கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, March 26, 2006

நீயா? நானா? யார் தான் இங்கே பெரியவன்!!

தேர்தல் நேரம். எங்க பார்த்தாலும் ஒரே போட்டிங்க. நடிகர் செந்தில் எல்லாம் கலைஞருக்கு சவால் விடும் நேரம் (நேரத்த பாத்தியலா), இங்கே பாட்டிலேயே சில பேர் போட்டி போடுறங்க. யாரு ஜெயிச்சான்னு பார்க்கலாமா?.

எனக்கு பிடித்த சில பாட்டுப் போட்டிகள், முதலில் எம்.ஜி.ஆர்-யிடம் நம்ம கலைவாணர் (சரியா தெரியலீங்க) ஒரு பழைய படத்தில் (விக்கிரமாதித்தன்??) தப்பையை வச்சிக்கிட்டு கேள்வி மேலே கேள்வியா கேட்டு பாடுவார். ரொம்ப நல்லா இருக்கும். (பாட்டு இப்படி போகும் 'உலகினிலேயே பயங்கரமான ஆயுதம் என்று?' இவர் கேட்க, கலைவாணர் 'கத்தி' 'அருவா' என்று அடுக்குவார். அப்புறம் இவர் ' உலகினிலே பயங்கரமான ஆயுதம் நாக்கு' என்று சொல்வார் (குஷ்புகிட்ட கேட்டா 'ஆமாங்க..ஆமாம்' அப்படின்னு மூனு தரம் சத்தியம் பண்ணுவார் :-). அப்புறம் இன்னொரு போட்டி பாக்கியராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் வரும். ஷோபனா சங்கீதத்தில் பட்டையை கிளப்ப, இவர் 'லல்லல்லா' வச்சே சமாளிப்பார். செம காமெடி பாட்டு. கடைசில நொந்து நூலா போய் ஷோபனா 'சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்' அப்படின்னு பரிசை இவருக்கு கொடுத்திருவார். டக்குன்னு நினைவுக்கு வர்ற இன்னொரு பாடல் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்'ல ஒரு பாட்டு. பாட்டு என்னன்னு மறந்து போச்சே :-(

சினிமாவுல எடுத்துக்கிட்டீங்கன்னா பொதுவா போட்டிப் பாட்டுல ஹீரோதாங்க ஜெயிப்பார். அவருக்கு பாட தெரியுதோ, ஆட தெரியுதோ அதெல்லாம் தெரியாது. கடைசில கதாநாயகிய கால் தடுக்கி தள்ளிவிட்டாவது ஹீரோவ ஜெயிக்க வச்சிடுவாங்க. நம்ம சூப்பர் ஸ்டார் ஆட்டத்துக்கு பிரபுதேவா, லாரன்ஸ் எல்லோரும் பிச்சை எடுக்கணும். பின்ன!! ஆடி தோத்தவங்க எத்தனை பேரு.ம்ம்ம்ம்..அப்படி பட்ட சில உலகதரம் வாய்ந்த சில போட்டிகளையும், உண்மையிலேயே சில உருப்படியான போட்டிகளையும் இந்த பதிவில் கேட்கலாம்.

சரி! முதல் பாடல். நம்ம சூப்பர் ஸ்டாரிடம் இருந்தே ஆரம்பிக்கிறேன். 'தங்க மகன்' படத்தில் இருந்து 'பூமாலை! ஒரு பாவை ஆனது'. எஸ்.பி.பியை விட்டா போட்டிப் பாடல்களுக்கு பாட முடியுமா?. எதிர் பாட்டு எஸ்.ஜானகி. அடடா! என்னமா ஒரு இசை. இப்படி பாட்டு எல்லாம் ராஜாவுக்கு அல்வா மாதிரி. ட்ரம்ஸ், ட்ரம்பட் என்று ஒரே வெஸ்டர்ன் கலக்கல். இங்கே ரஜினியோடு போட்டிப் போட்டு தோற்ற அம்மணி பூர்ணிமா. எப்படி தோப்பாங்க. ஐயகோ..இந்த கொடுமையை எல்லாம் கேட்க ஆளே இல்லீங்களா. சூப்பரு ஆடி ஆடி பாப்பாரு (ட்ரை பண்ணுவாரு)..அம்மணியும் சளைக்காமல் ஆடி பட்டைய கிளப்புவாங்க. அப்புறம் தலைவர் 'இது வேலைக்கு ஆறதுல்ல (பாட்டு முடிய போதுல்லா)' அப்படின்னு போட்டுக்கிட்டு இருக்குற சட்டைய கலட்டி எறிவாரு. பூர்ணிமா 'லே! என்னா இது! சின்னப்புள்ள தனமா இருக்கு!' அப்படின்னு திரு திருன்னு முழிப்பாங்க. 'சரி! போய் தொல' அப்படின்னு துப்பட்டாவ எடுத்து வீசுவாங்க. அப்புறம் தலைவர் போட்டுருக்கிற பனியனையும் வீச, 'நான் இந்த வெளாட்டுக்கு வரல' அப்படின்னு அம்மணி முழிச்சிக்கிட்டு ஒரு 20 செகண்ட் நிப்பாங்க. அவ்வளவு தாங்க. 'ஹே..ஹே..ஹே' அப்படின்னு எஸ்.பி.பி உச்சஸ்தாயில் பாட, தலைவர் ஜெயிச்சிடுவார். ரசிக கண்மணிங்க, விசிலடிச்சான் குஞ்சுங்க எல்லாம் 'தலைவா' அப்படின்னு கீழ கெடந்த பழைய லாட்டரி டிக்கட்ட எல்லாம் பொறுக்கி கிழிச்சி பூ மாதிரி வீசுவாங்க. சுபம். 'பாட்ட போடாம, இது என்ன வழ வழன்னு' யாரோ திட்டுறது கேக்குது. சரி! இந்தாங்க பாட்டு.





போன பாடலுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத பாடல் இரண்டாவது. 'வருசஷம் 16' படத்தில் இருந்து 'கரையாத மனமும் உண்டோ'. இந்த படம் கார்த்திக், பாஸில், குஷ்பு எல்லோருடைய திரை வாழ்வில் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு படம். பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம். படம் பற்றி சொல்லத் தேவை இல்லை. தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டீங்க.இந்த பாடல் முதலில் எனக்கு ரொம்ப கர்னாடிக் மாதிரி தெரிந்தது. ஆனால் கேட்க கேட்க ரொம்ப புடிச்சு போயிற்று. அதிலும் இரண்டாவது சரணத்தில் ராஜா செம கலக்கு கலக்கி இருப்பார். "மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும் காவல் தெய்வமும் நீயே' என்று ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு வரிக்கும், வரி முடியும் போதும் ஒவ்வொரு தாளத்தில் வரும். அதிலும் தபேலாவும், மிருதங்கமும் மாற்றி மாற்றி ஆவர்த்தன்ம் செய்யும். இப்படி பாடலுக்கு யேசுதாஸை விட்டா வேற ஆள். மனுசன் குரலில் தான் என்ன ஒரு உருக்கம். சித்ரா மட்டும் என்ன சும்மாவா. ரசித்துக்கொண்டே இருக்கலாம். இதோ ஒரு இசை கச்சேரி.





போன பாடல் ரொம்ப கர்னாடிக். இப்போ அதே போல உருப்படியான ஒரு போட்டி. ஆனா வெஸ்டர்னில். 'பாடு நிலாவே'யில் எல்லாமே ரொம்ப நல்ல பாடல்கள். ஆனால் ஏனோ 'மலையோரம் வீசும் காற்று தான் நிறைய பேருக்கு தெரிகிறது. இந்த போட்டி பாடல் 'வா வெளியே! இளம் பூங்குயிலே'. மறுபடியும் எஸ்.பி.பி. எதிர் பாட்டு சித்ரா. எனக்கு புடிச்ச ராஜாவின் ட்ரம்ஸ் பாடல்களில் இதுவும் ஒன்று. பல்லவி என்னா ஒரு பீட். ஏஸ்.பி.பி பாடலை தொடங்கும் போது லேசா மனோவோ என்று ஒர சந்தேகம் வந்து போகும். அப்புறம் ஒரு வரி பாடியதுமே தெரிஞ்சிடும். இது ஒரு க்ளைமாக்ஸ் பாடல். மோகனுக்கு க்ளைமாக்ஸ் கட்ட நதியாவின் அப்பா துப்பாக்கியோடு ரெடியா இருப்பார். போலிஸ் நதியாவை 'மேடம்! நீங்க கண்டிப்பா பாடணும். இல்லன்னா அவர் உயிருக்கு ஆபத்து' (என்ன லாஜிக்கோ..மறந்து போச்சுங்க :-) அப்படின்னு சொல்லி நதியாவை எதிர் பாட்டு பாட அனுப்புவாங்க. இது தெரியாம மோகன் அலம்பி பாடிகிட்டு இருப்பார். நதியா அழுதுகிட்டே, அதை காட்டிக்காம, எதிர்ப் பாட்டு பாடுவாங்க. மோகனின் அலம்பலை அப்படியே பாடும் விதத்தில் கொண்டு வந்திருப்பார் எஸ்.பி.பி. நதியாவின் சோகம் கலந்த பாடலை அழகாக பாடி இருப்பாங்க (அலம்பல் இல்லாம) சித்ரா. ரெண்டு தலை சிறந்த பாடகர்களை ரசிக்க இந்த பாடல் போதும். ட்ரம்ஸ்லயே போகும் பாடல், முதல் சரணம் முடிந்தவுடன் 'நான் அறிவேன் இளம் பூங்குயிலே' என்று சித்ரா பாடும் போது சட்டென்று தபேலாவுக்கு தாவி, பின் எஸ்.பி.பி 'நீ வா வெளியே இளம் பூங்குயிலே' என்று தொடரும் போது ஜிவ்வென்று ட்ரம்ஸ்க்கு தாவுவது கலக்கலாக இருக்கும். இப்படி ரசிக்க நிறைய இருக்கு இந்த பாடலில். இதோ உங்களுக்காக.





இப்போ நாலாவதா ஒரு பாடல். 'காதல் பரிசு' 'விக்ரம்' 'காக்கி சட்டை' போன்ற கமல் படங்களுக்கு ராஜாவின் இசை ரொம்பவே விஷேசமா இருக்கும். ராஜா-கமல்-எஸ்.பி.பி-ஜானகி என்று சும்மா பட்டையை கிளப்பிய காம்பினேஷன் இந்த படப் பாடல்கள். இதில் 'காதல் பரிசு'ல இருந்து 'ஏய்! உன்னை தானே'. டக்குன்னு உடனே ஒன்று சொல்லணும்னா, ஆண் குரல் இரண்டுக்கும் எஸ்.பி.பியே பாடி இருப்பார். மனுசன் என்ன வேணும்னாலும் பண்ணுவார். யப்பா! கமலுக்கு குரலும் பாலு தான். எதிர் ஆட்டம் போடும் சைனா (மாதிரி) காரனுக்கும் பாலு தான். சைனா காரனுக்ககு கொஞ்சம் தொண்டை கட்டின மாதிரி பாடுவார். சைடுல ராதா ஒரு கும்பலோடு அந்த சைனா காரனை கலாஞ்சிக்கிட்டு இருப்பாங்க. அந்த கால டிஸ்கோ பாட்டு. இங்கே.





இறுதியாக, சூப்பர் ஸ்டார்ல தொடங்கி சூப்பர்லயே முடிக்கிறேன். இந்த பாடலை நல்ல ஸ்பீக்கர்ல/ஹெட் போன்ல கேட்டீங்கன்னா அதோட அருமை தெரியுங்க. ராஜாவோட டாப் டென் (100 அல்ல :-)ல இந்த பாடல் கண்டிப்பா இருக்கணும். இநத ராஜாவை அடிக்கடி பார்க்க முடியாதது என் துரதிஷ்டமே. சும்மா ஒரு வில்லன் கிட்ட 'என்னம்மா! கண்ணு! சௌக்யமா' என்று ஹீரோ பாடுற மாதிரி ஒரு சாதாரண பாடல் தாங்க. ஆனா இந்த பாடலுக்கு இபபடி ஒரு இசை வடிவம் கொடுக்க முடியும் என்ற ராஜாவின் பரிணாமம் என்னை வியக்க வைத்த ஒன்று. இன்னைக்கு புது பாட்டு எல்லாம் பீட் பீட் என்று Woofer-அ அலற வைக்க புர் புர்னு ஒரு பேஸ் கிட்டரும், Synth ட்ரம்ஸுமா ஆகி போயிட்டு. ஆனா இந்த பாடலை கேட்டா எவ்வளவு ரிச்சா இருக்கு. சொல்ல வார்த்தைகள் வரலைங்க. பாட்ட கேளுங்க. ஐயோ! முக்கியமான ஒன்ன விட்டுட்டேனே! எஸ்.பி.பி-க்கு இணையாக சூப்பரா பாடி இருப்பார் மலேசியா வாசுதேவன். அவரோட பாடல்களில் சொல்லிக்கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று. சூப்பர் ஸ்டாரும், சத்யராஜும் இந்த பாடலில் ரொம்பவே நல்லா பண்ணி இருப்பாங்க. சரி! பாட்ட கேளுங்க.






அப்படியே இன்றைய பாடலை தினமும் கேட்க மறந்துடாதீங்க. மீண்டும் அடுத்த வாரம் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்

அன்புடன்
சிவா.

Wednesday, March 22, 2006

இன்றைய பாடல் (சின்ன அறிவிப்பு)

நண்பர்களே! வாரம் ஒரு பதிவு என்று சொல்லிவிட்டேன். ஏண்டா சொன்னோம்னு இருக்கு. பாட்டு போடாம தூக்கம் வரமாட்டேங்குது :-) . இருந்தாலும் தினமும் பதிவு போட நேரம் கிடைப்பதில்லை. சரி! என்ன பண்ணலாம்னு யோசித்ததில் ஒரு ஐடியா வந்தது.

தினமும் ஒரு பாடல் போடலாம். வெறும் பாடல் மட்டுமே. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து கேளுங்கள். நேரம் இருந்தால், அந்த பாடலை பற்றி ஏதாவது கேட்க/சொல்ல நினைத்தால் சொல்லலாம். எப்படி?.

இங்கே க்ளிக் செய்யுங்கள். இப்போ எனது ப்ளாக் வரும் (தனி பதிவு லிங்க் அல்ல).என்னுடைய ப்ளாக்கில் (மேலே வலது பக்கம்) எனது புகைப்படத்துக்கு கீழே Links என்று தெரிகிறதா. அதில் 'இன்றைய பாடல்' -க்கு கீழே ஒரு பாடல் தெரியும் (ரியல் ப்ளேயர்). அதில் தினமும் ஒரு பாடல் கேட்கலாம். உங்கள் கணிணியில் ரியல் ப்ளேயர் இருக்குதான்னு பாத்துக்கோங்க். தினமும் புடிசச பாட்டு ஒன்றை கொடுக்கிறேன். கேட்டு மகிழுங்கள். பாடல் எதுவாகவும் இருக்கலாம். படம் பெயர், பாடல், பாடியவர் எதுவும் கொடுக்கப் போவது இல்லை.

கேட்டு விட்டு அன்றைய பாடல் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லணும் என்றால் 'இன்றைய பாடல்' தொடுப்பிற்கு கீழே 'இன்றைய பாடல் - உங்கள் கருத்து இங்கே' என்ற தொடுப்பை க்ளிக் செய்து பின்னோட்டம் இடலாம்.

நேரம் இருக்கும் போது வாங்க. பாட்ட கேளுங்க. வழக்கம் போல திங்கள் கிழமை ஒரு பதிவோடு கண்டிப்பாக வருவேன்.

இந்த யோசனையை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்க. இன்றைய பாடல் கேட்டீங்களா..கேளுங்க.

அன்புடன்,
சிவா.

Sunday, March 19, 2006

அழகாக சிரித்தது அந்த நிலவு (ஜெயசந்திரன்)

ஒரு வாரத்திற்கு அப்புறம் மீண்டும் இந்த வார பதிவில் சந்திக்கிறோம். நான் தமிழ்மணத்தில் கவனித்துப் பார்த்ததில் ஒரு பாடகருக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. என்னைய மாதிரி, சுந்தர் மாதிரி, நிலா மாதிரி எஸ்.பி.பி என்று சொல்லாம 'என்னவே பாட்டு கேக்குறீர்! ஜெயசந்திரன் பாட்டு கேட்டுப் பாரும்வே. அது பாட்டு. நீரும் பாட்டு போடறீறே' அப்படின்னு அடிக்கடி நம்ம ராகவன் என்னை வம்புக்கு இழுக்கிறார். இவர் கூட ராமசந்திரன் உஷா, மரவண்டு கணேஷ் என்று ஜெயசந்திரன் அணிக்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. சரி! இவங்களையும் புடிச்சி கீதம்ல போடணும்னா அவங்க புடிச்ச பாட்டு போடணும்ல. அதுக்குத் தான் இந்த பதிவு. ஜெயசந்திரன் சிறப்புப் பதிவு.

"ஒங்க ராஜா (ஹி! ஹி!) வந்தப்புறம் தான் ஜெயசந்திரனுக்கு அவ்வளவா பாட்டு இல்லை. அவரு கொடுத்த (ஒரு 70 பாட்டு இருக்கும்) அத்தனையும் முத்துக்கள். ஆனா ராஜா வருவதற்கு முன்னாடி வரைக்கும் ஜெயசந்திரன் நெறைய பாடி இருக்கிறார்" - இப்படி நம்ம ராகவன் என்னிய வம்புக்கு இழுக்கிறார். அந்த சண்டைய நாங்க தனி மடலில் வச்சிக்கிட்டோம். இங்கே கீதத்தில் குடுமி புடி சண்டை எல்லாம் வேணாங்க :-). எப்படியோ அவரே ராஜா இசையில் ஜெயசந்திரன் பாடிய பாடல்கள் அனைத்தும் முத்துக்கள் என்று சொல்லிட்டார். அந்த முத்துக்களில் சில முத்துக்கள் இந்த பதிவில் கேட்கலாம். தேர்வு பண்ணி போடலாம்னா அத்தனையும் போடணும் போல. அது வேலைக்கு ஆகாதுன்னு, எனக்கு டக்குன்னு தோன்றிய ஒரு 5 பாடல்களை இந்த பதிவில் கொடுக்கிறேன்.

ஜெயசந்திரனை பற்றி சொல்லனும்னா, ஒரே நேர் கோட்டில் பாடும் (அங்கன இங்கன ஏத்தம் எறக்கம் இல்லாம) சில பாடகர்களில் ஒருவர். அதனால் இவர் பாடல் பொதுவாக மெலோடி பாடல்களாக இருக்கும். அதனால் மெலோடி பிரியர்களுக்கு ஜெயசந்திரன் பாடல்கள் அனைத்தும் சர்க்கரைப் பொங்கல் தான். இப்போ பாடலுக்கு போகலாம்.

முதலில் ஜிவ்வுன்னு ஒரு பாட்டு. இளையராஜா இசையில் 'டிசம்பர் பூக்கள்' படத்தில் இருந்து 'அழகாக சிரித்தது அந்த நிலவு'. ஜெயசந்திரன் பாடல்களில் இதை கொஞ்சம் வேகமான பாடல் என்று சொல்லலாம். ஜானகியின் கொஞ்சல்ஸ் அருமை. நல்ல ஒரு ட்ரம்ஸ்-ல் போகும் பாடல். இங்கே.








ராஜா ஜெயசந்திரனை நிறைய விஜயகாந்த் படங்களுக்கு தான் பயன் படுத்தி இருக்கிறார். வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோவில் கிழக்காலே,என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் இன்னும் சில. அந்த காலகட்ட நடிகர்களில் ஜெயசந்திரன் குரல் நன்றாக ஒத்துப்போன ஒரு நடிகர் விஜயகாந்த் தான். இந்த பாடல் எனக்கு ரொம்ப நாளா புடிக்காத பட்டியலில் இருந்து வந்தது. காரணம், இந்த பாடல் வெளிவந்து பட்டைய கெளப்பிக்கிட்டு இருந்த காலத்தில் நான் ரொம்ப சின்னப் பையன். இவ்வளவு உருக்கமா பாடினா அப்போ புடிக்குமா. அப்படியே கெடப்புல போட்டுட்டேன். கல்லூரி சேர்ந்தபின்பு தான் மறுபடி கேட்டுப் பார்த்தேன். அன்னைக்கு கேட்ட மாதிரியே இன்னிக்கும் அதே மாதிரி மெய் மறந்து கேட்டுக்கிட்டு இருக்கிறேன். 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் இருந்து 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி'. ஐயோ..என்னா பாட்டுங்க இது. 'நீரு நெலம் நாலு பக்கம் நான் திரும்பி பார்த்தாலும்' அப்படிங்கிற ரெண்டாவது சரணம் என்னோட Favorite. இப்போ பாடல்.






இந்த பாடலை பார்க்கும் போது எனக்கு ஒன்று மட்டும் தான் தோன்றும். எப்படி பாண்டியராஜனுக்கு ஜெயசந்திரனை தேர்வு செய்தார்கள். அதுவும் இப்படி ஒரு பாடல் பாண்டியராஜனுக்கு எப்படி. ஹாஹாஹா. நான் சொல்ற பாட்டு இது தாங்க. 'உள்ளம் கவர்ந்த கள்வன்' படத்தில் இருந்து 'எம் மனச பறி கொடுத்து, உம் மனசில் எடம் புடிச்சேன்'. பாண்டியராஜன்-ரேகா நடிப்பில் வெளி வந்த படம். பாணடியராஜனின் வழக்கமான காமெடி இல்லாமல் ரொம்ப சீரியஸ்-ஆன ஒரு காதல் படம் இது. நான் சின்ன புள்ளையில தியேட்டர்ல போய் பார்த்து முழிச்சிக்கிட்டு இருந்த ஒரு படம் :-). ஜெயசந்திரனுக்கு அல்வா மாதிரி ஒரு பாடல் இது. கேட்டுப் பாருங்க.







ரெயில்ல எல்லோரும் போயிருப்பீங்க. அந்த தடக் தடக் சத்தமும், அந்த விசில் சந்தமும் ஒரு அழகான மெட்டு கொடுக்கும். விசில்னா அந்த பழைய கரி எஞ்சின் தாங்க நச்சின்னு இருக்கும். இப்படி ஒரு மெட்டு எடுத்துக்கொடுக்கும் போது, அந்த சத்தத்தை வைத்து ராஜா ஒரு முழுப்பாடலை அழகாக கொடுத்திருப்பார். அது 'பாட்டுக்கு நான் அடிமை' படத்தில் இருந்து மனோ பாடிய 'தாலாட்டு கேட்காத' (ஏற்கனவே பதிவில் போட்டாச்சு). இந்த பாடலின் பல்லவியும் அது போல தான். 'முதல் இரவு' படத்தில் இருந்து 'மஞ்சள் நிலாவுக்கு இன்று' பாடல். நம்மை அறியாமல் முனுமுனுக்க வைக்கும் பாடல் இது. ஜோடி குரல் சுசிலா.





இறுதியாக மறுபடியும் விஜயகாந்த் படத்தில் இருந்து தான். விஜயகாந்த் படங்களில் இந்த படத்திற்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு. வெறும் பாட்டுக்காவும், சண்டைக்காகவும் பட்டித்தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய ஒரு படம். நல்ல பாடலும், சண்டையும் இருந்தா தெளிவான ஒரு திரைக்கதையால் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கலாம் என்று சொல்லிச் சென்ற படம்.(அப்போல்லாம் ஊருல 'சண்டை காட்சிகள் நிறைந்த' அப்படின்னு தான் போடுவாங்க. லே! 6 சண்டை இருக்குல என்று தான் படத்துக்கு மதிப்பெண் போடுவோம். சண்டையே இல்லாத படத்துக்கு தெரியாம போய் சிண்டை புடிச்சிக்கிட்டு ஒக்காந்துட்டு எவனாவது 'நல்ல கதை' அப்படின்னு சொன்னான் என்றால் நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு வருவோம். அது ஒரு காலம்). இதில் 'பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே' பாடலை தான் இங்கே கொடுக்கிறேன். நம்ம கேப்டன் ஆர்மோனிய பொட்டில கைய வச்சி, மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு உருக்கமா சங்கீத ஞானத்தோட பாடுற மாதிரி பாடி கிச்சி கிச்சி மூட்டினாலும், நான் படத்திலும் ரொம்பவே ரசிக்கும் ஒரு பாடல். சேர்ந்து பாடுவது ஜானகி.







( மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் )

Monday, March 13, 2006

இளையராஜா - எஸ்.பி.பி

இதுல என்ன விசேஷம் இருக்கு. இளையராஜா இசையில எஸ்.பி.பி பாடுவது வழக்கம் தானே என்று கேக்கறீங்களா. இது ராஜாவும் பாலுவும் சேர்ந்து பாடிய பாடல்களை பற்றிய பதிவு. நம்ம சினிமாவுல இரு பெண்குரல் பாடல்கள் நிறைய இருக்கிறது. கதாநாயகியுடன் தோழியும் சேர்ந்து பாடுவது போல நிறைய பாடல் இருக்கிறது. ஆனால் இரு ஆண்குரல் பாடல்கள் கொஞ்சம் கம்மி தான். காரணம் இரு கதாநாயகர்கள் படங்கள் குறைவு. அதிலும் ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா பெரும்பாலும் எழுச்சி பாடல்களாக, போட்டி பாடல்களாக தான் இருக்கும் (என்னம்மா கண்ணு, ஏ ராஜா ஒன்றானோம் இன்று).

ராஜாவும் பாலுவும் சேர்ந்து மிஞ்சி போனால் ஒரு ஐந்து பாடல் பாடி இருப்பார்கள். அதில் சிலவற்றை (அஞ்சில என்ன சிலது என்றீங்களா :-) இந்த பதிவுல பார்க்கலாம்.

முதலில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். இந்த படத்தை பற்றி ஏற்கனவே நிறைய சொல்லி விட்டேன். 'ஒரு படப் பாடல்' என்று இந்த படத்தில் உள்ள மொத்தமாக எல்லா பாடலையும் போட ஆசை தான். எஸ்.பி.பி கதாநாயகனாக நடித்த 'பாட்டுப் பாடவா' வில் இருந்து 'வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்'. B.R.விஜயலட்சுமியின் இயக்கத்தில் வந்த படம் என்று நினைக்கிறேன். இவர் ஒரு பெண் கேமிரா(உ)மேன். அப்புறம் இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையும் உண்டு.

ஹீரோயின் லாவண்யாவை எஸ்.பி.பியும் ரகுமானும் நினைத்துப் பாடுவதாக வரும் பாடல். ஒரு சரணம் இளையராஜா. இரண்டாவது சரணம் எஸ்.பி.பி. இசையை பொருத்தவரை ரொம்ப கலவையான ஒரு பாடல். மொத்த பாடலும் தபேலாவில் சென்றாலும், அங்கங்கே வித்தியாசமாக போகும் ('பூம்பாவையின் சேவைகள்' தொடங்கும் போதில் இருந்து). கலக்க பாடல்..உங்களுக்காக இங்கே.






இரண்டாவது. இந்த படத்தில் முத்துப்போல இரண்டு எஸ்.பி.பி பாடல் இருந்ததால், இந்த பாடல் அவ்வளவாக ஹிட் ஆகவில்லை. 'புது புது அர்த்தங்கள்' படத்தில் இருந்து 'எடுத்து நான் விடவா என் பாட்டை'. ஒருவகையில் ஜனகராஜ் ரொம்ப கொடுத்து வச்ச நடிகர். ராஜா அழகாக ஜனகராஜ் மாதிரி பாடக் கூடியவர். ஜனகராஜுக்கு ராஜாவின் குரலில் நிறைய பாடல்கள் இருக்கிறது. அதில் இந்த பாடல் ரொம்பவே ரசிக்கும் படி இருக்கும். காரணம், இதில் ஜனகராஜ் திக்குவாய் காரராக நடித்திருப்பார். எனவே பாடலிலும் நிறைய இடத்தில் இவர் திக்குவதும், எஸ்.பி.பி (ரகுமான்) 'வரலன்னா வுட்டுட்டு' அப்படின்னு கலாய்ப்பார். பாடல் இங்கே.






இறுதியாக, நிறைய பேர் கேட்டிருக்காத ஒரு அரிய அருமையான பாடல். 'உடன் பிறப்பு' படத்தில் இருந்து 'சோழர்குழ குந்தவை போல்'. சத்தியராஜ்-ரகுமான் நடித்த படம். இப்படி ஒரு சத்தியராஜ் படத்துக்கு இப்படி ஒரு பாடலா?. அதுவும் சத்தியராஜும் ரகுமானும் வேட்டிய காட்டிக்கிட்டு ரொம்ப இலக்கியத்தனாமா பாடிக்கிட்டு இருப்பாங்க. ஏனோ படத்திலும் ஒட்டவில்லை..பாடலும் காணாமல் போய் விட்டது. இரண்டு உயிர் நண்பர்கள். உனக்கு நான் இப்படி பெண் பார்க்கிறேன் என்று சொல்ல, அவர் பதிலுக்கு உனக்கு நான் இப்படி பெண் பார்க்கிறேன் என்று சொல்ல, ரொம்ப கவித்துவமான பாடல். பாடலின் வரிகளையும், ராஜாவும் பாலாவும் பாடும் விதத்தையும் கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். இது என்னோட விருப்பப் பாடல். கேட்டுப்பாருங்கள்.






இந்த மூன்று பாடல்களிலும் ரகுமான் இருக்கிறார். கடைசில ரகுமான் படப்பாடல்கள் மாதிரி ஆகி போச்சி :-).

இனி இரண்டு நேயர் விருப்பங்களை பார்க்கலாம். (தனி பதிவாக போடுவதை விட, இப்படி எல்லா பதிவிலும் சேர்த்து போடலாம் என்று நினைத்திருக்கிறேன். எல்லா பதிவிலும் நேயர் விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டது போல இருக்கும் அல்லவா).



முதலில் உஷா அக்கா விரும்பி கேட்ட 'போட்டேனே பூவிலங்கு'. 'பூவிலங்கு' படத்தில் இருந்து. முரளியின் ஆரம்ப கால படங்களில் ராஜாவின் இசை அபாரமாக இருக்கும். அதில் ராஜா பாடினா சூப்பர் ஹிட் என்று ஒரு சென்டிமென்டும் உண்டு. இந்த பாடல் ஜானகி பாடியது. இது எல்லா பெண்களுக்கும் (எங்க வீட்டுலயும :-) செண்டிமெண்டாக புடிக்குது. அது ஏன் என்று உஷா அக்கா சொல்வாங்க என்று நினைக்கிறேன். என் மனைவியின் பேவரைட் பாடலும் கூட. இங்கே.





அப்புறம் பரணி விரும்பி கேட்ட பாடல் ஒன்றையும் பார்க்கலாம். 'மீரா' படத்தில் இருந்து 'ஓ! பட்டர்ஃப்ளை'. ராஜா ஏன் இப்படி இப்போது கொடுப்பதில்லை என்று கேட்க வைக்கும் ஒரு கிளாசிகல் பாடல். விக்ரமோட முதல் படம் இதுவா. சரியா தெரியலை. ரொம்ப எதிர்ப்பார்ப்போட வந்து ஊத்தும் படங்களில் இதுவும் ஒன்று. மற்றபடி பாடல்கள் கலக்கலோ கலக்கல். 'புது ரோட்டுல தான்' யேசுதாஸ் மெலோடியும், 'லவ்வுன்னா லவ்வு..மண்ணெண்ண ஸ்டவ்வு' என்ற தத்துவபாடலும் இதில் தான். பாடல் இங்கே.






( நண்பர்களே! வேலை கொஞ்சம் அதிகமாகி விட்டதால் இனி வாரம் ஒரு பதிவாக போடலாம் என்று இருக்கிறேன். வாரம் திங்கள் கிழமை தோறும் ஒரு பதிவாக கொடுக்கிறேன். உங்களுக்கும் தினமும் வந்து பார்க்க வேண்டியதில்லை அல்லவா - அன்புடன் 'சிவா')

Friday, March 10, 2006

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே

சின்னதா ஒரு பதிவு. ராஜாவின் தபேலாக்கள் பொதுவாக மென்மையான மெலோடிகளையே கொடுத்திருக்கிறது. தாளம் போட வைக்கும் தபேலாக்கள் சிலதே. அதில் எனக்கு பிடித்த ஒரு பாடல். 'காவல் கீதம்' படத்தில் இருந்து 'சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே'. கிட்டத்தட்ட இதுவும் 'கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச' பாடலும் ஒரே மாதிரி தான் (ஒரே ராகமா?). தபேலாவும் மிருதங்கமும் கலந்த ஒரு எளிமையான ஒரு தாள மெட்டு. மயக்கும் எஸ்.பி.பி-ஜானகி குரல். பாடலை கேட்டுக்கிட்டு இருங்க, நேயர் விருப்பத்தில் சந்திப்போம்




Wednesday, March 08, 2006

நினைக்க தெரிந்த மனமே (யேசுதாஸ் - 2)

'நினைக்க தெரிந்த மனமே'. மோகன்-ரூபிணி நடிப்பில் வெளிவந்த படம். மோகன் படங்களுக்கு தன் வழக்கமான வகையறாக்களை தவிர்த்து, இந்த படத்தில் ராஜா ரொம்ப வித்தியாசமான இசையை கொடுத்திருப்பார். நிறைய பேருக்கு இது மோகன் பாட்டு என்றால் நம்ப முடியாது. அதனால் தானோ என்னவோ, படமும் சரியாக ஓடவில்லை.

முதன் முதலாக ஒரு மோகன் படத்துக்கு முழுவதும் யேசுதாஸை பயன்படுத்திய படம் என்று நினைக்கிறேன். மொத்தம் 5 பாடல்களில் 4 யேசுதாஸ். ஒன்று சித்ராவின் தனி பாடல். எஸ்.பி.பி குரலிலேயே மோகன் பாடலை கேட்டுவிட்டு, யேசுதாஸ் குரல் மோகனுக்கு (எஸ்.என்.சுரேந்தருக்கு :-)). இரவல் குரல் தானே). அவ்வளவாக ஒட்ட வில்லை என்பது உண்மை.

மற்றபடி பாடல்கள் என்று பார்த்தால், ராஜா வழக்கத்துக்கும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருப்பார். அத்தனை பாடலையும் ஒரு மெல்லிய ட்ரம்ஸ் இசையில் ஓட விட்டிருப்பார்.

இன்று இரண்டு பாடல்களை பார்க்கலாம். முதலில் 'கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்'. யேசுதாஸின் குரலில். இந்த பாடல் நம்ம பரணீ, சென்ற நேயர்விருப்பத்தில் தன் விருப்பமாக கேட்டிருந்தார். அவர் விருப்பமாகவும் இந்த பாடலை போடுகிறேன். இந்த பட பாடல்களுக்கு கவிஞர் யாரென்று தெரியவில்லை (இசை அமைப்பாளர், பாடகர் பெயர் போடும் 'Oriental Records', ஏனோ கவிஞர் பெயரை விட்டு விடுகிறார்கள்). தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எல்லா பாடல்களிலுமே பாடல் வரிகள் அழகா இருக்கும். ரொம்பவே ஒரு மென்மையான பாடல். யேசுதாஸின் குரலின் இன்னும் கொஞ்சம் பாடல் வழுக்கி ஓடுவது உண்மை.





இரண்டாவது. 'எங்கெங்கு நீ சென்ற போதும்'. தொடக்க கிடார் (prelude) ரொம்ப அழகு. சித்ராவின் குரலிலும் யேசுதாஸின் குரலிலும் தான் என்ன குழைவு. First interlude-ல் ட்ரம்ஸ் ரொம்பவே கலக்கலாக இருக்க்ம். சட்டென்று சரணத்தில் கஜல் டைப் தபேலா இசைக்கு பாடல் தாவுவதும், அப்புறம் பல்லவில் பேஸ் ட்ரம்ஸ் மாதிரி ஒரு இசைக்கு தாவுவதும் ரொம்பவே அழகு. கேட்டுப்பாருங்களேன்.




Sunday, March 05, 2006

உமா ரமணன்

சில பேரை நமக்கு ஏன் புடிக்குது? எதுக்கு புடிக்குது என்றேல்லாம் சொல்ல முடியாது. ஆனால் எல்லோரையும் விட அவரை ரொம்ப புடிக்கும். அப்படி எனக்கு புடித்த பாடகி என்று யாராவது கேட்டால் உமா ரமணன் என்று சொல்வேன். ஏன் புடிக்கும்?. தெரியாது. ஏன். அதை விட ஜானகி, சித்ரா எல்லாம் திறமையான பாடகிகள். அப்படி இருக்க உமா ரமணன் புடிக்க காரணம். தெரியாது?. ஏனோ புடிச்சி போச்சு.

இப்படித்தான் என் அண்ணன் டெல்லியில் இருக்கும் போது ஒரே ஹிந்தி கேசட்டா கொண்டு வருவான். சுத்தமா புரியலைன்னாலும், கேட்பதுண்டு. அப்படி கேட்டு கேட்டு Alka Yagnik-ம் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சு. ரெண்டு மூனு வருசமா Alka Yagnik பாட்டு எங்க கெடைச்சாலும் தேடி கேட்பேன். அப்புறம் அப்படியே விட்டாச்சி.

இப்படித்தான் நம் மனசுக்கு புடிக்க ஒருவர் No.1 இடத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை. அப்படி எனக்கு புடிச்ச உமா ரமணன் பாடல்கள் சில இந்த பதிவில்.

உமா ரமணன் என்றவுடன் 'பூங்கதவே' பாடல் எல்லாருக்குமே நினைவுக்கு வரும். ஒரு காவிய பாடல் இது. ராஜாவின் இசை ராஜாங்கம். அந்த prelude..அப்பப்பா..அப்புறம் தீபன் மற்றும் உமாவின் தெளிந்த நீரோடை போல குரல். சரணத்தில் ஒருவர் பாட, மாற்றவர் 'ம்ம்ம்ம்' என்று பாடிக்கொண்டே வருவது ரொம்பவே அழகாக இருக்கும். பாடல் இங்கே.





இரண்டாவது பாடல். சேர்ந்து பாடுவது உன்னி மேனன். 'ஒரு கைதியின் டைரி'யில் இருந்து 'பொன்மானே..கோபம் ஏனோ'. அலுக்காத ஒரு பாடல். பாடலின் முடிவில் (பல்லவி) யேசுதாஸின் குரலுக்கு ('பொன்மானே' என்று ஆரம்பிக்கும் போது) ஒரு சிணுங்கல் குரல் கொடுப்பார். சூப்பரா இருக்கும். இப்போ பாட்டு.





இறுதியாக, 80S-ல இருந்து அப்படியே 90S-க்கு வறேன். கிட்டத்தட்ட 'மாசிமாசம்' (தர்மதுரை) பாடல் போல ஒரு பாடல். 'எங்க தம்பி' படத்தில் இருந்து அருண்மொழியோட கலக்கல் குரலோடு 'இது மானோடு மயிலாடும் காடு'.






கடைசியா எனக்கு ரொம்ப புடிச்ச உமா பாடல் ஒன்று. மலேசியா வாசுதேவனுடன் செம ஸ்பீடா ஒரு பாட்டு. 'மல்லு வேட்டி மைனர்' படத்தில் இருந்து 'ஒன்ன பார்த்த நேரத்துல ஒலகம் மறந்து போனதடி'..ஐயோ..பாட்டு என்ன ஒரு ஓட்டம்..உமா இரண்டாவது சரணத்தில் 'நீராடும் நேரம் பார்த்து' அப்படின்னு தொடங்கும் போது சும்மா ஜிவ்வுன்னு போகும் பாட்டு.






'ஆனந்த ராகம்' 'செவ்வந்தி பூக்களில்' 'நில் நில் நில்' 'பூபாளம் இசைக்கும்' என்று இன்னும் நிறைய பாடல்களை சொல்லலாம். மெதுவா இந்த பாடல்களை போடுகிறேன்.

Friday, March 03, 2006

நச்சுன்னு நாலு பாட்டு

ஆமாங்க. நச்சுன்னு நாலு பாட்டு கேக்கலாம். வழ வழன்னு நான் எதுவும் சொல்ல போறதுல்ல (அப்பாடான்னு நீங்க சொல்றது கேக்குது :-). நேரே பாட்டு தான். என்ன பாட்டுன்னு கூட சொல்ல போறதில்லை (சும்மா..கேக்கும் போது உங்களுக்கு ஒரு surprise-ஆ இருக்கட்டுமேன்னு தான்).

பாட்ட கேட்டுட்டு உங்களுக்கு என்ன தோணுதோ அதை பின்னூட்டத்துல எழுதுங்க.

பாட்டு ஒன்னு. இது மோகன் பாட்டு...என்னவா இருக்கும்..கேட்டுப்பாருங்க.





ரெண்டாவது பாட்டு. இந்த பாட்ட கேட்டா கிராமத்து நெனைவெல்லாம் வருதுங்க :-) ..ராமராஜன் பாட்டு...நீங்க நெனைச்சப்பாட்டு தானா..கேட்டுப்பாருங்க..





நச்சுன்னு நாலுன்னா..அதுல தலைவர் பாட்டு இல்லாமலா...இதோ..





ஏம்பா தம்பி..பொண்ணு மட்டும் பாடுற மாதிரி தனிப்பாட்டு ஒன்னு போடுன்னு நம்ம ப்ளாக் ஆக்காவெல்லாம் கேக்குறது தெரியுது...சித்ரா பாட்டு போடுறேங்க..உங்களுக்கு புடிக்கும் கண்டிப்பா :-).




Wednesday, March 01, 2006

உன் எண்ணம் எங்கே எங்கே

'தம்பி பொண்டாட்டி' . இப்படி ஒரு படம் 1992-ல வந்தது. ரகுமான், ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்கள். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்க்க காத்துக்கிடந்த காலத்தில் நான் ரொம்ப ரசித்த பாடல் இது. ரொம்ப நாளா இந்த பாடலை போடலாம்னா, நிறைய பேருக்கு தெரியாத, அவ்வளவாக ஹிட் ஆகாத பாட்டு. அதான் அப்படியே கிடப்பில் போட்டுட்டேன். சரி இன்னைக்கு ரிலீஸ் பண்ணுறேன். அருமையான, சொல்லப்போனால் சூப்பரான பாடல். எனக்கு ராஜாவின் இந்த பாடலும், காதல் ஓவியம் பாடலும் ஒன்றே. இரண்டையும் ஒரே ரசனையுடன் ரசிப்பேன். என்னைப் பொருத்த வரையில் ராஜா இந்த மாதிரி பாடல்களில் காட்டியிருக்கும் திறமை அதிகம். அதை ரசிக்க எனக்கு ஒரு ரசனையை கொடுத்த கடவுளுக்கு நன்றி. ஏனோ வெறும் காதல் ஓவியம், இதயக் கோவில், உதய கீதம் என்று ராஜா பாடல்களை ஒரு 50 படங்களுக்குள் அடக்கிக்கொண்டது வெகுஜனம்.

பாடல் 'உன் எண்ணம் எங்கே எங்கே'. சுனந்தா பாடியது. படத்தில் ரம்யா கிருஷ்ணன் மாடலிங் செய்ய இந்த பாடல் ஒலிக்கும்.

முதலில் எனக்கு பிடித்தது தபேலாவையும் ட்ரம்ஸையும் கலந்து ராஜா அமைத்திருக்கும் பீட்(Beat). என் மனதை அப்படியே அள்ளிக்கொண்டு போகும். அப்புறம் மொத்த பாடலே ஒரு அருமையான இசை கலவை (Fusion). சீரான மெட்டில் பாடல் ஓடிக்கொண்டிருக்க, வயலின், வீணை, புல்லாங்குழல் என்று கலந்து ஓடும் பாடல் முழுக்க. ( Listen all ludes). மூன்றாவதா, சுனந்தாவின் (Sunantha) குரல். ரொம்ப சில பாடல்களே பாடினாலும், அத்தனையும் ராஜாவின் இசையில் ரொம்ப நல்லா இருக்கும். அதிலும் இந்த பாடல் ரொம்பவே அருமை.

முதலிலேயே சொல்லிட்டேன். இந்த பாடலுக்கு இவ்வளவு பில்ட்-அப் பா என்று சொல்லாதீங்க. இது என் ரசனை அவ்வளவே :-)). (எப்பவாவது என்னுடைய விருப்பமும் போடலாம்லா :-)).

பாடலுக்கு இங்கே.