கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, May 30, 2006

பாசில் - இளையராஜா

நண்பர்களே! போன வாரம் கமல்-ராஜா கூட்டணியில் சில பாடல்களை கேட்டோம். பதிவில் பின்னூட்டங்களை பார்க்கும் போது, பதிவு அந்த கூட்டணி மாதிரியே சூப்பர் ஹிட் ஆகி விட்டது. நண்பர் சாணக்கியனுக்கு தான் நன்றி சொல்லணும்.

இந்த வாரம் ஒரு இயக்குனர்-ராஜா கூட்டணியை எடுத்து பாடல் போடலாம் என்று நினைத்தேன். இயக்குனர் என்றால் ஒரு பெரிய பட்டியல் வரும். பாரதிராஜாவில் தொடங்கி, மணிரத்னம், ஆர்.வி.உதயகுமார் என்று நிறைய இருக்கிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே தொடக்கம் முதல் இன்று வரை ஒரு படம் விடாமல் ராஜாவின் இசையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முதல் இடம் இயக்குனர் பாசிலுக்கு தான். பூவே பூச்சூடவா- வில் ஆரம்பித்து 'ஒரு நாள் ஒரு கனவு' வரை இந்த கூட்டணி சிதறாமல் தொடர்கிறது. நான் இங்கு எடுத்துக் கொள்வது தமிழ் படங்கள் மட்டும் தான். பாசில் மலையாளத்தில் ரொம்ப அரிதாகவே ராஜாவை பயன்படுத்தி இருக்கிறார் (மலையாளம் 'காதலுக்கு மரியாதை' (Aniyathi Pravu) யே ராஜா கிடையாது). ஆனால் தமிழில் ராஜா இல்லாமல் பாசில் படம் இயக்கியது இல்லை.

பாசிலிடம் எனக்கு பிடிக்காத ஒன்று. யேசுதாஸ். விஜய் ஹீரோவாக இருந்தாலும் சரி, வடிவேலு ஹீரோவாக இருந்தாலும் சரி. கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் யேசுதாஸ் தான் பாட வேண்டும். போனால் போகட்டும் என்று மற்ற பாடகர்களுக்கு சில சமயம் வாய்ப்பு கிடைக்கும் (எஸ்.பி.பி-க்கே சான்ஸ் அரிது தான்). இது எனக்கு பாசில் படப்பாடல்கள் எல்லாமே ஒரே அச்சில் வார்த்த கொழுக்கட்டை மாதிரி ஒரே மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும்.

பாசில் படங்கள் எல்லாவற்றிலும் ஒரு பாடலை இந்த பதிவில் கேட்கலாம்.

1. பூவே பூச்சூடவா (1985)

பாசிலின் முதல் தமிழ் படம். இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த ரெண்டு நதியாவும், சின்னக் குயில் சித்ராவும். 'சின்னக் குயில் பாடும் பாட்டு' எப்போதும் எனக்கு பிடித்தப் பாடல். பத்மினி பாட்டியும் நதியா பேத்தியும் பாசமழை பொழிந்த படம். இடையில் வரும் எஸ்.வி.சேகர் வில்லத்தனம் ரசிக்கும் படி இருக்கும். சித்ராவுக்கு விருது கிடைத்த படம் என்று நினைக்கிறேன். சித்ராவின் இளம் குரலில் 'பூவே பூச்சூடவா' பாடல்.2. பூவிழி வாசழிலே (1987)

பாசில் படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்தபடம் இது தான். முதல் படத்தில் செண்டிமெண்ட் கொடுத்தாலும், அடுத்த படத்திலேயே ஒரு த்ரில்லரை, அதுவும் கொஞ்சம் கூட பிசகாமல் பக்காவாக கொடுத்திருப்பார் பாசில். முதல் காட்சியில் அந்த குழந்தை ஒரு கொலையை பார்க்க, அதன் அம்மா கொல்லப்படும் காட்சியில் இருந்தே படம் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும். ரகுவரன் & கோ அந்த குழந்தையை சத்தியராஜிடம் இருந்து கடத்த முயலும் ஒவ்வொரு காட்சியும் அக்மார்க் த்ரில்லர். பாடலாகட்டும் பின்னணி இசை ஆகட்டும் ராஜா கலக்கி இருப்பார். வழக்கம் போல இரண்டு யேசுதாஸ் பாடல். ராஜா கலக்கி இருந்த மலேசியா வாசுவின் 'பாட்டிங்கே' (க்ளப் பாடல்) அவ்வளவாக எடுபடாததில் எனக்கு வருத்தமே. அதுக்கு என்ன! நம்ம ப்ளாக். அந்த பாடலை போட்டுட்டா போச்சு.

இந்த பாடலை இப்போது அப்படியே வாசிக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். இந்த ராஜா எங்கே போனார்? இந்த மாதிரி இசை கருவிகளை ஏன் இப்போது பயன் படுத்த முடிவதில்லை? எல்லாமே சில கீ-போர்டுக்குள் அடங்கி விட்டதா? இந்த பாடலை கேட்கும் போது இப்படி 100 கேள்விகள் என் மனதில் எழும்பும். ஒவ்வொரு இசை கருவிகளையும் அணு அணுவாக ரசிக்கலாம். ட்ரம்ஸ், பேஸ் கிடார், ஹம்மிங் என்று ஒரு இசை கலக்கல். மலேசியாவும் சைலஜாவும் அருமையாக பாடி இருப்பார்கள். பாடல் இதோ.3. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)

மீண்டும் சத்யராஜை வைத்து, ஆனால் ரொம்பவே மலையாள வாடையோடு ஒரு அம்மா செண்டிமெண்ட் வைத்து வந்த படம் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு'. சுமாரான ஒரு படம். ரொம்ப சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. 'குயிலே குயிலே குயிலக்கா' சித்ரா-யேசுதாஸ் குரலில் இந்த பாடல்.4. வருஷம் 16 (1989)

பட்டித்தொட்டி எல்லாம் கலக்கிய ஒரு படம். அப்போது எங்கு பார்த்தாலும் வருஷம்-16 தான். 'தர்மத்தின் தலைவன்' படத்தில் முதலில் வந்திருந்தாலும், குஷ்புவுக்கு கேவில் கட்ட அஸ்திவாரம் போட்ட ஒரு படம். கண்ணன்-ராதிகா-ராஜாமணி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்போதும் நம் மனசுக்குள் நிற்கும். குடும்பம்-செண்டிமெண்ட்-காதல்-காமெடி என்று அம்சமாக கொடுத்திருப்பார் பாசில். ராஜாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுக்கும். 'பழமுதிர் சோலை எனக்காக தான்'..ம்ம்ம்ம்..இந்த பாடலையாவது எஸ்.பி.பி கிட்ட கொடுத்திருக்லாம்ல..ம்ம்ம்ம்...சரி சரி..யாரு பாடினா என்னா..பாட்டு நல்லா இருந்தா சரி..5. அரங்கேற்ற வேளை (1990).

பாசில் முதல் முதலாக செண்டிமெண்ட்-அ ரொம்ப குறைத்து, முழுவதும் நகைச்சுவையாக கொடுத்த படம். கொஞ்சம் நாடகத்தனமா இருக்கும் (படமே நாடக கொட்டாய்ல நடக்கிற மாதிரி தானே). துறுதுறு ரேவதி, பிரபு. இவர்களுக்கு இடையே வி.கே.ராமசாமி படும் பாடு என்று நம்மை நல்லாவே சிரிக்க வைக்கும் நிறைய காட்சிகள் உண்டு. என்னோட பேவரைட் உமா ரமணனோட 'ஆகாய வெண்ணிலாவே' கலக்கல் பாடல். மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான். எல்லோருக்கும் பிடித்த 'ஆகாய வெண்ணிலாவே' பாடல்.6. கற்பூர முல்லை (1991)

'என்டே சூர்யபுத்திரிக்கு' மலையாளத்தில் பாசில் எடுத்த படத்தின் தமிழ் வடிவம் 'கற்பூர முல்லை'. டப்பிங்கா, இல்லை இரண்டையும் ஒரே சமயத்தில் எடுத்தாரா என்று தெரியவில்லை. நான் படமும் இன்னும் பார்க்கவில்லை. பாடலை கேட்டவரைக்கும், அமலா ஸ்ரீவித்யாவின் மகளாக வருவார், ஆனால் ஸ்ரீவித்யா அதை காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பார் என்று நினைக்கிறேன். மறுபடியும் யேசுதாஸ் :-). ஒரு அருமையான பாடல். யேசுதாஸ்-சுசிலா-சித்ரா பாடியது. 'பூங்காவியம் பேசும் ஓவியம்'.7. கிளி பேச்சு கேட்கவா ( 1993)

மலையாள மம்முட்டியோடு பாசில் களம் இறங்கிய படம். நகைச்சுவையாக எடுக்கவா, த்ரில்லராக எடுக்கவா, கிராமத்து கதை மாதிரி எடுக்கவா என்று ரொம்பவே குழம்பி நம்மையும் குழப்பி இருப்பார். மம்முட்டி கிராமத்து வாத்தியாராக வரும் ஆரம்ப காட்சிகள், பேய் பங்களாவுக்கு சார்லியை கூட்டிக்கொண்டு கூத்தடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். மற்றபடி இரண்டு பாடலில் ராஜா படத்திற்கு கொஞ்சம் வெளிச்சத்தை கொடுத்தார். 'அன்பே வா அருகிலே' யேசுதாஸின் க்ளாசிகல் கலக்கல். அடடா! நம்ம எஸ்.பி.பி சிவகாமி நெனைப்பினிலே பாட்டு பாடறார். ( போங்கடே! இந்த பாட்டெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகாதுன்னு யேசுதாஸ் சொல்லிட்டார் போல :-). நான் டி.வில ரொம்பவே ரசித்த பாடல் இந்த சிவகாமி நெனைப்பினிலே. ஆடதெரியாமல் மம்முட்டி ஆடுவதையும், அந்த பெரியவர் ஒரு குடையை பிடித்துக்கொண்டு இரண்டு பேரையும் விரட்டி கொண்டு போவதையும் நிறையவே ரசிக்கலாம். ராஜாவின் ஒரு சில தபேலா ஆட்டம் பாடல்களில் இது ஒரு முத்து.8. காதலுக்கு மரியாதை (1997)

'என்னப்பா பாட்டு போடறீங்க. நான் போடறேன் பாருங்க பாட்டு' அப்படின்னு ராஜா சொல்லி பாடல்களை கொடுத்தது மாதிரி இருந்தது 'காதலுக்கு மரியாதை' பாடல் வந்த பொழுது. அப்படி ஒரு படம் தயாராவது கூட அவ்வளவாக விளம்பரப்படுத்த படவில்லை. கேசட் வெளியான பொழுது தான், 'என்னடா இது, தலைவர் இசையா இருக்கே..அடடா. பாசில் படமா' அப்படின்னு நெனைச்சிக்கிட்டே வாங்கி கேட்டேன். அப்புறம் தான் படம் வெளி வந்து செம கலக்கு கலக்கிக்கிட்டு இருந்தது. குரோம்பேட்டை வெற்றில ஆடு மாடு பூட்டுற மாதிரி வர்றவங்கள எல்லாம் உள்ள விட்டுக்கிட்டே இருப்பான். ஹவுஸ் புல் போர்ட் எல்லாம் கெடையாது. டிக்கெட்ட வாங்கி உள்ள போனப்புறம் தான் உள்ள நிக்கவே எடம் கெடையாது என்று தெரிந்தது. முட்டங்காலில் நின்னுக்கிட்டே பார்த்த ஒரே படம். ராஜா-பாசில் கூட்டணிக்கு சிகரம் வைத்த ஒரு படம். ராஜாவின் பின்னணி இசை ராஜாங்கம் படம் முழுவதும் பரவி இருக்கும் (முக்கியமா அந்த க்ளைமாக்ஸ் காட்சி, விஜய்-சாலினி பிரியும் காட்சி..நம்ம கண்ணுல டக்குன்னு கண்ணீர் எட்டிப்பார்க்கும்.ம்ம்ம்ம்)..

பாடலை பற்றி எல்லோருக்குமே தெரிந்த விசயம் தான். என்னை தாலாட்ட வருவாளோ ஏற்கனவே பதிவில் பார்த்து விட்டோம். அதனால் 'இது சங்கீத திருநாளோ' கேட்கலாம்.9. கண்ணுக்குள் நிலவு (2000)

ஒரு படம் பிச்சிக்கிட்டு ஓடிட்டுன்னா, அப்படியே அந்த கூட்டணிய அப்படியே புடிச்சுப் போட்டு காசு பாக்கலாம்ணு கைய சுட்டுக்கொள்வது ரொம்ப சகஜம். 'கிழக்கு சீமையிலே' ஓடினவுடன், நெப்போலியன்-ராதிகா-விஜயகுமார அப்படியே புடிச்சிப் போட்டு 'புதுப்பட்டி பொன்னுத்தாயி' என்று ஒரு குப்பை வந்தது. அது போலவே 'காதலுக்கு மரியாதை'க்கு மக்கள் கொடுத்த மரியாதையை பார்த்து விஜய்-ஷாலினி கூட்டணியில் பாசிலே இயக்கி வந்த படம் 'கண்ணுக்குள் நிலவு'. இந்த படத்தில் விஜயின் நடிப்பை ஆகா ஓஹோ என்று ஆள் ஆளுக்கு பாராட்டும் போதே வெளங்காது என்று தோன்றியது. இந்த படத்தோடு, விஜயும் இனி நடிப்பது முயற்சிப்பது இல்லை என்று முடிவுக்கு வந்து விட்டார். நான் இன்னும் படமும் பார்க்கவில்லை.

சொல்லப் போனா, எனக்கு 'காதலுக்கு மரியாதை' பாடல்களை விட 'கண்ணுக்குள் நிலவு' பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ராஜா-பாசில் கூட்டணியில் வந்த பாடல்களில் என் மனதில் முதல் இடம் கண்ணுக்குள் நிலவுக்கு தான். 'காதலுக்கு மரியாதை' கமர்ஷியல். 'கண்ணுக்குள் நிலவு' க்ளாசிகல். ஹரிஹரன் பாடிய 'நிலவு பாட்டு நிலவு பாட்டு' ரொம்பவே வித்தியாசமான கம்போசிங்க். நான் ரொம்பவே ரசிக்கும் ஒரு பாடல். யேசுதாஸின் 'இரவு பகலை தேட' அழகான கவிதை. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான இசை. சரணத்தில் வரும் பேஸ், யேசுதாஸ் குரலோடு சேர்ந்து இதமான ஒரு வருடலை கொடுக்கும். 'ரோஜா பூந்தோட்டம்' மனசுக்குள் இதமான ஒரு ஆட்டம் போடும். எவ்வளவு அழகான ரிதம். உன்னி கிருஷ்ணன்-அனுராதா ஸ்ரீராமின் நீரோடை மாதிரி குரல். பாசில் இந்த பாடலை ரொம்ப அழகாக படமாக்கி இருப்பார். விஜய்-ஷாலினியின் ஆட்டமும், முகபாவனைகளும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். சித்ராவின் 'சின்னஞ்சிறு கிளியே' அருமையான தாலாட்டுப் பாடல். அப்புறம் யேசுதாஸ்-அனுராதா ஸ்ரீராமின் 'ஒரு நாள் ஒரு கனவு' பாடல். இப்படி 'கண்ணுக்குள் நிலவு' ஒரு முழுமையான ராஜாவின் ராஜாங்கம். இன்று 'ரோஜா பூந்தோட்டம்' பாடலை கேட்கலாம்.10. ஒரு நாள் ஒரு கனவு (2005)

எல்லாமே அழகா இருந்தா திருஷ்டி பொட்டு வைப்பாங்க இல்லையா. அப்படி தான் 'ஒரு நாள் ஒரு கனவு' படத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியது. படம் வெளிவரும் முன்னமே பாசில் 'இந்த படம் தான் நானும் ராஜாவும் இனைந்து செய்த படங்களிலேயே ஒரு இசை காவியம்' என்று சொன்ன போதே நான் டவுட் ஆனேன். இவரு ராஜா கூட செய்த பாடங்கள் எல்லாமே இசை காவியம் தானே. இப்படி ஓவரா பில்ட்-அப் கொடுக்கறாரே என்று. இந்த படத்துக்கு இயக்கம் 'இராமநாராயணன்' என்று சொன்னால் கூட நம்புவது கஷ்டம் தான். அவ்வளவு சுமாரான திரைக்கதை, இயக்கம். 'காற்றில் வரும் கீதமே' தவிர எல்லாமே சுமார் தான். கொஞ்சம் நல்லா இருந்த 'கஜுரகோ' பாட்டையும் படத்தில் கொடுமை படுத்தி இருப்பார் (இவ்வளவு கேவலமா ஒரு பாடலை நான் பார்த்தது இல்லை). என்னத்த சொல்ல, கடைசியா 'காற்றில் வரும் கீதேமே' கேட்டுட்டு முடிச்சிக்கலாம். நண்பர் சாணக்கியன் விருப்பமாக இந்த பாடலை கொடுக்கிறேன்.
அன்புடன்.
சிவா.

Monday, May 22, 2006

கமலஹாசன் - இளையராஜா

நம்ம ப்ளாக் நண்பர் சாணக்கியன் (சாய்) கமல் பாடிய பாடல்கள் வச்சி ஒரு பதிவு போடுங்கன்னு கேட்டுக்கிட்டார். நேயர் விருப்பமா பாடல் போட்டு, இப்போ பதிவு போட ஆரம்பிச்சாச்சு.

கமலை பற்றி நம்ம எஸ்.பி.பி சுந்தர் அடிக்கடி அழகா, சில சமயம் கோவமா அவர் பதிவில் சொல்லிக்கிட்டே இருப்பார். இரண்டு படம் ஓடியதும் ஏதோ தமிழகமே தன் பின்னால் இருப்பது போல கேமராவை பார்த்து பேசிக்கொண்டு, துதி பாடல் வைத்துக்கொண்டு நாற்காலி கனவு கண்டு கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில், ஒரு நடிகனாக நடிப்பில் ஏதாவது வித்தியாசமா செய்யணும் என்று துடிப்போடு இருக்கும் மிக சில நடிகர்களில் கமலுக்கு எப்பவுமே முதலிடம் உண்டு. நானும் ஒரு கமல் ரசிகன் தான்.


ஹேராம் பாடல் ஒலிப்பதிவை படம் வெளியாகும் போது அடிக்கடி காட்டுவார்கள். 'ரெண்டு குத்து பாட்டு, ஒரு துதி பாட்டு, ரெண்டு டூயட்' என்று மெனு கார்டை இசை அமைப்பாளர்களிடம் கொடுத்து விட்டு, ஹிட் ஆனா போதும் என்னும் இன்றைய நிலையில், இசையில் கூட கமல் ராஜாவிடம் உட்கார்ந்து கேட்டு ரசித்து பாடல் வாங்குவது போல சில க்ளிப் (ஹேராம்) பார்க்கும் போது இசையில் கமலின் ஈடுபாடு தெரியும். எங்கே வித்தியாசமான முயற்சிகள் இருக்கிறதோ, அங்கே சில தோல்விகளும் சகஜம் தான். கமல் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கும் பாடலுக்கும் கொடுத்த பில்ட்-அப் அப்படி தான் ஆனது. 'மும்பை எக்ஸ்பிரஸ்' பாடல்களை முதலில் கேட்கும் போது, இசை ஓட்டம் பிடி படாமல் ('ஏலே நீ எட்டிப்போ') எனக்கு தலைசுற்றியது உண்மை தான். JAZZ இசையாம், அது இப்படி தான் ஒரு கட்டமைப்பு இல்லாமல் ஓடுமாம். பொதுஜனத்திற்கு எந்த பாடலையும் கேட்டவுடன் ஒரு அழகான ஓட்டத்துடன் இருந்தால் தான் மனதில் ஒட்டும். அந்த வகையில் 'மும்பை எக்ஸ்பிரஸ்' பாடல்களும் சரி, படமும் சரி பத்தோடு ஒன்றாக போய்விட்டது. அதிலும் டக்கென்று பிடிக்கும் 'பூ பூத்தது' பாடலை படத்தில் கொத்து பரோட்டாவில் மாட்டின முட்டை மாதிரி கொத்தி இருப்பார் கமல். கொடுமையடா சாமி! உண்மையில் 'மும்பை எக்ஸ்பிரஸ்' இசையில் ராஜா இசையில் இன்னொரு சிகரம் தொட்டிருப்பார். அதற்கு கமலும் ஒரு காரணம். ஆனால் எல்லாம் வேஸ்டா போச்சு. இப்படி கமலின் முயற்சிகளை 100 பதிவு போட்டு எழுதிகிட்டே இருக்கலாம்.

இப்போதைய நடிகர்களில் நன்றாக பாடக்கூடிய ஒரே நடிகரும் கமல் தான் ( விஜயும் ஓ.கே. அதுக்காக 'இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்' என்று எல்லா எஸ்.ஏ.சி படத்தில் எல்லாம் டைட்டில் போடுவது கொஞ்சம் ஓவர் :-)). பார்த்தா, பாடாத நடிகர்களே இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் கேசட்டில் பாடகர் பட்டியலில் தன் பெயரை பார்க்க ஆசை தான். பாடுவார்களா, படிப்பார்களா என்பது கேட்பவருக்கே வெளிச்சம். ஆனால் கமலை எடுத்துக் கொண்டால் வெறுமனே எளிதான பாடல்களாக பாடாமல், கிட்டத்தட்ட ஒரு professional பாடகர் அளவுக்கு நிறைய பண்ணியிருப்பார். டூயட் (நினைவோ ஒரு பறவை), தனி பாடல் (பொன் மானை தேடுதே), சோகம் (தென்பாண்டி சீமையிலெ, மாடவிளக்கே), ஹை பிட்ச் (விக்ரம், போட்டு வைத்த காதல் திட்டம்) என்று நிறைய வித்தியாசமான பாடல்களை முயற்சி செய்திருப்பார். அவற்றில் சில இந்த பதிவில் பார்க்கலாம்.

கமல் பாடல் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இருந்து 'நினைவோ ஒரு பறவை'. அருமையான ஒரு டூயட் பாடல். இன்னொரு பாடலும் உடனே நினைவுக்கு வருகிறது. 'ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தால்'. இது கமல் தானே? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். மெல்லிசை மன்னர் இசையா? என்ன படம்?அடுத்து, 'அவள் அப்படித்தான்' படத்தில் இருந்து 'பன்னீர் புஷ்பங்களே'. இளம் கமலின் குரல். இந்த பாடலை கேட்கும் போது கமலை பேசாமல் நடிகர் பட்டியலில் இருந்து பாடகர் பட்டியலில் சேர்த்து விடலாம் என்று தோன்றும். ஏனோ இந்த பாடலில் எனக்கு கமலின் குரல் ரொம்ப பிடிக்கும்.'ஓ! மானே மானே' மோகன்-ஊர்வசி நடித்த படம் ( டி.வியில் அடிக்கடி 'ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது' பாடல் பார்க்கலாம்). ஆனால் அதில் கமல் பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. இது கமல் மோகனுக்கு பாடியதா? இல்லை கமலும் அந்த படத்தில் நடித்திருக்கிறாரா? தெரிந்தவர்கள் கூறுங்கள். ராஜாவின் இசையில் 'ஓ! மானே மானே' படத்தில் இருந்து 'பொன் மானை தேடுதே'.சத்யா படத்தில் இருந்து ஒரு வித்தியாசமான பாடல். 'போட்டா படியுது படியுது'. எல்லா பாடகர்களாலும் இந்த பாடலை பாடமுடியாது. கமலின் குரல் இயற்கையாகவே இந்த மாதிரி பாடல்களுக்கு பொருந்தி வரும். ( சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் 'புதுப்பேட்டை'ல இந்த மாதிரி ஒரு பாடல் கமல் பாடி இருக்கிறார்). ராஜாவின் கலக்கல் இசைக்காகவும் கமலின் குரலுக்காகவும் இந்த பாடல் எனக்கு புடிக்கும். உங்களுக்கு?2000-க்கு அப்புறம் ராஜா இசையில் நான் ரசித்து வந்த சில விசயங்கள் குறைந்து போனது போல எனக்கு தோன்றும். எல்லாம் பீட்டும், கணிணி இசையுமா போனதின் தாக்கம் ராஜாவின் இசையிலும் கொஞ்சம் வர ஆரம்பித்தது. அழகாக ஒரு குரூப் வயலின் வந்து, அப்படியே ஒரு கோரஸ் சேர்த்து, Manual ட்ரம்ஸ் 'தும் தும்' என்று ஒரு உற்சாம் கொடுத்து..இப்படி அவரது ஒவ்வொரு பாடலிலும் ரசிக்க 1000 விசயங்கள் இருக்கும். அது 2000 க்கு அப்புறம் கொஞ்சம் மிஸ்ஸிங்.ம்ம்ம்ம்..நமக்கு வயசாகி போச்சு. இளவட்டங்கள் எப்படி விருப்புதோ அப்படி தானே (Current Trend) கொடுக்கமுடியும். தபேலா இசையை கேட்டாலே பத்திரிகைகளில் '80ஸ் மாதிரி இருக்கு. பழைய பாட்டு மாதிரி இருக்கு' என்று முத்திரை குத்தப் பட்ட ராஜாவின் இசை ஏராளம். இசை கருவிகளுக்கும் காலகட்டம் கொடுத்த நம்ம அறிவாளிங்கள என்ன சொல்ல. அப்போது தான் 'விருமாண்டி' வந்தது. அந்த படத்தில் ராஜா எவ்வளவு fresh-a வந்தார். அடடா! கமலுக்கு தான் அதில் பாதி பெருமை சேர வேண்டும். எல்லா பாடல்களையும் கமல் பாடினாலும், கேட்க ரொம்பவே நன்றாக இருந்தது. அதில் 'ஒன்ன விட இந்த ஒலகத்தில் ஒசந்தது' பாடலை படத்தில் பார்க்கும் போது, அந்த இருட்டும், நிலா வெளிச்சமும் அதை இசையில் ராஜா கொண்டு வரும் போது நாமே ஏதோ நிலவொளியில் இருப்பது போல தோன்றும். ஸ்ரேயா கோஷல் தன்னுடைய Limited உச்சரிப்பில் அழகாவே பாடி இருப்பார்.
கடைசியா, வித்யாசாகர் இசையில் 'அன்பே சிவம்' பாடல். தலைப்பு பாடல். 'அன்பே சிவம்' படத்தை பற்றி நம்ம தமிழ்மணத்தில் ஒரு 50 பதிவு வந்திருக்கும். வித்யாசாகர், அர்ஜுன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கும் போதில் இருந்தே எனக்கு பிடிக்கும். இந்த பாடலை கேட்ட சாணக்கியனிடமே பின்னூட்டத்தில் ஏதாவது சொல்வார் என்று விட்டுவிட்டு பாடலை போடுகிறேன்.


Sunday, May 14, 2006

பாடாய் படுத்தும் காதல் (கட்டம்-3)

காதலை சொல்லியாச்சு. தேறுமா? தேறாதா?. நாளைக்கு 'என்னடா மாப்ள! லெட்டர் குடுத்தியா? என்ன சொன்னா?' அப்படின்னு கேட்கப் போகும் மக்காவுக்கு என்ன பதில் சொல்றது? நாம ஹீரோவா..காமெடியனா? இப்படி ஏகப்பட்ட வினாக்களுக்கு விடை அந்த புள்ள சொல்லப் போற பதிலில் இருக்கிறது.

பதில் 'நீ இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கல' அப்படின்னு பதில் வந்தா, நம்ம பசங்க உலகமே கவுந்திட்ட மாதிரி சோகமாகி, ரோட்டோடமா இருக்கிற ஒரு ரெக்கார்டிங் கடைல ஒரே சோகப்பாட்டா பதிந்து, அதை ரிவைண்ட் பண்ணி ரிவைண்ட் பண்ணி கேட்டு..அந்த செட்டு ஒடைஞ்சி போயி..ம்ம்ம்...சில பேர் கவலையே இல்லாம, மறுபடி கஜினி முகம்மது மாதிரி படை எடுத்துக்கிட்டே இருப்பாங்க. சில பேர் 'நம்ம வாழ்க்கையே முடிஞ்சி போச்சு' என்று தாடி எல்லாம் வளர்த்து அப்படியாவது O.K ஆகுமா என்று பார்ப்பாங்க.

திரையில் இதுக்கு பேர் போனவர் நம்ம முரளி. 'இதயமே..இதயமே..உன் மௌனம் என்னை கொல்லுதே' என்று நம்ம முரளி சோகமா பாட ஆரம்பிச்சாலே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுதுங்க. இதுக்கெல்லாம் இப்படி மழை பெய்ய ஆரம்பிச்சா, ஊர்ல எத்தனை பயலுவ இப்படி சுத்திக்கிட்டு இருக்காணுவ. ஒரு பேய் மழைக்கே சென்னை அல்லோலப் பட்டுப் போச்சு. எல்லாருக்கும் இப்படி மழை பெய்ய ஆரம்பிச்சா, சென்னை தாங்குமா. ஊர்ல எத்தனை பேருக்கு நீச்சல் தெரியும். இதை எல்லாம் கொஞ்சம் யோசிச்சி பீலிங் வுடுங்க முரளி.

இந்த பதிவில் பாட்டுக்கு பஞ்சமே இல்லீங்க. இந்த பதிவு கிட்டத்தட்ட எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் மாதிரி தான். முதலில் மூன்று பாடல் (எஸ்.பி.பி/மனோ/யேசுதாஸ்). அப்புறம் மற்ற எஸ்.பி.பி பாடல்களை என்னால் கழிக்க முடியவில்லை. கொஞ்சம் பெரிய பதிவு தான். நேரம் இருக்கும் போது ஒவ்வொரு பாடலாய் கேட்டுப்பாருங்க.

1. ஹீரோவுக்கு ஹீரோயின் மேலே காதல் (பெரிய கண்டுபிடிப்பு..கதைய சொல்லுடே). வழக்கம் போல ஹீரோயினுக்கு புடிக்காம போய்டும். அப்புறம் ஹீரோயினுக்கு வேறு இடத்தில் நிச்சயம் ஆகி, அவரும் அங்கேயே வந்து தங்க, நம்ம ஹீரோ ஹீரோயின் மேல இருக்கிற பாசத்துல அவருக்கு பணிவிடை செஞ்சிக்கிட்டு கிடப்பார் (அதே தாங்க..'டார்லிங் டார்லிங் டார்லிங்'). ஹீரோவ மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டி 'ஓ'ன்னு அழாத குறையா பாடிக்கிட்டு இருப்பார். தியேட்டர்ல நாமலே அழுற மாதிரி உக்காந்து பாத்துக்கிட்டு இருப்போம். ஆனா அந்த பாட்டு கேட்கிற (படத்தில்) தோழிங்க எல்லோரும் ஒரு உணர்ச்சியே இல்லாம சிரிச்சிக்கிட்டே தலையாட்டி (படத்துல பாட்ட ரசிக்கிற மாதிரி செயற்கையயா தலையாட்டறத பாக்கிற கொடுமை மாதிரி வேற கொடுமையே கெடையாதுங்க) பாட்ட கேட்பாங்க. பாட்டு முடிஞ்சதும் 'ரொம்ப நல்லா பாடுனீங்க' அப்படின்னு எல்லோரும் கை கொடுக்க, ஓரமா போய் கண்ணுல முட்டிக்கிட்டு நிக்கிற கண்ணீர தட்டிவிட்டு தியாகியா சிரிப்பார். நாமும் பக்கத்துல இருக்கிறவன் பாககறதுக்குள்ள கண்ண தொடச்சிக்கிட்டு அடுத்த கூத்தை பார்க்க ஆரம்பிப்போம்.

இந்த மாதிரி பாடல்களில் முதல் பங்கு கவிஞர்களுக்கு. ஒவ்வொரு வரிய கேட்கும் போதும் 'அண்ணன் தியாகி வாழ்க!!' அப்படின்னு நாம சீட்ட விட்டு எழுந்தது கத்தணும் போல இருக்கும். அடுத்து பாடகர். சோகமாகவும் தெரியணும், ஆனா அதை மறைச்சிக்கிட்டு சிரிக்கிற மாதிரியும் தெரியணும். எஸ்.பி.பி-க்கு இதை எல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா என்ன. ஐந்து நிமிடத்தில் தான் குரலில் எத்தனை ஏற்றம் இறக்கம், என்ன சோகம், ஒரு பரிதவிப்பு.

போதும்டே பேசினது..பாட்ட எங்க...இதோ வருது.

'உள்ளக் கதவை நீ மெல்ல திறந்தால்
அந்நாளே பொன் நாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போது முத்தாடுவாள்'

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்
பாடல்: ஓ! நெஞ்சே
பாடகர்: எஸ்.பி.பி2. இது இன்னொரு வகை. காதலில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு சின்ன எல்.கே.ஜி படிக்கிற புள்ளைய புடிச்சி, நம்ம ஹீரோ 'ஓ'ன்னு அழுதுக்கிட்டே பாடிக்கிட்டு இருப்பார். அந்த சின்னப்புள்ளை புரியாம முழிச்சிக்கிட்டு இருக்க, நம்ம ஹீரோ உருகி உருகி பாடுவார்.
போன பாடல் எஸ்.பி.பி. இது யேசுதாஸ். அதே தாங்க..'ஈராமான ரோஜாவே..என்னை பார்த்து மூடாதே'. 'இளமைக் காலங்கள்' படத்த்தில் பாடல்கள் அத்தனையும் ஒரு ரேஞ்சில் ராஜா கொடுத்திருப்பார் ('வாடா என் வீரா' தவிர). அதில் இந்த பாடலின் தாளம் நம்மை ரொம்பவே சோகமாக்கி விடும். மழையில் நனைந்து கொண்டே மோகன் பரிதாபமா பாடுவார் (முரளி, மோகன விட்டா யாருமே இந்த மாதிரி எல்லாம் நடிக்க முடியாது..யப்பா..உங்களால தாம்பா நாட்டுல/சினிமாவுல மழையே பெய்யுது). இசையிலும் சோகப்பாட்டு தானே என்று ஒப்பேத்தாமல் அழகாக கொடுத்திருப்பார் ராஜா. யேசுதாஸின் குரலின் உருக்கத்தை பற்றி தனியா சொல்ல வேண்டியது இல்லை. உருக ஒரு பாடல். இதோ..

என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டுப் போகும்.
உன் வாசலில் என்னை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு

படம்: இளமை காலங்கள்
பாடல்: ஈரமான ரோஜாவே
பாடகர்: யேசுதாஸ்.3. எஸ்.பி.பி, யேசுதாஸ் போட்டாச்சு. அடுத்ததா, மனோ பாடல் ஒன்று போட்டுடலாம். சரி தானே. இந்த பாடலில் முதலில் இளையராஜாவை சொல்லலாம். அந்த தொடக்க இசை (Prelude), கிடாரும் புல்லாங்குழலும் சேர்ந்து ஆரம்பிக்குமே, அந்த சில விநாடி இசையில் தான் எத்தனை சோகம். சே! பாட்ட சொல்லாம ஆரம்பிச்சுட்டேன். 'மைடியர் மார்த்தாண்டன்' படத்தில் இருந்து 'ஓ! அழகு நிலவு சிரிக்க மறந்ததே'. பாடலில் மனோ அழகா 'ஓ' போடுவார் :-). மனதை வருடிச் செல்லும் பாடலின் அழகான ஓட்டம், மனோவின் குரல், அழகான வரிகள் என்று இந்த பாடலும் சோகத்திலும் ஒரு சுகம் கொடுக்கும் பாடல். இதோ.

நீர் மேல் அழகிய கோலம்
போட்டேன் தினம் தினம் நானும்
நினைத்தால் இனிமை தான்
நடந்தால் அருமை தான்
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி

படம்: மைடியர் மார்த்தாண்டன்
பாடல்: ஓ! அழகு நிலவு சிரிக்க மறந்ததே
பாடகர்: மனோ
---------------------------------------------------------------------------------------------

இனி நம்ம எஸ்.பி.பி தனி ஆவர்த்தனத்தை ஆரம்பிக்கலாம். பழசு, புதுசு என்று கலந்து கொடுக்கிறேன்.

1. இதுவும் 'இளமை காலங்கள்' யேசுதாஸ் பாட்டு மாதிரி தான். பிரபு ஒரு சின்ன பையனை தூக்கி வச்சிக்கிட்டு சோகமா பாடிக்கிட்டு இருப்பார் (மழை எல்லாம் பெய்யாது). ராஜாவின் தபேலா சுகமாய் தாலாட்டும். தபேலாவில் ராஜா நிறைய பாடல்கள் கொடுத்திருந்தாலும் இந்த பாடல் எனக்கென்னமோ ரொம்ப rich-ஆ தெரியும். 'உறுதி மொழி' படத்தில் இருந்து 'அன்புக் கதை..வம்புக் கதை..எந்தன் கதை..காதல் கதையே' இப்படி கதை கதையா எஸ்.பி.பி பாடுகிறார். அவரது குரலில் இந்த பாடல் இன்னும் அழக்காக தெரியும். அனுபவித்து பாடி இருப்பார்.

படம்: உறுதி மொழி
பாடல்: அன்புக் கதை..வம்புக் கதை2. எனக்கு எப்பவுமே எஸ்.பி.பி யோட 70ஸ்-80ஸ் பாடல்கள் என்றால் கிறக்கம் உண்டு. அது ராஜா இசையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இந்த பாடல்கள் எல்லாம் கேட்கும் போது, அடடா! இப்படி எல்லாம் ஒரு ஆரோக்கியமான இசை திரை இசையில் இசை அமைப்பாளர் வித்தியாசம் இல்லாமல் இருந்திருக்கிறதே என்று தோன்றும். 'அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை' படத்தில் இருந்து 'எதிர்ப்பார்த்தேன் இளங்கிளிய காணலையே'. இந்த பாடல்களின் இசை அமைப்பாளர் பற்றி தெரியாது. ஒவ்வொரு வார்த்தையையும் எஸ்.பி.பி பாடுவதை ரசித்துக் கொண்டே இருக்கலாம். 5 நிமிடம் நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். ம்ம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம்..

படம்: அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
பாடல்: எதிர்ப்பார்த்தேன் இளங்கிளிய..3. 'தென்றலோ தீயோ! தீண்டியது நானோ'. இதில் வரும் பாடல்களை எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் என்று சொல்லியாச்சு. மறுபடி என்ன சொல்ல?. இளையராஜாவின் இசையில் 'ராகங்கள் மாறுவதில்லை' படப் பாடல். சில பாடல்கள் எத்தனை தடவை, எத்தனை வருடம் கேட்டாலும் அலுப்பதில்லை. இங்கே நான் கொடுக்கும் அத்தனை எஸ்.பி.பி பாடல்களும் அதில் அடங்கும்.

என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
தனிமையே! தனல் மலர் ஆனேன் நானே!

படம்: ராகங்கள் மாறுவதில்லை
பாடல் : தென்றலோ தீயோ4. 'மலரே என்னன்ன கோலம்..எதனால் என் மீது கோபம்'. 'ஆட்டோ ராஜா' படப்பாடல். இந்த படத்தில் 'சங்கத்தில் பாடாத கவிதை' பாடல் மட்டும் தான் ராஜாவின் இசை என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் raaja.com -ல் இந்த பாடலும் ராஜாவின் இசை தான் என்று போட்டிருக்கிறார்கள். சரியாக தெரியவில்லை. ரொம்ப குறிப்பிட்டு சொல்லணும்னா இந்த பாடலின் வரிகள் அவ்வளவு அருமையா இருக்கும். வழக்கம் போல எஸ்.பி.பி :-).
அந்த ஒரு வரி 'மலரே! நலமா ' அப்படின்னு சோகத்தோட சிரிச்சிக்கிட்டே பாடுவாரே. அடடா..

படம்: ஆட்டோ ராஜா
பாடல்: மலரே என்னன்ன கோலம்.

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கே பூவேது காயேது
நினைத்தால் எட்டாத தூரம்.
எனக்கேன் உன் மீது மோகம்
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே..நீ எங்கே! நான் எங்கே.இநத பாடலை பற்றி நம்ம புராணம் ஒன்று சிவபுராணத்தில் எழுதி இருக்கிறேன். நேரம் இருந்தா இங்கே படிச்சி பாருங்க.

5. கடைசியா ராஜா இசையோடு பதிவை முடிச்சிக்கலாம். இந்த பாடல் எந்த அளவுக்கு இந்த தலைப்பில் ஒத்து வரும் என்று தெரியவில்லை. ஆனால் 'எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம்' போல வரிசையா போட்டுக்கிட்டு இருப்பதால் இதையும் கொடுக்கிறேன். இந்த பாடலில் 'அம்மாடி' அப்படின்னு ஹை பிட்சில ஜிவ்வுன்னு போவார். யப்பா! இதில் எஸ்.பி.பிய அடிக்கிறதுக்கு எவரும் கிடையாது. சோகம் எவ்வளவு சுகம் (பாடலில் மட்டும்) என்று இந்த பாடல் கேட்டால் தெரியும்.

படம்: கிராமத்து அத்தியாயம்.
பாடல்: வாடாத ரோசாப்பூ நா ஒன்னு பார்த்தேன்.ரொம்ப பெரிய பதிவு தான். 8 பாடல் போட்டிருக்கிறேன். அத்தனையும் என்னை பொருத்தவரை முத்துக்கள். நேரம் கிடைக்கும் போது பொறுமையா கேட்டு சந்தோசமா (சோகமாயிடாதீங்க) இருங்க.

மீண்டும் அடுத்தக் கட்டத்தில் சந்திப்போம்.

Tuesday, May 09, 2006

அக்கம் பக்கம்

ரொம்ப நாளா இந்த பதிவு போடணும்னு யோசித்துக்கிட்டே இருந்தேன். இன்று தான் ஒரு செட் சி.டி வந்தது. சரின்னு ஆரம்பிச்சாச்சி. ராஜாவின் இசையில் மற்ற மொழி பாடல்கள்.

நம்மில் நிறைய பேர் ஹிந்தி தெரியாமலே ஹிந்தி பாட்டு கேட்டிருப்பீங்க. கைல தார் டின்னோட அலைஞ்சாலும் அலைவோமே தவிர ஹிந்தி மட்டும் கத்துக்க மாட்டோம். தமில் வலக்கறோம்..தமில் வலக்கறோம்னு சில எருமைங்க வயிறு வளர்த்தது தான் மிச்சம். புண்ணியத்துக்கு சென்னைலயே வாழ்க்கைய ஓட்டுறதால பொழைசசேன். பெங்களூர் போனோம்னா வீரப்பன் ராஜ்குமார கடத்தாம இருக்கணும் (இப்போ அந்த பிரச்சனை இல்லை), இல்லன்னா நாட்டுல நல்லா மழை பெய்யணும். இல்லன்னா பிரச்சனை தான். அதுக்கு வடக்க போனா சொல்லவே வேணாம்.

சரி! சரி! அந்த பிரச்சனை எல்லாம் எதுக்கு..பாட்ட போடுடே அப்படின்னு யாரோ திட்டற மாதிரி இருக்கு..பதிவுக்கு போய்டலாம்.

இளையராஜா ரசிகர் மன்றத்தில் (யாகூ குழுமம்) சேர்கிற வரைக்கும் எனக்கும் ராஜாவின் மற்ற மொழி பாடல்கள் பரிட்சயம் கிடையாது. அதில் சேர்ந்த பின் தான் ராஜாவின் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் பாடல்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.

பொதுவாகவே மற்ற மொழி உச்சரிப்பு கேட்டால் நமக்கு கொஞ்சம் இடிக்கும். சில இடங்களில் என்னடா பாடுறானுங்க என்று சிரிப்பு வரும். (அவனுங்க நம்ம 'இ'ய பாத்து, என்னடே இடியாப்பம் மாதிரி இருக்குன்னு சொல்வானுங்க..நாம என்னடா முட்ட முட்டையா போடறீங்க..எப்போடா எழுதுவீங்க அப்படின்னு திருப்பி சொல்லிக்க வேண்டியது தான்). ஆனால் ராஜாவின் இசைக்காக நான் எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்தேன். இப்போ தெலுங்கு, கன்னட உச்சரிப்புகள் பழகிப் போய்விட்டது. உங்களுக்கு கேட்டு பழக்கம் இல்லன்னா, ஒரு தடவையாவது கேட்டு பாருங்க..ராஜாவுக்காகா.. எஸ்.பி.பி-க்காக..ஜானகிக்காக..அப்புறம் கண்டிப்பா புடிக்கும்.

முதலில் தெலுங்கு தேசத்துக்கு செல்வோம். தமிழுக்கு அப்புறம் ராஜா ரொம்ப சிறப்பாக செய்தது தெலுங்கில் தான். அதில் நிறைய டப் ஆகி, நமக்கே இது டப் படமா என்று தெரியாமல் கலக்கிய பாடல்கள் ஏராளம் (இதயத்தை திருடாதே, சிவா, சலங்கையில் ஒரு சங்கீதம், பாடும் பறவைகள்). இதில் Aalapana (சலங்கையில் ஒரு சங்கீதம்), Abhinandana, Anweshna (பாடும் பறவைகள்) மூன்றையும் கேட்கும் போது ராஜா என் மனசில் எங்கேயோ போய்டுவார். (இந்த மூன்றுமே என்னிடம் இல்லை. ஆர்டர் பண்ணி இல்லன்னுட்டானுவ
:-((. இன்று ஒரு 5 சி.டி வந்தது. சரி அதில் இருந்து ஒரு பாடலை கொடுக்கிறேன்.

ராஜாவின் 80ஸ் முத்திரை. எஸ்.பி.பி-ஜானகி ஜோடி. சில பாடல்கள் கேட்கும் போது அதில் மனசு மாட்டிக்கும். தினமும் 10 தடவை கேட்டாலும் அப்படியே வாரக் கணக்கா சலிக்காம கேட்டுக்கிட்டே இருப்போம். அப்படித் தான் இந்த பாடலிலும் மனசு மாட்டி ஒரு மாசம் ஆச்சு. இன்னும் மீண்ட பாடில்லை. மறுபடியும் சொல்றேன். பாட்டு தெலுங்கு பாட்டு. கொஞ்சம் பொறுமை தேவை. பொறுமையா கேட்டுட்டு புடிச்சா சொல்லுங்க.

படம்: மஹரிஷி
இயக்கம்: வம்சி (வம்சி படம்னாலே ராஜா பொளந்து கட்டுவார்)
பாடல் : சுமம் ப்ரதி சுமம் சுமம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி & ஜானகி.இப்போ கன்னடம். தெலுங்குக்கு அடுத்த படியா ராஜா கன்னடத்தில் சிறப்பாக செய்தது மாதிரி தோன்றும். நான் இது வரை ஒரு 4 படம் பாடல் கேட்டிருக்கிறேன். அத்தனையும் அவ்வளவு ப்ரஸ்ஸா, கலக்கலா இருக்கு. டிப்டூருக்கு (கர்னாடகா) சித்தி வீட்டுக்கு போகும் போது சில கன்னட படம் பார்த்து, பாட்டெல்லாம் கேட்டு 'டேய்! நீங்கெல்லாம் இந்தியாவுல தான் இருக்கீங்களா' அப்படின்னு கேட்டுட்டு வந்திருக்கேன். அப்போ ராஜாவெல்லாம் ரசிக்க ஆரம்பிக்கலை. இந்த ராஜாவின் பாடல் எல்லாம் கேட்டா, 'ஓ! நீங்க கூட இப்படி எல்லாம் கேப்பீங்களா' அப்படின்னு ஆச்சரிய பட்டுப் போனேன். 1995ல 'கண்களின் வார்த்தைகள்' என்று ஒரு டப்பிங் படம் வந்தது. ராஜாவின் இசையில் பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கும். 'நம்மூர மந்தார ஹூவே' என்ற கன்னட படத்தின் டப்பிங் தான் அது. அதில் 'அல்லி..சுந்தரவள்ளி..லாலி' என்று அருண்மொழி பாடிய பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதன் ஒரிஜினலை எஸ்.பி.பி பாடி இருப்பார். கூடுதல் இனிமை. நல்ல ஒரு வித்தியாசமான கம்போசிங்க். கேட்டு பாருங்க.இதே பாடல். அருண்மொழி குரலில். தமிழில்.கடைசியா மலையாளப் பாடல் ஒன்று. ராஜா மலையாளத்தில் கணிசமான அளவுக்கு இசை அமைத்திருக்கார். ஆனாலும் எனக்கென்னமோ எல்லாமே ஒரே அச்சில் வார்த்த கொழுக்கட்டை மாதிரி தான் இருக்கு. அதே யேசுதாஸ், ஸ்ரீகுமார் எல்லா பாடல்களுக்கும். அப்புறம் படங்களும் பாடல்களுக்கு ஒரு வித்தியாசமான களம் கொடுக்காது. ராஜாவும் ரொம்ப வித்தியாசம் காட்டாமல் தன் வழக்கமான ஸ்டைலாகவே கொடுத்த மாதிரி ஒரு தோற்ற்ம். அதனால் எல்லா மொழி பாடல்களையும் எடுத்தால், மலையாளம் கடைசில தான் வருது. ஆனால் ராஜாவுக்கு முழு தீனி போட்ட இரண்டு படங்களும் மலையாளத்தில் தான் உண்டு. ஒன்று குரு. இரண்டாவது சிறைச்சாலை. குருவை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். ஏதோ ஒரு உலகத்தில் அனைவருக்கும் கண் தெரியாது. அங்கு செல்லும் மோகன்லால் ஒரு கனியின் சாறினை உண்டால் கண்பார்வை கிடைக்கும் என்று தெரிந்து அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி அதை கொடுப்பார். கண்பார்வை கிடைத்து, முதன் முதலாக உலகத்தின் அழகை பார்க்கும் ஒவ்வொரின் சந்தோசத்தையும் இந்த பாடலில் இசையால் சொல்வார் ராஜா. அணு அணுவாக ரசிக்கலாம் இந்த பாடலின் இசையை. படத்தின் இசை முழுவதும் ஹங்கேரியில் ரெக்கார்டிங் செய்தார்கள். இந்த படத்தை இன்னும் பாக்கலன்னா சீக்கிரம் பாருங்க. ராஜாவின் இசைக்காக. இதோ பாடல்.(மம்முட்டியின் தொடக்க குரலோடு பாடல் ஆரம்பிக்கும்).

படம்: குரு
பாடியவர்: யேசுதாஸ் & குழுவினர்