கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, April 30, 2006

மழை வருது..மழை வருது..

அவன் அவன் கத்திரி வெயிலில் காய்ந்து கெடக்கறான்..எங்கடா மழை வருதுன்னு பாக்கறீங்களா..நம்ம ஊர்ல மழை வருதுன்னு வானிலை அறிவிப்பு கொடுத்தாலே, வருண பகவான் திரும்பி பாக்காம ஓடிருவார். நாஞ்சொல்லியா வரப்போறார். இது மழை பாடல் பற்றிய இசை மழை.

ரெண்டு நாளா வெளியே எங்கேயும் போக முடியலீங்க. விடாது அடிக்கும் அடை மழை இங்கே..(அமெரிக்காவில்). அப்படியே சரி நாமும் ரெண்டு மழை பாட்டு போடலாம்னு தான் ஆரம்பிச்சாச்சு.

மழை என்றாலே என்ன ஒரு உற்சாகம். மழை வரப்போவதற்கு முன் வரும் அந்த மண் வாசனை. மழையில் நனைவது தான் என்ன ஒரு ஆனந்தம். எனக்கு மழையில் நனைவதுன்னா உயிர். நல்லா சொட்ட சொட்ட நனைஞ்சிட்டு வீட்டுக்கு போனவுடன், வாசலிலேயே டவலோடு காத்துக்கிட்டு இருக்கிற அம்மாக்கிட்ட ஒரு திட்டு கெடைக்குமே (இப்போ பொண்டாட்டிக்கிட்டட :-)). அதுவும் சுகம் தான். அதிலும் சைக்கிளில் போகும் போது மழையில் மாட்டிக்கிட்டா ஜாலி தான். ஏன்னா குடை பிடிக்க முடியாது. அந்த சாக்கில நல்லா நனையலாம். தலையெல்லாம் நனைஞ்சி மூஞ்செல்லாம் தண்ணி தெரிக்க, அப்படியே துடைச்சிக்கிட்டு, ஓடுற மழை நீரில் சைக்கிள் ஓட்டும் சுகம் கோடி கொடுத்தாலும் கிடைக்குமா.ம்ம்ம்..

இதெல்லாம் தெரியாத சில பயலுவ, சின்னதா ஒரு நாலு துளி விழுறதுக்கு முன்னாடியே குடையை புடிச்சி வரப்போற மழையையும் வெரட்டி விட்டுடுவானுங்க. இங்கே பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது சின்ன சின்ன தூறல் விழ குடை புடிக்காமல் அப்படியே அன்னாந்து பார்த்துக்கிட்டே நிற்பேன் (இடி விழாம இருக்கக் கடவது). சுகமோ சுகம்.

கல்லூரி முடிக்கும் வரை நெனைச்சா (வருண பகவான் மனசு வச்சா) சொட்ட சொட்ட நனைச்சுக்கிறது. வேலைக்கு சேர்ந்தவுடம் கைல நாலு காசு வந்தது. பர்ஸ் என்று ஒன்று பைக்குள் தொற்றிக்கொண்டது. அதற்கும் லைசன்ஸ், கிரெட் கார்டு என்று சில சமாசாரங்கள். கனத்த மழை என்றால் நனைய முடிவதில்லை. ஐயோ நனைஞ்சிருமேன்னு ஓட வேண்டிய இருக்கு :-)) வாழ்க்கை வசதி பெருக பெருக நல்ல நல்ல சந்தோசங்களை காவு கொடுக்க வேண்டியதா போகுது..ம்ம்..சரி சரி! பாட்டுக்கு போகலாம்

மழையில் பாடுற பாட்டு நிறைய இருக்கு. நம்ம சினிமாவுல ஹீரோயின மழைல நனைய விடுறதே பாதி டைரக்டர்களுக்கு வேலை. அதில் உருப்படியா ஒரு மூன்று பாடல்களை கொடுக்கிறேன்.

முதலில் 'புன்னகை மன்னன்' படத்தில் இருந்து 'வான் மேகம்..பூப்பூவாய் தூவும்'. ராஜாவே இந்த அளவுக்கு ரொம்ப அழகாக ட்ரம்ஸ்-ஐ பயன் படுத்தி இருப்பது சில பாடல்களுக்கு தான். இந்த பதில் வரும் மூன்று பாடல்களுக்கும் இது பொருந்தும். பாடல் நமக்கும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும். சித்ராவின் அழகான குரலில் பாடல் இதோ.



இரண்டாவதாக, மீண்டும் ரேவதி பாடல் தான் (திரையில் டீசண்டா மழையில் நனைந்த ஒரே நடிகை இவங்களா தான் இருக்கும்). மௌனராகத்தில் இருந்து 'ஓஹோ..மேகம் வந்ததோ'. இந்த பாடலுக்கு ட்ரம்ஸ் வாசித்தவர் என்னமா Enjoy பண்ணி வாசித்திருப்பார் (குறிப்பா 'பூக்கள் மேல் நீர் துளிகள் வெண்பாக்கள் பாடாதோ' முடிக்கும் போது). இதுவும் ராஜாவும் அனைத்து வித்தைகளையும் ரசித்துக்கேட்க கூடிய பாடல். இந்த முறை ரேவதிக்கு பாடுவது எஸ்.ஜானகி.



அது என்ன..பொண்ணுங்க மட்டும் தான் மழையில் நனைஞ்சிக்கிட்டே பாடுவாங்களா?. இப்போ நம்ம ஹீரோ பாடும் ஒரு கலக்கல் பாடல். என்ன பாட்டு சொல்லுங்க..அதே தான்..'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு'. மழை சத்தத்தில் ஆரம்பிக்கும் Prelude..அப்படியே இடி சத்தம் வந்து அப்படியே ஒரு ட்ரம்ஸ்க்கு தாவும். அருமை. பல்லவியில் எஸ்.பி.பி கூடவே பாடி வரும் கிடாரின் அழகை பற்றி நான் சொல்லாம போனா அடுக்குமா. கமலின் ஆட்டமும், எஸ்.பி.பியின் உற்சாகமும் நாமும் மேடையில் ஆடுவதை போல ஒரு உணர்வை கொடுக்கும். ராஜாவின் 100% அக்மார்க் இசை மழை இதோ..


Tuesday, April 25, 2006

பாடாய் படுத்தும் காதல் (கட்டம்-2)

'என்னை தாலாட்ட வருவாளா' என்று பாடியாச்சு. அவள் வருவாளா? வர மாட்டாளான்னு தெரியணும்லா. அது தாங்க அடுத்த கட்டம். லவ்வ சொல்றது. இது தாங்க ரொம்ப சோதனையான கட்டம். இத தாண்டுறதுக்கே சில பயப்புள்ளைங்களுக்கு ரெண்டு மூனு வருசம் ஆயிரும். சிலதுங்களுக்கு இந்த கட்டமே கண்டமா போய் இறுதி கட்டமா போய்டும்.

காதலை 'அலைபாயுதே' மாதவன் மாதிரி 'நீ ரொம்ப அழகா இருக்க. லவ் பண்ணிடுவோமோன்னு பயமா இருக்கு' அப்படின்னு வழிஞ்சிக்கிட்டே சொல்லலாம். ஆனா இதுக்கு உலக மகா தைரியமும், எருமையை மாதிரி ரொம்ப கொஞ்சமா சொரணை மட்டும் இருக்கணும். இல்லன்னா வேலைக்காகாது.

Love proposal-க்கு நம்ம முரளிய விட்டா வேற ஆளு யாரு இருக்கா. டைட்டில் போட ஆரம்பிக்கும் போது ஒரு லெட்டர எழுதி சட்டை பைக்குள்ள வைப்பார். க்ளைமாக்ஸ் வரைக்கும் அத பைக்குள்ளயே வச்சு, நம்ம பொறுமையை எல்லாம் சோதித்து, அப்புறம் க்ளைமாக்ஸ்ல லெட்டர கொடுக்க போகும் போது அது ஆடி மாசம் காத்துல அடிச்சிக்கிட்டு போய்டும்..ம்ம்ம்..நிஜத்திலும் இப்படி நிறைய பேர பார்க்கலாம்.

இன்னொரு எளிதான வழி, நம்மக்கிட்ட நல்லா பேசுற பொண்ணுன்னா, பேசிக்கிட்டே இருக்கும் போது, சைடுல பிட்ட போடுறது. நம்ம 'குஷி' விஜய் மாதிரி. 'உங்களுக்கு என்னல்லாம் புடிக்கும்னு' கேட்டுட்டு பதில் என்னன்னு பாக்குறது. 'எனக்கா! எனக்கு கானா உலகநாதன், P.வாசு...' இப்படி பட்டியல் போகும். 'இல்ல..அதுக்கு மேல' அப்படின்னு வளர்த்துக்கிட்டே போகலாம். ஏதாவது ஒரு கட்டத்தில் பலன் கிடைக்கலாம். பொண்ணு ரொம்ப உஷார் பார்ட்டின்னா, 'மவனே! நீ எதுக்கு கேக்கறன்னு தெரியும். அவ்வளவு ஈ.சியா நான் சொல்லிருவேனா' அப்படின்னு நமக்கு முரளி படம் க்ளைமாக்ஸ் ஒன்னு ரெடி பண்ணலாம். அது அவன் அவன் நேரத்தையும், கேள்வி கேட்கும் திறமையையும் பொருத்தது.

மேலே சொன்ன அதுக்குமே வழி இல்லன்னா, இருக்கவே இருக்கு நண்பர்கள் பட்டாளம். ஒருத்தன வெளங்காம ஆக்குறதுன்னா ஓடி வருவாங்க (ஜாலியா தான் :-). தூது அனுப்பலாம். லெட்டர் கொடுத்து அனுப்பலாம். ஆனா பையன் எவ்வளவு நம்ப தகுந்தவன் என்று பாத்துக்கணும் :-) . அப்படித்தான் நான் கல்லூரி படிக்கும் போது கூட்டாளி குமாருக்கு ஒரு புள்ள மேல காதல் வந்திடுச்சி. எங்களுக்கும் வகுப்பில் ஒரு நல்ல கதை கெடச்சிது. ஆனா பையன் கட்டம்-1 ஐயே தாண்ட மாட்டேங்கறான். ஒரு நா, பையன நாங்க எல்லோரும் தள்ளிக்கிட்டு போய் லெட்டர் எழுத பயிற்சி கொடுத்தோம் (நான் இல்லீங்க..நான் கூட இருந்தேன்..அம்புட்டு தான் :-). அவனும் ஒரு 10 லெட்டர் எழுதி வழக்கம் போல கிழிச்சி கிழிச்சி போட்டான். அவனுக்கு ஒன்னும் திருப்தியா வரலையாம். 'சரி விடுல. நானே எழுதி தர்றேன்' என்று நம்ம ப்ரண்டு கோபி கடிதம் எழுத, கடிதம் ரெடியானது. கொடுக்கப் போகும் போது பையன் சொதப்ப, கோபி கடுப்பாகி 'போடா! பயந்தாங்கொள்ளி. நானாவது போய் கொடுக்கறேன்' (ஒரு உதவி தான்:-)என்று பைக்கை எடுத்துக்கிட்டு புள்ளைங்க நிக்கிற பஸ் ஸ்டாண்டுக்கு போய் கடிதத்தை நீட்டி இருக்கிறான். 100 புள்ளைங்க நிக்கிற எடத்துல இப்படி பண்ணினா அந்த புள்ள என்ன பண்ணும். வாங்கல. அடுத்த நாள் என்னிடம் என்னோட வகுப்பு தோழி கேட்டா 'நம்ம கோபி லவ் பண்ணறானாமே. நேத்து கடிதம் கொடுத்தனாமே' அப்படின்னு. வகுப்பு புல்லா ஒரே பேச்சு. 'அடப்பாவி நான் கொடுத்ததுன்னு சொல்லலையா' அப்படின்னு குமாரு கத்த 'பயத்துல சொல்ல மறந்துட்டேன்ல. மன்னிச்சிருல' அப்படின்னு கோபி கதையையே மாத்திட்டான். இப்படி பட்ட பயலுவ கிட்ட சாக்கிரதையா இருக்கணும். இல்லன்னா ஒரு நிமிசத்தில கதையே மாறி போய்டும் :-)).

சரி சரி..கதை சொல்லிக்கிட்டு இருக்கறேன். பதிவுக்கு போகலாம். இந்த பதிவுக்கு பாடல் தேர்வு செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நம்ம சதீஷும், தங்கமும் பெரிய பெரிய பட்டியலாக மடல் அனுப்பி ரொம்ப உதவி செய்தார்கள். ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி. பாடல்னா, 'அழகன்'ல மதுபாலா பாடுவாங்களே 'தத்தித்தோம்...' அப்படின்னு, 'என் கண்ணனே..உன் மீராவை நீ இங்கு பாராயோ' அப்படின்னு சொன்னதும் 'பொளேர்'ன்னு ஒன்னு விழும். இந்த மாதிரி பாட்டு (Love Proposal) தேடி தேடி அலுத்துப் போச்சு. அதுவும் ராஜா இசையில்..ம்ம்ம்ம்..சும்மா பாட்டுல 'I Love You' இருக்கிற மாதிரி 100 பாட்டு தேறும். ஆனா எல்லாம் சும்மா டூயட் பாட்டு மாதிரி தான் இருக்கு. சரி ஒரு ரெண்டு மூனு பாட்டோட திருப்தியா நிறுத்திக்கலாம்.

முதல் பாடல் மெல்லிசை மன்னர் M.S.V - ன் இசையில் (சரி தானே?) ஒரு அக்மார்க் Proposal பாடல். 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் இருந்து 'சிப்பி இருக்குது..முத்தும் இருக்குது..திறந்து பார்க்க நேரம் இல்லடி ராசாத்தி'. யப்பா! என்ன ஒரு பாடல். ஸ்ரீதேவி சந்தம் சொல்லிக்கொண்டே போக, கமல் அதை வார்த்தை போட்டு பாட, என்ன ஒரு அழகான பாடல். பார்க்கவும் ரசிக்கவும். முடிக்கும் போது 'கொடுத்த சந்தங்களில் என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்' என்று கமல் முடிக்க, இதை எதிர்ப்பார்க்காத ஸ்ரீதேவி ஒரு சின்ன அதிர்ச்சி காட்டி இருப்பார். அழகு. அப்புறம் எஸ்.பி.பி-ஐயும் ஜானகியையும் பற்றி சொல்லவும் வேண்டுமா. குரலிலேயே நடிக்க இந்த ரெண்டு பேரால் மட்டுமே முடியும். இதோ பாடல்.



இரண்டாவதா, கடிதம் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது. 'குணா' படத்தில் இருந்து 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே'. காதலியை வச்சே கடிதம் எழுத சொல்வது ஒரு வகை. குணா படத்தையோ, கமலையோ பற்றி கேக்கணும்னா நம்ம MySPB ப்ளாக் சுந்தர்கிட்ட பேச சொல்லலாம். மனுசன் கலக்கலா சொல்வார். அதனால் நான் நிறைய சொல்லலை. கமல்-இளையராஜா கூட்டணி பற்றி சொல்லணும்னா நிறைய சொல்லலாம். தற்போதைய திரை உலகத்தில் இசை ஞானம் உள்ள ஒரே கலைஞர் கமல் (இல்ல..விஜய்க்கு ஆஜித்துக்கும் நிறைய குத்துப்பாட்டு ஞானம் உண்டு என்றெல்லாம் என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது..ஆமாம்..சொல்லிப்புட்டேன். :-). இந்த பாடலை பற்றி..'மனிதர் உணர்ந்து கொள்ள..இது மனிதர் காதல் அல்ல' (ஆனா! படம் பாக்கறவன் மனுசன் தானே..இப்படி சொன்ன எப்படி :-)) இந்த வசனம்..அப்புறம் கமல் வசனமாக சொல்லிக்கிட்டே போக, அதை பாடலாக பாடும் விதம் (பாட்டாவே படிச்சிட்டியா..நடு நடுவுல மானே தேனே போட்டுக்க')..ஜானகியின் குரல், தலைவரோட "கமல் ஸ்பெஷல்" இசை..இப்படி நிறைய..சரி சரி..பாட்டுக்கு போகலாம்..



இறுதியாக, மௌனராகம் கார்த்திக் அந்த காலத்துல ரொம்ப பேமஸ். 'மிஸ்டர் சந்திரமௌலி..மிஸ்டர் சந்திரமௌலி' என்று அவர் மௌனராகத்தில் வந்தது என்றும் நினைவில் நிற்கும். அதையே அப்படி 'கோபுர வாசலிலே' படத்தில் ப்ரியதர்ஸன் பயன்"படுத்தி" இருப்பார். அந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் கார்த்திக் புகுந்து விளையாடுவார். இந்த பாடலை கிட்டத்தட்ட அலைபாயுதே மாதவன் ஸ்டைல் Proposal- என்று வச்சிக்கலாம். 'கேளடி பெண் பாவையே'. இளையராஜா-ப்ரியதர்ஸன் என்றால் விசேஷம் தான். எஸ்.பி.பி-யின் கலக்கல் பாடல் இங்கே.




நம்ம ப்ளாக் சதீஷும், தங்கமும் நிறைய பாடல் சொல்லி கொடுத்தார்கள். சதீஷ் கூறிய 'புத்தம் புது மலரே' (அமராவதி), தங்கம் கூறிய 'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு' (சேரன் பாண்டியன்) பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த பாடல்கள் என்னிடம் இல்லாததால், கிடைத்தவுடன் இங்கே கொடுக்கிறேன்.

சீக்கிரம் அடுத்த கட்டத்தில் சந்திக்கலாம்..வரட்டா..

Friday, April 21, 2006

தாளம் மாறிப் போச்சு.

நமக்கு ஒரே மாதிரி சாப்பாட சாப்பிட்டுக்கிட்டு இருந்தா அலுத்து போயிடும் அல்லவா. முதல் ரவுண்ட சாம்பார் ஊத்தி கட்டிட்டு, அப்புறம் ரசத்தையும் ஒரு புடி புடிப்போம்லா. இருங்க! இருங்க! இது கீதம் ப்ளாக் தான். ஏதோ பாதை மாறி வந்துட்டோமோன்னு நெனைக்காதீங்க.

ஒரு பாடல் என்றால் பல்லவி + (அனுபல்லவி) + சரணம் + பல்லவி + மீண்டும் அதே தாளத்தில் சரணம் + பல்லவி....இப்படி தான் எல்லா பாடலும் இருக்கிறது. பல்லவியும் சரணமும் கிட்ட தட்ட ஒரே இசை தாளத்தில் தான் அமையும் (சில ராஜா பாடல்கள் செமையா, அழகா ஒரு ட்ரம்ஸ்ல ஆரம்பிப்பார். சரணத்தில் டொபுக்குன்னு தபேலாவுக்கு போய்ருவார். நான் மனசுக்குள்ள 'என்னா தல, இப்படி ஜிவ்வுன்னு பாட்ட தொடங்கிட்டு இப்படி டொப்புன்னு விழ வச்சிட்டீங்களே' அப்படின்னு பொலம்பிக்குவேன். ஆனா அவருக்கு புடிச்ச ஒரு இசை கருவி தபேலா.ஒன்னுஞ்சொல்ல முடியாதுல்லா :-).

பொதுவாகவே, பாடலின் இரண்டு சரணங்களும் 99% ஒரே தாள அமைப்பில், ஒரே இசை அமைப்பில் தான் அமைக்கிறார்கள். ஆனால் ராஜா ஒரு சில பாடல்களில் இரண்டாவது பல்லவியில் ஒரு shift கொடுத்து சுத்தமாக வேறு ஒரு தாள அமைப்பில் அமைத்திருப்பார். திடீர்னு 'பாட்ட மாத்து' அப்படின்னு ஜாலியா இசை அமைச்ச மாதிரி தோன்றும்.

இப்படி மாற்றுவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அந்த காட்சிக்கு அது தேவைப்படும். இரண்டாவது, சும்மானாட்டுக்கும் (சாம்பார், ரசம் மாதிரி) மாத்தி நமக்கு ஒரு வித்தியாசம் காட்டுவது. முதல் சரணத்தையும் இரண்டாவது சரணத்தையும் பாடகர் ஒரே ஓட்டத்தில் தான் பாடுவார். ஆனால், இசை கருவிகளை வேறு படித்தும் போது அந்த பாடல் இன்னும் ஒரு தளத்திற்கு செல்வது போல தோன்றும். ராஜாவிடம் எனக்கு பிடித்த ஒரு ஸ்டைல் இது.

முதலில், காட்சிக்கு ஏற்ற மாற்றங்களை பார்க்கலாம்.

முதல் பாடல், 'நாடோடி தென்றல்' படத்தில் ஒரு அருமையான பாடல். 'ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ'. ராஜாவும், ஜானகியும் பாடினாலே அந்த பாடல் அழகு தான். தலைவனை பிரிந்த தலைவி பிரிவுத் துயரால் பாடுகிறாள். ஜானகி பாடலை ஆரம்பிக்கிறார். பாடல் ரொம்பவே மெதுவாக போகும். டோலக்கை வைத்து ஒரு மெட்டில் மெதுவாக தட்டிக்கொண்டிருப்பார்கள். அது ஆமை மாதிரி ஒரு வேகத்தை பாடலுக்கு கொடுக்கும். இப்போது தலைவன் வருகிறான். இப்போது பிரிவு இல்லை. பாடல் வேகம் பிடிக்க வேண்டும் இல்லையா. ஜானகி எப்படி பாடினாரோ அதே வேகத்தில் தான் ராஜாவும் பாடுவார். ஆனால் 'வானமும் பூந்தென்றலும்' என்று ராஜா ஆரம்பிக்கும் போதில் இருந்து பாடலை தபேலாவுக்கு மாற்றுவார். இப்போது பாடல் வேகமாக செல்வது போல் ஒரு உணர்வை கொடுக்கும். இசை கருவிகளில் situation வித்தியாசம் காட்டுவது ரொம்ப அழகு. நீங்களும் கவனித்து ரசித்து மகிழுங்கள்.



இரண்டாவது, மாவீரன் படத்தில் இருந்து 'நீ/நான் கொடுத்தத திருப்பி கொடுப்பேன்' பாடலை எடுத்துக் கொள்ளலாம். ஹீரோயின் வழக்கம் போல ராஜா மகள். திமிர் பிடித்தவள். மோதல் ஆரம்பிக்கிறது. ஹீரோ சவால் விட்டு பாடுகிறான் 'நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்..எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி'. ராஜா ட்ரம்ஸில் பாடலை கொண்டுபோகிறார். இங்கு ஹீரோவின் வீரம், கோவம் தெரியணும். இதை ராஜா ஒரு உறுதியான ட்ரம்ஸ் வைத்து காட்டி இருப்பார். பின் தமிழ் சினிமா வழக்கம் படி ஹீரோயின் காதலில் விழுகிறாள். இப்போது 'நான் கொடுத்தத திருப்பி கொடுத்தா, முத்தமா கொடு...அத மொத்தமா கொடு' என்று ஹீரோயின் ஆரம்பிக்கிறாள். இப்போது இங்கே காதல், மென்மை தெரிய வேண்டும். இங்கேயும் ட்ரம்ஸ் தான். ஆனால் இப்போது ராஜா அப்படியே இசையை அப்படியே கொஞ்சம் அமுக்கி இருப்பார். என்ன ஒரு அழகு. ஆஹா. இன்பம்..இன்பம்..



முதல் வகையில் இறுதியாக, மீண்டும் நாடோடி தென்றலில் இருந்து 'ஏல மல காட்டுக்குள்ள' பாடலை எடுத்துக்கொள்ளலாம். இது பாண்டியன் தன் முறைப்பெண் ரஞ்சிதா தனக்கு கிடைக்காமல் கார்த்திக்கை விரும்புவது தெரிந்து பாடுவது. சபையில் எல்லோர் முன்னாலும் பாடுவது போல வரும். முதல் சரணம், ஒரு அழகான ரிபீட்டா ஒரு பீட்டில் செல்லும் 'முஞ்சடக்கி கடலுக்குள்ள முங்கி முங்கி முத்து எடுத்தேன்'...இப்படி போகும். அருமையான தெளிவான ஓட்டம். முதல் சரணம் முடிகிறது. படத்தில் க்ளைமாக்ஸ் நெருங்குகிறது. ராஜா பாடலை டாப் கியரில் ஜிவ்வுன்னு ஏத்துவார். அதே மெட்டு தன். மலேசியா முதல் பல்லவி மாதிரியே தான் பாடுவார். ஆனால், தாளத்தை மாற்றுவார். பாடலும் வேகம் பிடிக்கும். .இது இன்னொரு வித்தை. கேட்டு மகிழுங்கள்.




சரி..காட்சிக்கு தேவை இல்லை..அனாலும் சும்மானாட்டுக்கும் மாத்தி கலக்குறதும் நல்லா தானே இருக்கு. அப்படி ஒரு மூனு பாட்டு இங்கே கொடுக்கிறேன்.

முதலில் சட்டென்று நினைவுக்கு வருவது 'மன்னன்' படத்தில் இருந்து எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு 'ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்'. ரஜினி-குஷ்புக்கு வரும் பாடல். ரொம்பவே அழகான பாட்டு. எஸ்.பி.பி- சுவர்ணலதாவின் குரலில் இன்னும் அழகு. பாடல் தொடக்கத்தில் இருந்து ஒரு Repeated Beat-ல டடக் டடக்னு ஓடிக்கிட்டு இருக்கும். திடீர்னு ரெண்டாவது சரணத்தில் டமக்கு டமக்குன்னு ஒரு தபேலாவுக்கு தாவுவார். செம ஆட்டம் போட ஒரு இசை. அருமை. கேட்டு மகிழுங்க மக்கா :-)



ரெண்டாவதா, இந்த பாடல் ரொம்ப புடிக்கும். ஆனா அவ்வளவா ஹிட் ஆகலை.ம்ம்ம்..'பாடு நிலாவே' ல இருந்து ஒரு teasing பாட்டு. 'குத்தம்மா நெல்லு குத்து'. என்ன அருமையானன Manual drums..அது அங்கே அங்கே வந்து 'தும்..தும்' ஒரு தட்டு தட்டிக்கிட்டு போறத கேக்கறது என்னா இதமா இருக்கு. ட்ரம்ஸ்-ம் தபேலாவும் கலந்து ஒரு Beat அமைத்திருப்பார். அருமை. சித்ராவின் குரலில் அந்த காட்சி (மோகனை வெரட்டுற) அப்படியே கண்ணு முன்னாடி வருது. அழகா ட்ரம்ஸ்ல போய்கிட்டு இருக்கிற பாட்ட, பாதில ஒரு குலவை சத்தம் கொடுத்து குத்து குத்துன்னு தபேலாவுல குத்தி இருப்பார்...செம குத்து..கலக்கிட்டிங்க தல..



இந்த பாட்ட எப்போ கேட்டீங்களோ..இதுவும் போன பாட்டு மாதிரி தான். அதே சித்ரா..கிட்டத்தட்ட teasing தான். ஆனா பெற்ற தாயை பார்த்து மகள் பாடுவது மாதிரி வரும். 'கற்பூர முல்லை' படத்தில் இருந்து 'வாம்மா! வா! சண்டிராணி'. இதிலும் ட்ரம்ஸ் அழகு..சித்ராவின் குரல் அழகு..இரண்டாவது சரணத்தில், ட்ரம்ஸ்-ல இருந்து கொட்டு (மத்தளம்)-க்கு மாறும் பாடல். அந்த அடி, அருமையா நம்மை தாளம் போட வைக்கும். நல்லா இருக்கும்டே..கேட்டு பாருங்க..


Friday, April 14, 2006

பாடாய் படுத்தும் காதல் (முதல் கட்டம்)

காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. சினிமா இல்லை. சினிமா பாட்டு இல்லை. இந்த காதலை வச்சித்தாங்க 99% பாடல்கள் வருது. (இல்லை வந்தது - எனக்கு இப்போ வருகிற குத்துப்பாடல்களின் எண்ணிக்கை தெரியாததால்). காதலில் தான் எத்தனை கட்டங்கள். அத்தனைக்கும் எத்தனை விதமான பாடல்கள். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம் என்று பதிவு எழுத ஆரம்பிச்சாச்சு. (எழுதறதுக்கு நல்ல தலைப்பு கெடைச்சிடுச்சுடே மக்கா). எத்தனை பகுதி போகும் என்று தெரியலையே. பொறுமை காத்தருளுங்கள்.

முதல் கட்டம்:

இது தாங்க முதல் கட்டம். 'காதல் வந்திச்சாம்..ஓஓஓஓ..ஒரு காதல் வந்திச்சாம்'. 'ஏலே மக்கா! அந்த புள்ள ஒன்னையே பாக்குதுல' அப்படின்னு ஏத்தி விட்டும் வரலாம், இல்லன்னா 'மாமி! செத்த காப்பி பொடி கொடுக்கறேளா! அம்மா வாங்கிட்டு வர சொன்னாள்' அப்படின்னு எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்த ஐயங்காரு வீட்டு அழகாகவும் இருக்கலாம், 'எக்ஸ்க்யூஸ் மீ! கொஞ்சம் பல்லாவரத்துக்கு டிக்கட் எடுத்து தரமுடியுமா' அப்படின்னு 18A-ல் கேட்கும் பிகராலும் வரலாம். இப்படி எப்படினாலும் மனசுக்குள்ளே காதல் வரலாம். அப்படியே கிறுக்கு புடிச்சிப்போய் பையன் கொஞ்ச நாளா சுத்திக்கிட்டு இருப்பான். 'ஏல! கிறுக்கு பயலே! என்னாத்துக்கு தனியா ஒக்காந்து சிரிச்சிக்கிட்டு இருக்க. முனி ஏதாவது புடிச்சுட்டா' அப்படின்னு அம்மா சொல்லும் போது தெரிஞ்சுக்கலாம், ரொம்ப முத்திப்போச்சு என்று. 'ஆத்தா! ஒம்புள்ள எதிர்வீட்டு கனி கூட சுத்தறானாம. கண்டிச்சி வையி ' அப்படின்னு ஊர் காரனுவ சொல்லும் போது தான் தெரியும், புடிச்சது முனி இல்ல. கனி என்று.

அப்புறம் வானத்த பார்த்துக்கிட்டே 'உன்னை பார்த்த பின்பு நான்! நானாக இல்லையே' அப்படின்னு பாடுறது. வீட்டு ஓட்டு மேல ஒக்காந்துக்கிட்டு 'என்னை தாலாட்ட வருவாளா' அப்படின்னு தேடுறது, பொட்ட புள்ளையா இருந்தா கைல துப்பட்டாவ புடிச்சிக்கிட்டு எதிர்காத்துல வடக்கையும் தெக்கையுமா 'நேற்று இல்லாத மாற்றம்..என்னது' அப்படின்னு ஓடுறது...இப்படி தாங்க கட்டம்-1 ஆரம்பிக்கும். இப்போ தாங்க தென்றல் தோழியாகும் (தோழி பகைவள் ஆவாள் :-), நிலவு கூட பேசும். மனசுக்கும் பட்டாம் பூச்சி பறக்கும்.

இந்த நேரத்தில் கெளம்பும் பாட்டுக்கள் எல்லாம் அழகான கவிதைகள். அப்படி சில கவிதைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த மாதிரி பாடல்களில் முக்கிய பங்கு பாடலாசிரியருக்கு. அப்புறம் அதை பாடும் பாடகர். பாடலின் ஓட்டம் ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும், பாடலின் வரிகள் காதலையும் அள்ளிக்கொண்டு வரும். இசையை கொஞ்சம் அமுக்கியே வாசித்து இருப்பார்கள். அப்போ தானே மக்கா பாடுற பீலிங் புரியும். இந்த பீலிங் விடுறதுல நம்ம பசங்கள மிஞ்சிறதுக்கு ஒலகத்துல ஆளே கெடையாது. கொடுத்து வச்ச புள்ளைங்கப்பா.

முதலில் ஆண்கள்.

ரஜினி பொன் முட்டையிடும் வாத்தாக மாறுவதற்கு முன் வந்த பாடல். ரஜினியின் சினிமா பாடல்களில் இந்த பாடலுக்கு எப்பவுமே முதல் இடம் தான். 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்'. ரஜினி படத்துல எல்லாம் இப்படி பாட்டு என்று புலம்புவதா, இல்லை 'எப்படி இருந்த ரஜினி இப்படி ஆகிட்டாருன்னு' சொல்றதா. இப்போ எதுக்கு அது. சந்தோசமா பாட்ட கேளுங்கடே. 'மயக்கம் என்ன..காதல் வாழ்க' என்று முடிப்பாரே, அப்போ எஸ்.பி.பி பாடுறத பார்த்தா நமக்கே காதலிக்கணும் போல தோணும்.

நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆயிரம் பாடலே
ஒன்று தான் எண்ணம் என்றால்..உறவு தான் ராகமே..
எண்ணம் யாவும் சொல்லவா..

என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்






இரண்டாவது ரொம்ப அருமையான பாடல். ராஜாவின் 80S முத்திரை. என்ன ஒரு Orchestration. என்ன ஒரு குரல் (அதே SPB தான்). இந்த பாடல் அப்படியே நம்ம கட்டம்-1 ல் வராது என்றாலும், இதிலும் ஒரு ஆணின் காதல் உற்சாகம் அப்படியே வருகிறது. 'முதல் வசந்தம்' படத்தில் வரும் 'பொன்னி நதி வெள்ளம் என்று' . இந்த பாடல் ஏனோ முதல் வசந்தம் படத்தில் வரும் மற்ற பாடல்களை விட கொஞ்சம் (70S) பழைய பாடல் மாதிரியே இருக்கிறது. இதோ ஒரு ராஜகீதம். கேளுங்க.





கடைசியா, இந்த பாட்டு போடலைன்னா இந்த பதிவே நிறைவாகாது. அதாங்க 'என்னை தாலாட்ட வருவாளா' . இந்த பாட்டு நான் கல்லூரி படிக்கும் போது பட்டையை கிளப்பியது. ஹரிஹரன் பாடிய ராஜா பாடல்களில் இதற்கு எப்பவுமே முதல் இடம் தான். கவிஞர் பழனி பாரதி என்று நினைக்கிறேன். இந்த படத்தில் ரொம்ப அருமையான பாடல்களை எழுதி இருப்பார். ரொம்ப விஷேசமா இந்த பாடலில் கேட்டு கிறுக்கு புடிச்சது அந்த பேஸ் (கிடார்) தான். ரொம்ப ரிச்சா இருக்கும். கேசட்டில் ராஜா Version-ம் உண்டு.

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா?
நான் தூங்க வழி ஒன்று தாராதா?


- கலக்கிட்டாங்கடே..கலக்கிட்டாங்க. பாட்டு இதோ.





இப்போ புள்ளைங்க பாடுறதை கேட்கலாம். இந்த வகைக்கு பாட்டு தேடுவதற்குள் வெறுத்துப் போய் விட்டது. நதியா பாட்டுல இருந்து ஆரம்பிக்கிறேன்.

'ஓ! எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா'. இசையை கேளுங்க. அப்படியே நதியா கூட சேர்ந்து ஓடுது. 'உனக்காகவே வாழ்கிறேன்' படப்பாடல். ஜானகியின் அருமையான குரலில்,ராஜாவின் கலக்கல் பாடல் ஒன்று.

செந்தாழம் பூவே கதைகள் பேசு
சிங்கார காற்றே மெதுவாய் வீசு
என் காதல் தேவன் அருகே வந்தான்
எனக்காக தானே இதயம் என்றான்
நான் அந்த நேரம் நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேச வில்லை...


இப்படி போகுதுங்க பாட்டு..இதோ..





இப்போ சித்ரா! 'சந்தோசம்! இன்று சந்தோசம்' . மனிதனின் மறுபக்கம் படப்பாடல். போன பாடலுக்கும் இந்த பாடலுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. இதற்கும் தலைவர் தான் இசை.

உன்னை கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய் ஒரு காதல் யாசகம்
அதை தாளாமல் மனமோ துள்ளுது.
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது..


- சித்ராவின் இனிய குரலில் பாடல் இதோ..





போன ரெண்டு பாட்டும் ஆள் யாருன்னு தெரிஞ்சி பாடினாங்க. இப்போ ஆளே இன்னும் முடிவாகல..அதுக்குள்ள இவங்க புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க..

'செந்தூரப்பூவே..செந்தூரப்பூவே..ஜில்லென்ற காற்றே..
என் மன்னன் எங்கே..என் மன்னன் எங்கே..நீ கொஞ்சம் சொல்லாயோ'

ராஜாவின் ஆரம்ப கால கலக்கல் பாடல். பதினாறு வயதிலே படப்பாடல். பாடியவர் ஜானகி. பாடல் இதோ..





முடிக்கும் போது, கொஞ்சம் வித்தியாசமா ஒரு பாடலோடு முடிக்கலாம்னு தான் இந்த பாடல். ஒரே ஜானகி, சித்ரா. கொஞ்சம் புதுசா பவதாரணி பாடிய பாட்டொன்னு கேட்கலாமா.
களஞ்சியம் என்று ஒரு இயக்குனர் இருந்தார். தேவயாணியின் ஆஸ்தான இயக்குனர். 'பூமணி' 'பூந்தோட்டம்' 'கிழக்கும் மேற்கும்' என்று ராஜாவின் இசையில் தேவயாணியை கதாநாயகியாக போட்டு வரிசையாக படம் எடுத்தார். நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலம் அது. எனக்கு 80S ராஜாவும் ஒன்று தான் 2000-ல் ராஜாவும் ஒன்று தான். அதனால் இந்த பாடல் எனது விருப்பமாக போடுகிறேன். 'பூங்காற்றே..நீ என்னை தொடலாமா' பாடல். 'கிழக்கும் மேற்கும்' படத்தில் இருந்து. கேளுங்க.






அப்பாடா...ஒரு கட்டம் ஒன்றை தாண்டுவதற்கே போதும் போதும் என்று ஆகி விட்டது. அடுத்த கட்டம் தானே முக்கியமானது..அதாங்க காதலை அந்த புள்ளைக்கிட்ட சொல்றது..I Love You சொல்றதுக்குள்ள பயலுவ ஒரு வழி ஆகிடுவானுங்க. அது சம்மந்தமான பாடல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
சிவா