நீயா? நானா? யார் தான் இங்கே பெரியவன்!!
தேர்தல் நேரம். எங்க பார்த்தாலும் ஒரே போட்டிங்க. நடிகர் செந்தில் எல்லாம் கலைஞருக்கு சவால் விடும் நேரம் (நேரத்த பாத்தியலா), இங்கே பாட்டிலேயே சில பேர் போட்டி போடுறங்க. யாரு ஜெயிச்சான்னு பார்க்கலாமா?.
எனக்கு பிடித்த சில பாட்டுப் போட்டிகள், முதலில் எம்.ஜி.ஆர்-யிடம் நம்ம கலைவாணர் (சரியா தெரியலீங்க) ஒரு பழைய படத்தில் (விக்கிரமாதித்தன்??) தப்பையை வச்சிக்கிட்டு கேள்வி மேலே கேள்வியா கேட்டு பாடுவார். ரொம்ப நல்லா இருக்கும். (பாட்டு இப்படி போகும் 'உலகினிலேயே பயங்கரமான ஆயுதம் என்று?' இவர் கேட்க, கலைவாணர் 'கத்தி' 'அருவா' என்று அடுக்குவார். அப்புறம் இவர் ' உலகினிலே பயங்கரமான ஆயுதம் நாக்கு' என்று சொல்வார் (குஷ்புகிட்ட கேட்டா 'ஆமாங்க..ஆமாம்' அப்படின்னு மூனு தரம் சத்தியம் பண்ணுவார் :-). அப்புறம் இன்னொரு போட்டி பாக்கியராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் வரும். ஷோபனா சங்கீதத்தில் பட்டையை கிளப்ப, இவர் 'லல்லல்லா' வச்சே சமாளிப்பார். செம காமெடி பாட்டு. கடைசில நொந்து நூலா போய் ஷோபனா 'சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்' அப்படின்னு பரிசை இவருக்கு கொடுத்திருவார். டக்குன்னு நினைவுக்கு வர்ற இன்னொரு பாடல் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்'ல ஒரு பாட்டு. பாட்டு என்னன்னு மறந்து போச்சே :-(
சினிமாவுல எடுத்துக்கிட்டீங்கன்னா பொதுவா போட்டிப் பாட்டுல ஹீரோதாங்க ஜெயிப்பார். அவருக்கு பாட தெரியுதோ, ஆட தெரியுதோ அதெல்லாம் தெரியாது. கடைசில கதாநாயகிய கால் தடுக்கி தள்ளிவிட்டாவது ஹீரோவ ஜெயிக்க வச்சிடுவாங்க. நம்ம சூப்பர் ஸ்டார் ஆட்டத்துக்கு பிரபுதேவா, லாரன்ஸ் எல்லோரும் பிச்சை எடுக்கணும். பின்ன!! ஆடி தோத்தவங்க எத்தனை பேரு.ம்ம்ம்ம்..அப்படி பட்ட சில உலகதரம் வாய்ந்த சில போட்டிகளையும், உண்மையிலேயே சில உருப்படியான போட்டிகளையும் இந்த பதிவில் கேட்கலாம்.
சரி! முதல் பாடல். நம்ம சூப்பர் ஸ்டாரிடம் இருந்தே ஆரம்பிக்கிறேன். 'தங்க மகன்' படத்தில் இருந்து 'பூமாலை! ஒரு பாவை ஆனது'. எஸ்.பி.பியை விட்டா போட்டிப் பாடல்களுக்கு பாட முடியுமா?. எதிர் பாட்டு எஸ்.ஜானகி. அடடா! என்னமா ஒரு இசை. இப்படி பாட்டு எல்லாம் ராஜாவுக்கு அல்வா மாதிரி. ட்ரம்ஸ், ட்ரம்பட் என்று ஒரே வெஸ்டர்ன் கலக்கல். இங்கே ரஜினியோடு போட்டிப் போட்டு தோற்ற அம்மணி பூர்ணிமா. எப்படி தோப்பாங்க. ஐயகோ..இந்த கொடுமையை எல்லாம் கேட்க ஆளே இல்லீங்களா. சூப்பரு ஆடி ஆடி பாப்பாரு (ட்ரை பண்ணுவாரு)..அம்மணியும் சளைக்காமல் ஆடி பட்டைய கிளப்புவாங்க. அப்புறம் தலைவர் 'இது வேலைக்கு ஆறதுல்ல (பாட்டு முடிய போதுல்லா)' அப்படின்னு போட்டுக்கிட்டு இருக்குற சட்டைய கலட்டி எறிவாரு. பூர்ணிமா 'லே! என்னா இது! சின்னப்புள்ள தனமா இருக்கு!' அப்படின்னு திரு திருன்னு முழிப்பாங்க. 'சரி! போய் தொல' அப்படின்னு துப்பட்டாவ எடுத்து வீசுவாங்க. அப்புறம் தலைவர் போட்டுருக்கிற பனியனையும் வீச, 'நான் இந்த வெளாட்டுக்கு வரல' அப்படின்னு அம்மணி முழிச்சிக்கிட்டு ஒரு 20 செகண்ட் நிப்பாங்க. அவ்வளவு தாங்க. 'ஹே..ஹே..ஹே' அப்படின்னு எஸ்.பி.பி உச்சஸ்தாயில் பாட, தலைவர் ஜெயிச்சிடுவார். ரசிக கண்மணிங்க, விசிலடிச்சான் குஞ்சுங்க எல்லாம் 'தலைவா' அப்படின்னு கீழ கெடந்த பழைய லாட்டரி டிக்கட்ட எல்லாம் பொறுக்கி கிழிச்சி பூ மாதிரி வீசுவாங்க. சுபம். 'பாட்ட போடாம, இது என்ன வழ வழன்னு' யாரோ திட்டுறது கேக்குது. சரி! இந்தாங்க பாட்டு.
போன பாடலுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத பாடல் இரண்டாவது. 'வருசஷம் 16' படத்தில் இருந்து 'கரையாத மனமும் உண்டோ'. இந்த படம் கார்த்திக், பாஸில், குஷ்பு எல்லோருடைய திரை வாழ்வில் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு படம். பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம். படம் பற்றி சொல்லத் தேவை இல்லை. தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டீங்க.இந்த பாடல் முதலில் எனக்கு ரொம்ப கர்னாடிக் மாதிரி தெரிந்தது. ஆனால் கேட்க கேட்க ரொம்ப புடிச்சு போயிற்று. அதிலும் இரண்டாவது சரணத்தில் ராஜா செம கலக்கு கலக்கி இருப்பார். "மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும் காவல் தெய்வமும் நீயே' என்று ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு வரிக்கும், வரி முடியும் போதும் ஒவ்வொரு தாளத்தில் வரும். அதிலும் தபேலாவும், மிருதங்கமும் மாற்றி மாற்றி ஆவர்த்தன்ம் செய்யும். இப்படி பாடலுக்கு யேசுதாஸை விட்டா வேற ஆள். மனுசன் குரலில் தான் என்ன ஒரு உருக்கம். சித்ரா மட்டும் என்ன சும்மாவா. ரசித்துக்கொண்டே இருக்கலாம். இதோ ஒரு இசை கச்சேரி.
போன பாடல் ரொம்ப கர்னாடிக். இப்போ அதே போல உருப்படியான ஒரு போட்டி. ஆனா வெஸ்டர்னில். 'பாடு நிலாவே'யில் எல்லாமே ரொம்ப நல்ல பாடல்கள். ஆனால் ஏனோ 'மலையோரம் வீசும் காற்று தான் நிறைய பேருக்கு தெரிகிறது. இந்த போட்டி பாடல் 'வா வெளியே! இளம் பூங்குயிலே'. மறுபடியும் எஸ்.பி.பி. எதிர் பாட்டு சித்ரா. எனக்கு புடிச்ச ராஜாவின் ட்ரம்ஸ் பாடல்களில் இதுவும் ஒன்று. பல்லவி என்னா ஒரு பீட். ஏஸ்.பி.பி பாடலை தொடங்கும் போது லேசா மனோவோ என்று ஒர சந்தேகம் வந்து போகும். அப்புறம் ஒரு வரி பாடியதுமே தெரிஞ்சிடும். இது ஒரு க்ளைமாக்ஸ் பாடல். மோகனுக்கு க்ளைமாக்ஸ் கட்ட நதியாவின் அப்பா துப்பாக்கியோடு ரெடியா இருப்பார். போலிஸ் நதியாவை 'மேடம்! நீங்க கண்டிப்பா பாடணும். இல்லன்னா அவர் உயிருக்கு ஆபத்து' (என்ன லாஜிக்கோ..மறந்து போச்சுங்க :-) அப்படின்னு சொல்லி நதியாவை எதிர் பாட்டு பாட அனுப்புவாங்க. இது தெரியாம மோகன் அலம்பி பாடிகிட்டு இருப்பார். நதியா அழுதுகிட்டே, அதை காட்டிக்காம, எதிர்ப் பாட்டு பாடுவாங்க. மோகனின் அலம்பலை அப்படியே பாடும் விதத்தில் கொண்டு வந்திருப்பார் எஸ்.பி.பி. நதியாவின் சோகம் கலந்த பாடலை அழகாக பாடி இருப்பாங்க (அலம்பல் இல்லாம) சித்ரா. ரெண்டு தலை சிறந்த பாடகர்களை ரசிக்க இந்த பாடல் போதும். ட்ரம்ஸ்லயே போகும் பாடல், முதல் சரணம் முடிந்தவுடன் 'நான் அறிவேன் இளம் பூங்குயிலே' என்று சித்ரா பாடும் போது சட்டென்று தபேலாவுக்கு தாவி, பின் எஸ்.பி.பி 'நீ வா வெளியே இளம் பூங்குயிலே' என்று தொடரும் போது ஜிவ்வென்று ட்ரம்ஸ்க்கு தாவுவது கலக்கலாக இருக்கும். இப்படி ரசிக்க நிறைய இருக்கு இந்த பாடலில். இதோ உங்களுக்காக.
இப்போ நாலாவதா ஒரு பாடல். 'காதல் பரிசு' 'விக்ரம்' 'காக்கி சட்டை' போன்ற கமல் படங்களுக்கு ராஜாவின் இசை ரொம்பவே விஷேசமா இருக்கும். ராஜா-கமல்-எஸ்.பி.பி-ஜானகி என்று சும்மா பட்டையை கிளப்பிய காம்பினேஷன் இந்த படப் பாடல்கள். இதில் 'காதல் பரிசு'ல இருந்து 'ஏய்! உன்னை தானே'. டக்குன்னு உடனே ஒன்று சொல்லணும்னா, ஆண் குரல் இரண்டுக்கும் எஸ்.பி.பியே பாடி இருப்பார். மனுசன் என்ன வேணும்னாலும் பண்ணுவார். யப்பா! கமலுக்கு குரலும் பாலு தான். எதிர் ஆட்டம் போடும் சைனா (மாதிரி) காரனுக்கும் பாலு தான். சைனா காரனுக்ககு கொஞ்சம் தொண்டை கட்டின மாதிரி பாடுவார். சைடுல ராதா ஒரு கும்பலோடு அந்த சைனா காரனை கலாஞ்சிக்கிட்டு இருப்பாங்க. அந்த கால டிஸ்கோ பாட்டு. இங்கே.
இறுதியாக, சூப்பர் ஸ்டார்ல தொடங்கி சூப்பர்லயே முடிக்கிறேன். இந்த பாடலை நல்ல ஸ்பீக்கர்ல/ஹெட் போன்ல கேட்டீங்கன்னா அதோட அருமை தெரியுங்க. ராஜாவோட டாப் டென் (100 அல்ல :-)ல இந்த பாடல் கண்டிப்பா இருக்கணும். இநத ராஜாவை அடிக்கடி பார்க்க முடியாதது என் துரதிஷ்டமே. சும்மா ஒரு வில்லன் கிட்ட 'என்னம்மா! கண்ணு! சௌக்யமா' என்று ஹீரோ பாடுற மாதிரி ஒரு சாதாரண பாடல் தாங்க. ஆனா இந்த பாடலுக்கு இபபடி ஒரு இசை வடிவம் கொடுக்க முடியும் என்ற ராஜாவின் பரிணாமம் என்னை வியக்க வைத்த ஒன்று. இன்னைக்கு புது பாட்டு எல்லாம் பீட் பீட் என்று Woofer-அ அலற வைக்க புர் புர்னு ஒரு பேஸ் கிட்டரும், Synth ட்ரம்ஸுமா ஆகி போயிட்டு. ஆனா இந்த பாடலை கேட்டா எவ்வளவு ரிச்சா இருக்கு. சொல்ல வார்த்தைகள் வரலைங்க. பாட்ட கேளுங்க. ஐயோ! முக்கியமான ஒன்ன விட்டுட்டேனே! எஸ்.பி.பி-க்கு இணையாக சூப்பரா பாடி இருப்பார் மலேசியா வாசுதேவன். அவரோட பாடல்களில் சொல்லிக்கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று. சூப்பர் ஸ்டாரும், சத்யராஜும் இந்த பாடலில் ரொம்பவே நல்லா பண்ணி இருப்பாங்க. சரி! பாட்ட கேளுங்க.
அப்படியே இன்றைய பாடலை தினமும் கேட்க மறந்துடாதீங்க. மீண்டும் அடுத்த வாரம் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்
அன்புடன்
சிவா.