகலாமா.


1. மணிரத்னம், பாரதிராஜா, பாசில் என்று ராஜாவின் கூட்டணியில் கலக்கிய நல்ல இயக்குனர்கள் தவிர சில மசாலா இயக்குனர்களும் ராஜாவை விட்டு விலகியதில்லை. அப்படி அருமையா கூட்டணி அமைந்த ஒன்று கேயார்-இளையராஜா. கல்லூரி காதல் கதைகள் பெரும்பாலும் வெற்றி படங்கள் தான். அதில் எங்க கிராமம் வரை வந்து கலக்கிய ஒரு படம் கேயாரின் இயக்கத்தில் 'ஈரமான ரோஜாவே'. கடைசியாக கேயாரின் இயக்கத்தில் ராஜாவின் இசையில் வந்த ஒரு அருமையான படம் (இசை மட்டும்) 'காதல் ரோஜாவே'. படம் ரொம்ப தாமதமாக வந்து நேரே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. 'இளவேனில் இது வைகாசி மாதம்' அழகான பாடல். காலேஜ் படிக்கும் போது கேசட் வாங்கி வைத்திருந்தேன். இப்போ காணாம போய்விட்டது :-(. சரி. இப்போ பாட்டுக்கு வர்றேன்.

'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு'. யேசுதாஸ்-ஜானகி குரலில், ராஜாவின் கலக்கல் இசை. யேசுதாஸ் பாடலை தொடங்கும் போது 'என் ஜீவன் பாடுது' பாடலோ என்று லேசாக சந்தேகம் வந்து செல்லும். பாடல் இங்கே.



2. இப்போ எஸ்.பி.பி. சில படங்களுக்கு ராஜா ஏன் இந்த மாதிரி இசையை கொடுத்தார். அப்படி அந்த படத்தில் என்ன தான் இருந்தது? அப்புறம் படம் ஏன் காத்து மாதிரி வந்ததும் தெரியாம போனதும் தெரியாம போச்சு? இப்படி நிறைய கேள்விகளை எழுப்பும் ஒரு படம் 'இன்னிசை மழை' (பேரு சூப்பரா வச்சிருக்காங்க. நிஜமாகவே அத்தனையும் இன்னிசை மழை தான்). 'மங்கை நீ மாங்கனி' என்று ராஜாவின் அழகான பாடல் ஒன்று உண்டு. இங்கே கொடுக்கப் போவது 'வா வா கண்மணி..வாசல் தேடிவா'. ராஜாவின் ட்ரம்ஸ் பாடல்களில் இதுவும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். அதுவும் பாடலின் முதல் ஒரு நிமிடம். அப்பாடா...இப்படி நமக்கு வாசிக்க தெரிஞ்சா எப்படி இருக்கும். போட்டு பின்னு பின்னுன்னு பின்னறாங்கப்பா. மீண்டும் ஜானகி. S.P.B -யும் ஜானகியும் பாடுவது நம் கண் முன்னாடியே அப்படியே காட்சி வந்து நிற்கும்.



3. யேசுதாஸ், எஸ்.பி.பி...அடுத்தது..அதே..மனோ. மனோ என்றால் கூட பாடுவது சித்ராவாக தான் இருக்க வேண்டும் (எஸ்.பி.பி-ஜானகி கூட்டணி மாதிரியே ஒரு கூட்டணி கொண்டுவர நினைத்த ராஜா, மனோவுக்கு பெயர் வைக்கும் போது மனோச்சித்ரா என்றால் நன்றாக இருக்கிறது என்று மனோ என்று பெயர் சூட்டியதாக சொல்வார்கள்). 'பாண்டி துரை'. பிரபு-குஷ்பு ஜோடியில் வந்த படம். வழக்கமான ஒரே அச்சில் வார்த்த கொலுக்கட்டை. 'கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா' 'மல்லியே சின்ன முல்லையே' என்று இரு கலக்கல் பாடல்கள் உண்டு. நம்ம தலைப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு அருமையான பாடல் 'என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே'. சித்ராவின் non-metalic குரல் கேட்கவே எவ்வளவு இதமாக இருக்கிறது. இதமான தபேலா. அழகான வரிகள். எனக்கு புடிக்கும். உங்களுக்கு.



4. மீண்டும் யேசுதாஸ். கூட பாடும் சுவர்ணலதா குரலை கேட்கும் போது பாடுகிறாரா, இல்லை ஏதாவது வாத்தியம் வாசிக்கிறாரா என்று தோன்றும். அப்படி ஒரு வித்தியாசமான குரல். நடு ராத்திரி இந்த மாதிரி பாடலா போட்டுவிட்டு கேட்டுக்கிட்டு இருந்தா அந்த சொகமே தனி. 'இது நம்ம பூமி' படத்தில் இருந்து 'ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா'. பல்லவியில் ஒரு வேகத்தில் (மெதுவாக) செல்லும் பாடல் சரணத்தில் ஜிவ்வென்று ஒரு கட்டத்திற்கு தாவும் (ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ..விரல் ஆணையால்..ஹோ')..கேட்க ரொம்ப நல்லா இருக்கும்.



5. மீண்டும் கேயார். இந்த பதிவில் கிட்டத்தட்ட எல்லாமே தபேலா பாடல்கள் தான். ஆனால் இந்த பாடல் ரொம்ப வித்தியாசமான கம்போசிங். ரொம்ப குறைவான இசை. ஓங்கி ஒலிக்கும் ஹம்மிங். நம்மை எங்கோ அழைத்து செல்வது நிச்சயம். சுவர்ணலதாவோடு இணைவது எஸ்.பி.பி. 'வனஜா கிரிஜா' படத்தில் இருந்து 'உன்னை எதிர்ப் பார்த்தேன்'. பாடல் முழுவதும் வரும் கோரஸ் அழகோ அழகு. எஸ்.பி.பி பேஸ் வாய்சில் பாடியிருப்பதையும் ரசிக்கலாம். எல்லாத்துக்கும் மேல ராஜாவின் இசையை ரசிக்க மறந்திடாதிங்க..பாட்ட கேட்கலாமா.



6. மனோ-சித்ரா ஜோடி மறுபடியும். 'ராசையா' படத்தில் இருந்து 'ஒன்ன நெனைச்சி உருகும் வண்ணக் கிளி'. இந்த பாடல் படத்தில் இல்லை என்று நினைக்கிறேன். தொடக்கம் முதல் முடியும் வரை ஒரே சீராக செல்லும் தபேலா நன்றாக இருக்கும். மனோ-சித்ரா பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. பாடல் இதோ.



7. இறுதியா யேசுதாஸ்-ஜானகி கூட்டணியோடு முடிச்சிக்கலாம். 'பெரியவீட்டுப் பண்ணக்காரன்' கார்த்திக்-கனகா நடித்த படம். சோக பாடல்களுக்கே உரிய உருக்கம் நம்மை பாடலுக்குள் இழுத்து செல்வது உண்மை.




இந்த பதிவில் எல்லா பாடல்களுமே ஒரே மாதிரி தோன்றும். சட்டுன்னு அவசரகதியில் கேட்காக, நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்னா ஓட விட்டு அமைதியா கேட்டு பாருங்க. ராஜா நம் மனசுக்குள் மயிலிறகை வைத்து லேசாக வருடி செல்வது நிஜம்.