இளையராஜா!!. நான் அவர் இசைக்கு ரசிகன் என்று மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் அவரை ரசிப்பேன். அவர் போஸ்டர் பார்த்தால் சந்தோசம். அவர் பேச்சை கேட்டால் சந்தோசம். கிட்டத் தட்ட, ஒரு நடிகனின் ரசிகன் போல மாறிப் போனேன். திருவாசகம் ஒலிப்பேழை (CD) வந்த போது அதை எடுத்துக் கொண்டு கடை கடையாக அலைந்து, முன் அறிமுகம் இல்லாத பேரிடம் மூக்குடை பட்ட போதும் ; பட துவக்கத்தில் இசை 'இளையராஜா' என்று வரும் போது , "தலைவா" என்று கத்துவதை பார்த்து, என் மனைவி "ம்ம்ம்ம்" என்று கண்ணை உருட்டி எச்சரிக்கை விடும் போதும் :-) இது நமக்கு தேவையா என்று சில சமயம் நினைப்பதுண்டு.
ஆனால் இது போன்ற பாடலை கேட்கும் போது, நம் ரசனை சரியே என்று தோன்றும். அப்படி என்ன பாட்டு என்று கேக்கறீங்களா. சில பாடல்கள் நம் செவியையும் தாண்டி, நம் உள் மனதை வருடிச் செல்லும். அதை ராஜாவின் இசையில் நான் நிறைய அனுபவித்திருக்கிறேன். அதில் ஒன்று இந்த பாடல்.
"மீண்டும் ஒரு காதல் கதை" - இப்படி ஒரு படத்தை நான் எங்கும் பார்த்ததில்லை. ஆனால் K TV-ல் அடிக்கடி இந்த பாடல் போடுவார்கள். பிரதாப்பும் ராதிகாவும் மனநிலை பாதித்த வளர்ந்த குழந்தைகளாக ஒரு இல்லத்தில் விளையாடிக் கொண்டிருக்க, இந்த பாடல் பின்னனியில் ஓடிக் கொண்டிருக்கும்.
பாடல் : அதிகாலை நேரமே..
படம் : மீண்டும் ஒரு காதல் கதை
பாடியவர்கள் : S.P.B & S.ஜானகி
இசை : "இசைஞானி" இளையராஜா