கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, November 30, 2005

அண்ணன்-தங்கை பாசம்..

இந்த அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் காலகாலமாய் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு வந்த பாசமலரில் இருந்து நேத்து வந்த சிவகாசி வரை இந்த சென்டிமென்டுக்கு மவுசோ மவுசு. நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். பொதுவாகவே நமக்கு இளையவதாக கூட பிறந்தது யாராவது இருந்து விட்டால், நமக்கு பாசம் கொஞ்சம் அதிகமாகவே வந்து விடும். அதிலும் அக்கா-தம்பி என்றாலோ, அண்ணன்-தங்கை என்றாலோ, பாசமழை தான். தங்கைக்காக சேர்த்து வைக்கும் ஒரு ஆரஞ்சு மிட்டாயிலிருந்து, கல்யாணம் ஆகி தங்கைக்கும் ஒரு குழந்தை பிறந்து 'தாய் மாமன்' என்ற உரிமையில் அதை கொஞ்சும் வரை அண்ணன்-தங்கை பாசம் ஒரு தொடர்கதை தான்.

தங்கைக்கு குழந்தை பிறந்தவுடன் பறி போவது தாய் மாமனின் வேட்டி தான் (தாய் மாமனின் வேட்டி/கைலி- யில் தூங்கினால் தான் குழந்தைக்கு உடம்பு வலிக்காதாம்). இப்படி சின்ன சின்ன விசயத்திலும் அண்ணன்-தங்கை சென்டிமென்ட் நிறைய வைத்திருக்கிறார்கள், நம் பெரியவர்கள். அந்த குழந்தை வளர்ந்து அதன் கல்யாணத்திலும் 'தாய்மாமன் சடங்கு' என்று தாய்மாமனுக்கு முக்கியத்துவம் வைத்திருக்கிறோம். இப்படி நம் வழக்கத்தில் அண்ணன்-தங்கை பாசத்திற்க்கு , திருமணத்திற்கு அப்புறமும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த பதிவில் எனக்கு பிடித்த அண்ணன்-தங்கை பாடல்கள் இரண்டு பார்க்கலாம். இரண்டுமே S.P.B யின் குரலில். இரண்டு பாடல்களிலுமே எளிமையான இசை, வளமையான குரல், செழுமையான வரிகள்....கேட்டு மகிழுங்கள்.

முதல் பாடல் வரிகள் தங்கை பாடுவதாகவே அமைந்தது. எனக்கு S.P.B பாடிய Version பிடிக்கும் என்பதால் அதையே போடுகிறேன். முதல் பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.

கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்க்கு..அண்ணன் மொழி கீதை அன்றோ...அதன் பேர் பாசமன்றோ.

படம்: அண்ணன் ஒரு கோவில்
பாடல்: அண்ணன் ஒரு கோவில் என்றால்...





படம் : ராஜராஜேஸ்வரி
பாடல்: என் கண்ணின் மணியே..




Monday, November 28, 2005

ஓ..வசந்த ராஜா ( நேயர் விருப்பம்)

அடுத்த நேயர் விருப்பம். கீதாவின் விருப்பமாக "நீங்கள் கேட்டவை" படத்தில் இருந்து "ஓ..வசந்த ராஜா" பாடல். இந்த பாடலின் சிறப்பு பற்றி நண்பர் சதிஷ் அழகாக கூறி இருந்தார். முதல் Interlude and சரணம் மிருதங்கம்/தபேலா வில் அமைத்திருப்பார். இரண்டாவது Interlude-ல் இருந்து சரணம் முடியும் வரை Western-ல் அமைத்திருப்பார். கவனித்து கேட்டு மகிழுங்கள்.

படம்: நீங்கள் கேட்டவை
பாடல்: ஓ...வசந்த ராஜா
பாடியவர்கள்: S.P.B & S.ஜானகி
இசை: 'இசைஞானி' இளையராஜா






Saturday, November 26, 2005

இந்த பாட்டுக்கு நான் அடிமை & போட்டி-2

(போட்டி எண்-2 விவரங்கள் கடைசியில்)

ராமராஜன் படத்திற்க்கு இளையராஜா இசை எப்பவுமே விஷேசம் தான். அப்படி என்ன இரண்டு பேருக்கும் பொருத்தம் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து இரண்டு பேரும் சேர்ந்து பேசியது போல புகைப்படம் கூட நான் பார்த்ததில்லை. ஒரு வேலை, ராமராஜன் படத்தின் கிராமத்து பிண்ணனி, ராஜாவிற்க்கு பிடித்திருக்குமோ? என்னமோ?

பொதுவாகவே ராமராஜன் பாடல்களில் ராஜா அவ்வளவாக வித்தியாசமான முயற்சிகள் செய்தது கிடையாது. பொதுவாகவே கிராமத்து பிண்ணனி என்பதால், டிரம்ஸ், ட்ரம்பட்,பியானோ என்று பயன்படுத்த முடியாது. ரெண்டு டூயட், ராமராஜனின் அத்தை பொண்ணு பாடும் தனி பாட்டு, அம்மா பாட்டு இப்படி ஒரு வட்டத்துக்குள்ளேயே அமைந்துவிடும். அதில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான களம் கொடுத்தப்படம் "பாட்டுக்கு நான் அடிமை". ராமராஜன் கிராமத்தில் இருந்து ஒரு பெரிய இசை கலைஞராவது போல போகும் படம். "How to Name it" ல் இருந்து நிறைய இந்த படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

இந்த படத்தில் இருந்து ஒரு பாடல். ரயிலின் சத்தத்தை வைத்து அவர் அமைத்த "தாலாட்டு கேட்காத பேர் இங்கு" பாடல். ரயிலின் ஓட்டமே ஒரு தாலாட்டு தான். அதன் 'தடக் தடக்' சத்தமும், ஆட்டமும் எல்லோரையும் தாலாட்டுவது நிச்சயம். அதில் ராஜாவில் இசையும் கலந்தால், கேட்கவா வேண்டும்.

"டடக்..டக் டடக்...டக்" என்று ஒரே பீட்டில் பாடல் ஒரே சீராக போக, "சிக்குபுக்கு சிக்குபுக்கு" என்று இன்னொரு சத்தமும் சேர்ந்து ஓடி வர, அங்கே அங்கே அதே ஓட்டத்தில் இணைந்து கொள்ளும் வயலின் அழகோ அழகு. Second interlude-ல் ரயிலின் விசில் சத்தமும் அதற்க்கு பதில் சொல்வது போல் வரும் வயலினும் (கொட்டங்கச்சி!!!) என்னை கவர்ந்தவை. முதல் பல்லவி முடியும் போது "எரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு" என்று மனோ முடிக்கும் போது, அவர் ரயிலின் விசில் சத்தத்தை ஒரு வாத்தியமாக பயன்படுத்தி இருக்கும் விதம் அலாதி.

பாடலின் பொருளும், மனோவின் குரலும் இப்பாடலுக்கு சில கூடுதல்கள். மனோ, ராஜாவால் ஒரு சிறந்த பாடகராக்க பட்டவர். தன் குரலால் இவ்வளவு தான் முடியும் என்ற வட்டத்துக்குள் அடக்கி வாசித்து ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் நன்றாக பாடியிருப்பார். இந்த பாடல் வந்த புதிதில் நான் திடீரென்று மனோ ரசிகனாகி மனோ பாடல்களாக சேர்க்க ஆரம்பித்தேன்.

சரி! இப்போ பாட்ட கேட்டு மகிழுங்கள்.

படம்: பாட்டுக்கு நான் அடிமை
பாடல்: தாலாட்டு கேக்காத
பாடியவர்: மனோ
இசை: இளையராஜா






போட்டி எண்-2

முதல் போட்டிக்கு கீதா சரியான பதில் சொல்லியிருந்தாங்க. இந்த பதிவில் இரண்டாவது போட்டிய பார்க்கலாம். கீழே உள்ள கிடார் இசையை கேளுங்கள். இது இடம் பெற்ற பாடல்களின் முதல் வரியை கூறுங்கள். வழக்கம் போல பரிசாக உங்கள் விருப்ப இளையராஜாவின் பாடல் அடுத்த பதிவில் போடப்படும். அதிக கேள்விகளுக்கு பதில் சொல்றவங்களுக்கு பரிசு (மூன்று கேள்விகளுக்கும், அல்லது குறைந்தது இரண்டு).

கேள்வி-1





ரியல் பிளேயர் வேலை செய்யாதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

கேள்வி-2





ரியல் பிளேயர் வேலை செய்யாதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

கேள்வி-3





ரியல் பிளேயர் வேலை செய்யாதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.


Wednesday, November 23, 2005

நானொரு பொன்னோவியம் கண்டேன்

போட்டி-1 ல் சரியான பதிலை சொல்லிய கீதாவின் விருப்பப் பாடல் "கண்ணில் தெரியும் கதைகள்" படத்தில் இருந்து "நானொரு பொன்னோவியம் கண்டேன்" பாடல். S.P.B, P.சுசிலா, S.ஜானகி பாடியது.

பாடலை கேக்கறதுக்கு முன்னாடி, சில தகவல்கள். "கண்ணில் தெரியும் கதைகள்" படத்திற்க்கு இசை அமைத்தவர்கள் ஐந்து பேர். இளையராஜா, சங்கர் கணேஷ், GV வெங்கடேஷ், TR பாப்பா, KV மகாதேவன். ஆளுக்கு ஒரு பாட்டு. இந்த ஐந்து பேரில் வெற்றி பெற்றவர்கள் இரண்டு பேர். "நானொரு பொன்னோவியம்" போட்ட இளையராஜா, "நான் உன்ன நெனைச்சேன். நீ என்ன நெனைச்சேன்" போட்ட சங்கர் கணேஷ். ரெண்டுமே பட்டையை கிளப்பிய பாடல்கள். மற்ற மூன்று பாடல்கள் என்ன என்று தெரியவில்லை.

இது தான் ஐந்து இசையமைப்பாளர்கள் இனைந்து இசையமைத்த முதல் படமாக இருக்க வேண்டும். சமீபத்தில் "சுயம்வரம்" என்று ஒரு படத்தில் சாதனை பண்ணுகிறேன் பேர்வழின்னு, ஊர்ல இருக்கற இசை அமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எல்லோரையும் மொத்தமாக போட்டு ஒரு படம் செய்தார்கள். அது ஒரே நாளில் முடித்த படம் என்ற ஒரே ஒரு சாதனையை மட்டுமே செய்தது :-(

கீதா! சரியாக இளையராஜா பாடல் என்று இந்த பாடலை கேட்டிருக்கீங்க. உங்களுக்கு மேலே சொன்ன தகவல்கள் தெரிந்திருக்கும். சரி தானே!

சரி. இப்போ பாட்டு. பாட்ட கேட்டா பெரு மூச்சு தான் வருது..ம்ம்ம்.. அதெல்லாம் அந்த காலம்..



அடுத்த போட்டியை சீக்கிரம் பார்க்கலாம். பாட்ட கேட்டுட்டு இந்த ப்ளாக் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Tuesday, November 22, 2005

ஒரு கிளி உருகுது (போட்டி-1)

(போன தடவை இந்த பதிவில் சில பாடல்கள் வேலை செய்யாததால், மறுபதிவு செய்கிறேன்)

இரு பெண் குரல் பாடல்கள் மிக மிக குறைவு தான். இந்த பதிவில் இளையராஜாவின் இசையில் 'இரு பெண் குரல்' பாடல்கள் இரண்டை கேட்போம். 80-ல் இருந்து ஒன்று. 90-ல் இருந்து ஒன்று.

1. "ஆனந்த கும்மி" படத்தில் இருந்து 'ஒரு கிளி உருகுது...உரிமையில் பழகுது..ஓ மைனா...மைனா". S.ஜானகியும் சைலஜாவும் பாடியது.




2. "புதுப்பட்டி பொன்னுத்தாயி" படத்தில் இருந்து "ஊருறங்கும் சாமத்திலே". உமா ரமணன், சுவர்ணலதா குரலில்.



கண்டுபுடிங்கடே:

சரி நாமும் ஏதாவது கேள்வி கேக்கலாம் என்று தோன்றியது. கீழே உள்ள பாட்டும் 'இரு பெண் குரல்' வகை தான். என்ன பாட்டு?. என்ன படம்?. என்று சொல்லுங்கடே. பரிசாக சரியான பதில் சொல்றவங்களுக்கு அடுத்த பதிவுல அவங்க விருப்ப பாடலை (இளையராஜா பாட்டா சொல்லுங்கடே) போட்டுடலாம். என்ன சொல்றிய?






Tuesday, November 15, 2005

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!

நண்பர் குமரன் இந்த பாடலை பற்றி சில பதிவுகள் (பதிவு-1 ; பதிவு-2; பதிவு-3) போட்டிருந்தார். அவரின் விருப்பமாக இந்த பாடலை இந்த பதிவில் போடுகிறேன்.

படம் : பாரதி
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா




Saturday, November 12, 2005

வா! காத்திருக்க நேரமில்லை

ஒரு இளையராஜாவின் அக்மார்க் மெலோடி பாட்டு. நடிகர் கார்த்திக் தன் தந்தையின் "காதலிக்க நேரமில்லை" போல ஒரு படம் பண்ண ஆசைப்பட்டு ஆரம்பித்த படம் "காத்திருக்க நேரமில்லை". பொதுவாகவே படத்திற்கு பேர் வைப்பதோடு சரி! படத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். இந்த படமும் அதே வகை. படத்தில் உருப்படியான ஒன்று பாடல்கள். "வா! காத்திருக்க நேரமில்லை" "துளியோ துளி முத்து துளி" குறிப்பிடத் தக்கவை. இந்த பதிவில் ஒரு பாடல். S.P.B-யும் S.ஜானகியும் பாடியது.






கொசுறு: சில பிண்ணனி இசையையும் கேட்கலாம். "ஜல்லிக்கட்டு" படத்தில் இருந்து ஒரு Chasing BGM. இந்த படத்தில் எல்லா பிண்ணனி இசையும் கலக்கலோ கலக்கல். Trumpet-ம் Drums-ம் வைத்து இளையராஜா விளையாடி இருப்பார். Drum-ல் காட்டியிருக்கும் Variations, அருமையோ அருமை. இளையராஜா ஏனோ இந்த Manual durms-அ இப்போ அவ்வளவாக பயன் படுத்த மாட்டேங்கிறார். கஸ்தூர் மானில் "என்னை கேட்ட" பாடல் Synth Instument-ல் அல்லாடுகிறது :-( .

1. Dog Chasing Satyaraaj




2. Title ( கடைசி ஒரு நிமிடம் வரும் drums...கலக்கலோ கலக்கல்)






மாசறு பொன்னே வருக


"தேவர் மகன்" படத்தில் இருந்து ஒரு சிறிய பாடல் இந்த பதிவில். எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அலுத்துப் போகாத இசை. இந்த மூன்று நிமிட பாடலில் இருக்கும் தெய்வீகம் மிகவும் அற்புதமானது. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம், இளையராஜா ஏன் இப்படி ஒரு எளிய முயற்சி செய்ய கூடாது என்றே தோன்றும். 'எளிய' என்று இங்கே சென்னது, இசையை அல்ல, திருவாசகத்திற்கு போட்ட பணமும், பல பேரின் உழைப்பும், காலமும் மிக மிக அதிகம். அதை வைத்து தான், இது போன்ற நம் பாடகர்கள், நம் இசையை வைத்தே திருவாசகத்தை விட பல மடங்கு அழகான இசையை இளையராஜாவால் கொடுக்க முடியும். அதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். கேட்டுப் பாருங்கள்.







பாடல்:

மாசறு பொன்னே வருக! திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக!!
கோல முகமும் குறுநகையும் குளிர்நிலவென
நீலவிழியும் பிறைநுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் (மாசறு)

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!

பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!
பாவம் விலகும் வினையகலும் உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும் (மாசறு)


நண்பர் குமரனிடம் இந்த பாடலை போட்டு காண்பித்தேன். அவருக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது. பாடலின் வரிகளை எழுதி தாருங்கள் என்றேன். அதோடு விளக்கத்தையும் சேர்த்தே கொடுக்கிறேன் என்று எழுதி கொடுத்தார். (நன்றி குமரன்) பாடலை மேலும் ரசிக்க, முழு பொருளையும் தெரிந்து கொள்ள - இங்கே:

மாசறு பொன்னே வருக! - குறையில்லாத தங்கமே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக! - திரிபுரம் எரித்து அதில் வாழ்ந்த அசுரர்களை அழித்த சிவபெருமானின் உடலில் பாதியாய் நிற்பவளே வருக
மாதவன் தங்காய் வருக - மாதவனாம் கண்ணனின் தங்கையே வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் - அழகான முகமும்
குறுநகையும் - புன்சிரிப்பும்
குளிர் நிலவென
நீல விழியும் - கருவிழியும்
பிறைநுதலும் - நிலாப்பிறை போன்ற நெற்றியும்
விளங்கிடும் எழில் - கொண்டு விளங்கிடும் அழகிய
நீலியென - கருநிறம் கொண்டவள் என
சூலியென - திரிசூலம் தரித்தவள் என
தமிழ்மறை தொழும் (மாசறு)

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனது ஆணைத் தனை
ஏற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே! - உலகம் புகழும் தேவாரமும் ஆழ்வார்கள் பாடிய தமிழ் மாலைகளும் அழகானவளே (சிவபெருமானாகவும் திருமாலாகவும் நிற்கும்) உன் பாதங்களைப் போற்றுகின்றன.

திரிசூலம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!
உனைத் துதித்திட
பாவம் விலகும்
வினை அகலும்
ஞானம் விளையும்
நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும் (மாசறு)

Thursday, November 10, 2005

அள்ளி வச்ச மல்லிகையே!

போன பதிவில் கிருஷ்ண சந்தர் பற்றி பார்த்தோம். உஷா அக்கா, எல்லா கிருஷ்ண சந்தர் பாடல்களையும் போடுங்க கேக்கலாம் அப்படின்னு சொல்லியிருந்தார்கள். 'அள்ளி வச்ச மல்லிகையே' பாடலையும் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் விருப்பமாக இந்த பதிவில் இரண்டு பாடல்கள் போட்டாச்சி. பாட்டு புடிக்கிறவங்க கேட்டு மகிழுங்கள்.

பாடல் 1: அள்ளி வச்ச மல்லிகையே
படம்: இளமை இதோ இதோ
இணை பாடகர்: P.சுசிலா
மிகவும் எளிமையாக தெரியும் பாடலின் ஓட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.





பாடல் 2: பூவாடை காற்று
படம்: கோபுரங்கள் சாய்வதில்லை
இணை பாடகர் : S. ஜானகி
பாடலின் தொடக்க கிடாரும், சரணத்தில் ("காணாத பூவின் ஜாதி" என்று தொடங்குவதில் இருந்து) வரும் வயலினும் என்னை கவர்ந்தவை.




Tuesday, November 08, 2005

சிலுக்குத் தாவணி

கிருஷ்ண சந்தர். மிக சிறந்த பாடகர் என்று சொல்லும் அளவுக்கு பாடவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க பாடல்களை பாடியவர் என்று உறுதியாக சொல்லலாம். இளையராஜா பொதுவாக சில பாடகர்களை அரிதாக பயன்படுத்தி இருப்பார். ஆனால் கொடுக்கும் பாடல்கள் சொல்லி வைத்து அடிப்பது போல இருக்கும். அதில் முதலில் வருபவர் கிருஷ்ண சந்தர். இதே போல் உமா ரமணன், சுனந்தா போன்ற பாடகிகளையும் சரியாக வேண்டிய பாடலுக்கு பயன்படுத்தியிருப்பார்.

கிருஷ்ண சந்தர் மொத்தமே இளையராஜா இசையில் 10ல் இருந்து 20 பாடல்கள் தான் பாடியிருப்பார். அத்தனையும் வந்த புதிதில் பட்டையை கிளப்பிய பாடல்களாக இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அந்த காலங்களில் இசையை ரசித்தவர்கள் சொல்லுங்கள்.

கிருஷ்ண சந்தர் பாடல்கள் சில பார்க்கலாம். இப்போது தெரியும் நான் சொல்வது உண்மை என்று.

1. ஏதோ மோகம்..ஏதோ தாகம்..நேற்று வர நெனைக்கலியே - கோழி கூவுது
2. அள்ளி வச்ச மல்லிகையே - இளமை இதோ இதோ
3. பூவாடை காற்றே..வந்து ஆடை - கோபுரங்கள் சாய்வதில்லை
4. ராஜா ராணி ராஜ்ஜியம் - அந்த சில நாட்கள்
5. தென்றல் என்னை முத்தம் இட்டது - ஒரு ஓடை நதியாகிறது.

இந்த பதிவில் ஒரு ஜாலி பாட்டு, கிருஷ்ண சந்தர் குரலில் கேட்கலாம். "அட! சிலுக்குத் தாவணி..காத்துல பறக்குது..பத்திரம் பத்திரம் பூங்கொடியே " . படம் 'கொம்பேறி மூக்கன்" என்று நினைக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.





Saturday, November 05, 2005

நானே நானா! யாரோ தானா!


வாணி ஜெயராம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன். மிகவும் ஒரு நல்ல பாடகி. ஏனோ இளையராஜா இசையில் மிக சில பாடல்களே பாடி இருக்கிறார். அதில் இருந்து ஒரு பாடலை இன்று கேட்கலாம்.

"அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படத்தில் இருந்து "நானே நானா! யாரோ தானா" என்ற பாடல். தொடக்க கிடாரும், சரணத்தில் வரும் குரூப் வயலினும் அழகு. கேட்டு பாருங்கள்.