கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Friday, April 14, 2006

பாடாய் படுத்தும் காதல் (முதல் கட்டம்)

காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. சினிமா இல்லை. சினிமா பாட்டு இல்லை. இந்த காதலை வச்சித்தாங்க 99% பாடல்கள் வருது. (இல்லை வந்தது - எனக்கு இப்போ வருகிற குத்துப்பாடல்களின் எண்ணிக்கை தெரியாததால்). காதலில் தான் எத்தனை கட்டங்கள். அத்தனைக்கும் எத்தனை விதமான பாடல்கள். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம் என்று பதிவு எழுத ஆரம்பிச்சாச்சு. (எழுதறதுக்கு நல்ல தலைப்பு கெடைச்சிடுச்சுடே மக்கா). எத்தனை பகுதி போகும் என்று தெரியலையே. பொறுமை காத்தருளுங்கள்.

முதல் கட்டம்:

இது தாங்க முதல் கட்டம். 'காதல் வந்திச்சாம்..ஓஓஓஓ..ஒரு காதல் வந்திச்சாம்'. 'ஏலே மக்கா! அந்த புள்ள ஒன்னையே பாக்குதுல' அப்படின்னு ஏத்தி விட்டும் வரலாம், இல்லன்னா 'மாமி! செத்த காப்பி பொடி கொடுக்கறேளா! அம்மா வாங்கிட்டு வர சொன்னாள்' அப்படின்னு எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்த ஐயங்காரு வீட்டு அழகாகவும் இருக்கலாம், 'எக்ஸ்க்யூஸ் மீ! கொஞ்சம் பல்லாவரத்துக்கு டிக்கட் எடுத்து தரமுடியுமா' அப்படின்னு 18A-ல் கேட்கும் பிகராலும் வரலாம். இப்படி எப்படினாலும் மனசுக்குள்ளே காதல் வரலாம். அப்படியே கிறுக்கு புடிச்சிப்போய் பையன் கொஞ்ச நாளா சுத்திக்கிட்டு இருப்பான். 'ஏல! கிறுக்கு பயலே! என்னாத்துக்கு தனியா ஒக்காந்து சிரிச்சிக்கிட்டு இருக்க. முனி ஏதாவது புடிச்சுட்டா' அப்படின்னு அம்மா சொல்லும் போது தெரிஞ்சுக்கலாம், ரொம்ப முத்திப்போச்சு என்று. 'ஆத்தா! ஒம்புள்ள எதிர்வீட்டு கனி கூட சுத்தறானாம. கண்டிச்சி வையி ' அப்படின்னு ஊர் காரனுவ சொல்லும் போது தான் தெரியும், புடிச்சது முனி இல்ல. கனி என்று.

அப்புறம் வானத்த பார்த்துக்கிட்டே 'உன்னை பார்த்த பின்பு நான்! நானாக இல்லையே' அப்படின்னு பாடுறது. வீட்டு ஓட்டு மேல ஒக்காந்துக்கிட்டு 'என்னை தாலாட்ட வருவாளா' அப்படின்னு தேடுறது, பொட்ட புள்ளையா இருந்தா கைல துப்பட்டாவ புடிச்சிக்கிட்டு எதிர்காத்துல வடக்கையும் தெக்கையுமா 'நேற்று இல்லாத மாற்றம்..என்னது' அப்படின்னு ஓடுறது...இப்படி தாங்க கட்டம்-1 ஆரம்பிக்கும். இப்போ தாங்க தென்றல் தோழியாகும் (தோழி பகைவள் ஆவாள் :-), நிலவு கூட பேசும். மனசுக்கும் பட்டாம் பூச்சி பறக்கும்.

இந்த நேரத்தில் கெளம்பும் பாட்டுக்கள் எல்லாம் அழகான கவிதைகள். அப்படி சில கவிதைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த மாதிரி பாடல்களில் முக்கிய பங்கு பாடலாசிரியருக்கு. அப்புறம் அதை பாடும் பாடகர். பாடலின் ஓட்டம் ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும், பாடலின் வரிகள் காதலையும் அள்ளிக்கொண்டு வரும். இசையை கொஞ்சம் அமுக்கியே வாசித்து இருப்பார்கள். அப்போ தானே மக்கா பாடுற பீலிங் புரியும். இந்த பீலிங் விடுறதுல நம்ம பசங்கள மிஞ்சிறதுக்கு ஒலகத்துல ஆளே கெடையாது. கொடுத்து வச்ச புள்ளைங்கப்பா.

முதலில் ஆண்கள்.

ரஜினி பொன் முட்டையிடும் வாத்தாக மாறுவதற்கு முன் வந்த பாடல். ரஜினியின் சினிமா பாடல்களில் இந்த பாடலுக்கு எப்பவுமே முதல் இடம் தான். 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்'. ரஜினி படத்துல எல்லாம் இப்படி பாட்டு என்று புலம்புவதா, இல்லை 'எப்படி இருந்த ரஜினி இப்படி ஆகிட்டாருன்னு' சொல்றதா. இப்போ எதுக்கு அது. சந்தோசமா பாட்ட கேளுங்கடே. 'மயக்கம் என்ன..காதல் வாழ்க' என்று முடிப்பாரே, அப்போ எஸ்.பி.பி பாடுறத பார்த்தா நமக்கே காதலிக்கணும் போல தோணும்.

நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆயிரம் பாடலே
ஒன்று தான் எண்ணம் என்றால்..உறவு தான் ராகமே..
எண்ணம் யாவும் சொல்லவா..

என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்






இரண்டாவது ரொம்ப அருமையான பாடல். ராஜாவின் 80S முத்திரை. என்ன ஒரு Orchestration. என்ன ஒரு குரல் (அதே SPB தான்). இந்த பாடல் அப்படியே நம்ம கட்டம்-1 ல் வராது என்றாலும், இதிலும் ஒரு ஆணின் காதல் உற்சாகம் அப்படியே வருகிறது. 'முதல் வசந்தம்' படத்தில் வரும் 'பொன்னி நதி வெள்ளம் என்று' . இந்த பாடல் ஏனோ முதல் வசந்தம் படத்தில் வரும் மற்ற பாடல்களை விட கொஞ்சம் (70S) பழைய பாடல் மாதிரியே இருக்கிறது. இதோ ஒரு ராஜகீதம். கேளுங்க.





கடைசியா, இந்த பாட்டு போடலைன்னா இந்த பதிவே நிறைவாகாது. அதாங்க 'என்னை தாலாட்ட வருவாளா' . இந்த பாட்டு நான் கல்லூரி படிக்கும் போது பட்டையை கிளப்பியது. ஹரிஹரன் பாடிய ராஜா பாடல்களில் இதற்கு எப்பவுமே முதல் இடம் தான். கவிஞர் பழனி பாரதி என்று நினைக்கிறேன். இந்த படத்தில் ரொம்ப அருமையான பாடல்களை எழுதி இருப்பார். ரொம்ப விஷேசமா இந்த பாடலில் கேட்டு கிறுக்கு புடிச்சது அந்த பேஸ் (கிடார்) தான். ரொம்ப ரிச்சா இருக்கும். கேசட்டில் ராஜா Version-ம் உண்டு.

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா?
நான் தூங்க வழி ஒன்று தாராதா?


- கலக்கிட்டாங்கடே..கலக்கிட்டாங்க. பாட்டு இதோ.





இப்போ புள்ளைங்க பாடுறதை கேட்கலாம். இந்த வகைக்கு பாட்டு தேடுவதற்குள் வெறுத்துப் போய் விட்டது. நதியா பாட்டுல இருந்து ஆரம்பிக்கிறேன்.

'ஓ! எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா'. இசையை கேளுங்க. அப்படியே நதியா கூட சேர்ந்து ஓடுது. 'உனக்காகவே வாழ்கிறேன்' படப்பாடல். ஜானகியின் அருமையான குரலில்,ராஜாவின் கலக்கல் பாடல் ஒன்று.

செந்தாழம் பூவே கதைகள் பேசு
சிங்கார காற்றே மெதுவாய் வீசு
என் காதல் தேவன் அருகே வந்தான்
எனக்காக தானே இதயம் என்றான்
நான் அந்த நேரம் நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேச வில்லை...


இப்படி போகுதுங்க பாட்டு..இதோ..





இப்போ சித்ரா! 'சந்தோசம்! இன்று சந்தோசம்' . மனிதனின் மறுபக்கம் படப்பாடல். போன பாடலுக்கும் இந்த பாடலுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. இதற்கும் தலைவர் தான் இசை.

உன்னை கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய் ஒரு காதல் யாசகம்
அதை தாளாமல் மனமோ துள்ளுது.
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது..


- சித்ராவின் இனிய குரலில் பாடல் இதோ..





போன ரெண்டு பாட்டும் ஆள் யாருன்னு தெரிஞ்சி பாடினாங்க. இப்போ ஆளே இன்னும் முடிவாகல..அதுக்குள்ள இவங்க புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க..

'செந்தூரப்பூவே..செந்தூரப்பூவே..ஜில்லென்ற காற்றே..
என் மன்னன் எங்கே..என் மன்னன் எங்கே..நீ கொஞ்சம் சொல்லாயோ'

ராஜாவின் ஆரம்ப கால கலக்கல் பாடல். பதினாறு வயதிலே படப்பாடல். பாடியவர் ஜானகி. பாடல் இதோ..





முடிக்கும் போது, கொஞ்சம் வித்தியாசமா ஒரு பாடலோடு முடிக்கலாம்னு தான் இந்த பாடல். ஒரே ஜானகி, சித்ரா. கொஞ்சம் புதுசா பவதாரணி பாடிய பாட்டொன்னு கேட்கலாமா.
களஞ்சியம் என்று ஒரு இயக்குனர் இருந்தார். தேவயாணியின் ஆஸ்தான இயக்குனர். 'பூமணி' 'பூந்தோட்டம்' 'கிழக்கும் மேற்கும்' என்று ராஜாவின் இசையில் தேவயாணியை கதாநாயகியாக போட்டு வரிசையாக படம் எடுத்தார். நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலம் அது. எனக்கு 80S ராஜாவும் ஒன்று தான் 2000-ல் ராஜாவும் ஒன்று தான். அதனால் இந்த பாடல் எனது விருப்பமாக போடுகிறேன். 'பூங்காற்றே..நீ என்னை தொடலாமா' பாடல். 'கிழக்கும் மேற்கும்' படத்தில் இருந்து. கேளுங்க.






அப்பாடா...ஒரு கட்டம் ஒன்றை தாண்டுவதற்கே போதும் போதும் என்று ஆகி விட்டது. அடுத்த கட்டம் தானே முக்கியமானது..அதாங்க காதலை அந்த புள்ளைக்கிட்ட சொல்றது..I Love You சொல்றதுக்குள்ள பயலுவ ஒரு வழி ஆகிடுவானுங்க. அது சம்மந்தமான பாடல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
சிவா

29 Comments:

At 10:15 AM, Anonymous Anonymous said...

Wish you all a Happy & Prosperous Tamil New year!!

Manga pachadi sapada varaiyaa, Siva! love, vinatha

 
At 10:20 AM, Blogger வெளிகண்ட நாதர் said...

ரஜினி பட பாட்டு, படம் ஞாபகவரமாட்டேங்கிதே! நல்ல பாட்டு. இது மாதிரி பாடல்கள் அந்த காலத்துல தமிழ் நாட்ல வாழ்ந்த வாழ்க்கையிலே சில பாகங்களை அசைபோட வைக்குது. நிறைய நினப்புகள் வருது!

 
At 10:34 AM, Blogger சிவா said...

வெளிகண்ட நாதர்! அது 'தம்பிக்கு எந்த ஊரு' படம். ரஜினி-மாதவி நடித்தது.

 
At 10:55 AM, Blogger Vasudevan Letchumanan said...

சிவா,
புத்தாண்டு வாழ்த்துக்கள்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கு வருகிறேன்.

அடடா...அந்த முதல் பாடலே " காதலின் தீபம் ஒன்று....ஏற்றினாளே..என் நெஞ்சில்.."
பழைய..ஆனாலும் பசுமையான் 80களின் நான் கடந்து வந்த பள்ளி சூழலை நினைவு படுத்திவிட்டது.

காதல் நினைவா...என்றெல்லாம் கேட்காதீர்கள்
அதையும் தாண்டி....ஈர்ப்பானது!

மிகவும் இரம்மியமான மனவெளிப்பாடு
உண்டு பண்ணும் வித்தை அந்த பாடல் வரிகளுக்கும் இசைக்கும் சமப்பங்குண்டு.

என்ன நான் சொல்வது...சரிதானே?

 
At 11:02 AM, Blogger சிவா said...

அடடா வாசுதேவனா! வாங்க வாங்க :-). என்னுடைய நட்சத்திர வாரத்திலேயே இந்த பாடலை சொல்லி இருந்தீர்கள். இப்போது தான் நான் பதிவில் ஏற்றுகிறேன். காதல் நினைவா..அதையும் தாண்டியா..சூப்பர். :-). ஆமாம்! மிக அழகான காதல் வெளிப்பாடு அது.ம்ம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம் (பாடலை சொன்னேன் :-).

ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க. வருகைக்கு நன்றி வாசுதேவன்.

அன்புடன்,
சிவா

 
At 6:38 PM, Blogger Suresh Ramasamy said...

Hi siva,
Wish u a great Tamil New Year
regards
Suresh Ramasamy

 
At 7:59 PM, Blogger சிவா said...

சதீஷ்! 'என்னை தாலாட்ட வருவாளா' வெளிவரும் போது நான் படித்துக்கொண்டிருந்தேன். தியேட்டர் நிரம்பி நின்று கொண்டே பார்த்த படம் அது. ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு காலகட்டம், ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருது இல்லையா :-). 'ராசாவே ஒன்ன நான் எண்ணித்தான்' சைலஜா பாடினது தானே. நல்ல பாட்டுங்க. நினைவு படுத்தியமைக்கு நன்றி.

எனக்கு அனுபவமா... :-). அதெல்லாம் ரகசியம்..ஆமாம்..சொல்லிப்புட்டேன் :-)).

 
At 8:00 PM, Blogger சிவா said...

ஹாய் சுரேஷ்! உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம்ம ப்ளாக் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சிவா

 
At 10:59 PM, Blogger G.Ragavan said...

பொன்னி நதி வெள்ளம் இங்கே பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். முதலில் பொன்னிநதி வெள்ளம் என்று பாலு முடிக்கும் பொழுது லேசாகச் சிலிர்க்கிறார்ப் போல இருக்கும் இசை. அடுத்த முறை கேட்டுப் பாருங்கள்.

மழை வருவது மயிலுக்குத் தெரியும் என்பது காதல் பாட்டல்ல. தாய்மைப் பாட்டு. தன் மகன் திரும்பவும் ஊருக்கு வந்திருக்கிறான் என்று தெரிந்து மகிழ்ச்சியில் தாய் பாடுவது. தரத்தில் நீங்கள் பட்டியலிட்டிருக்கும் அத்தனை பாடல்களையும் விடச் சிறந்தது.

இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே நிலவொளியாம்....

கடினமான சந்தம். அதை ஜானகி பாடியிருப்பது அபாரம்.

சந்தோஷம் இன்று சந்தோஷம் பாட்டும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே....சின்னத் துள்ளல்தான் பாட்டு முழுக்க. ரொம்பவும் உணர்ச்சி பொங்காத ஆனா குட்டித் துள்ளல்கள் கொண்ட பாடல்.

செந்தூரப் பூவே......இந்தப் பாட்டை நிச்சயமாக இளையராஜா, ஜானகி, கங்கை அமரன், பாரதிராஜா ஆகியோர்கள் மறக்கவே மாட்டார்கள். இத்தனை பேர் வாழ்க்கையிலும் ஒரு பெருந் திருப்பத்தைக் கொண்டு வந்த பாடல். ஜானகிக்கு முதல் முதலாக தேசிய விருது வாங்கித் தந்த பாடல். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

இந்தக் கட்டத்தில் இன்னும் பொருத்தமான பாட்டுகள் இருக்கான்னு யோசிக்கிறேன். அன்னக்கிளி உன்னத் தேடுதே கூடப் பொருத்தமானதே....நெறையா இருக்கு. நீங்க உங்களப் பாதிச்ச பாட்டுகளப் போட்டிருக்கீங்க. அடுத்த பதிவுக்குக் காத்திருப்போம்.

 
At 12:27 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! உங்கள் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கு எல்லா பாட்டும் புடிச்சா சந்தோசம் தான். காதலின் தீபம் புடிக்காதவங்க இருப்பாங்களா :-)

பொன்னி நதி பாடல் 80ஸ் ரசிகர் பட்டாளத்திற்கு உடனே புடிக்குமே :-). அதான் எனக்கு தெரியுமே :-))

 
At 12:33 PM, Blogger சிவா said...

ராகவன்! ஐயோ அது தாய் பாடலா...தப்பு நடந்து போச்சு ராகவன். மன்னிக்கனும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. என்னிடம் ஒரு டி.வி.டி இருக்கிறது. இந்த பாடல் வரிகளை கவனிக்க வில்லை. ஒரே ஸ்லோ மோஷன்ல காட்டினாங்க. அதான் குழம்பி விட்டேன். இப்போது திருத்தி விட்டேன். நீங்க சொல்றது மாதிரி ரொம்பவே கடினமான சந்தம். அதை நானும் ரசித்து, ஜானகியின் பாடும் விதத்தை பார்த்து ஆச்சரிய பட்டேன்.

பொன்னி நதி உங்களுக்கு புடிக்கும் என்பது சொல்லவும் வேண்டுமோ :-)) 80ஸ் கலக்கல் ஆச்சே :-)
சந்தோசம் இன்று சந்தோசம், நீங்க சொல்ற மாதிரி ரொம்பவே 'ரொம்ப உணர்ச்சி பொங்காத, ஆனா துள்ளள்களோடு அமைந்த பாடல்' . சித்ராவின் கொஞ்சம் குழந்தை தனமான குரல் இன்னும் அழகாக இருக்கும்.

// அன்னக்கிளி உன்னத் தேடுதே கூடப் பொருத்தமானதே // டி.எம்.எஸ் பாடலா. இந்த இடத்திற்கு பொருந்தும் தான். எனக்கு புடிச்சது போட்டிருக்கிறேன். அதில் உங்களுக்கு பாதி பாடலாவது புடிச்சா சந்தோசம்.

சரி! அடுத்த கட்டத்திற்கு பாட்டு கொஞ்சம் பட்டியல் இடுங்களேன். (காதலை சொல்ற மாதிரி பாட்டு).

 
At 3:34 PM, Blogger தங்ஸ் said...

Innikku ellame Thenkinnam thaan ponga..Neengalum,Sundar-um arumaiya select pannureenga..

Kaathal Muthal Kattam - En Choice:
(one among the favourites:-)

Male: Ennai Thaalatta Varuvaalo
Female: Malayil Yaaro Manathodu Pesa

 
At 10:42 PM, Blogger சாணக்கியன் said...

அடுத்த கட்டத்துக்கு என்னுடைய சிபாரிசு.

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்-கோபுர வாசலிலே

 
At 10:09 AM, Blogger G.Ragavan said...

//// அன்னக்கிளி உன்னத் தேடுதே கூடப் பொருத்தமானதே // டி.எம்.எஸ் பாடலா. இந்த இடத்திற்கு பொருந்தும் தான். எனக்கு புடிச்சது போட்டிருக்கிறேன். அதில் உங்களுக்கு பாதி பாடலாவது புடிச்சா சந்தோசம். ////

இல்ல சிவா...டீ.எம்.எஸ் பாடியது சோகம். ஜானகி பாடியதுதான் மகிழ்ச்சிப் பாட்டு. நான் சொன்னதும் அதத்தான்.

காதலச் சொல்ற பாட்டுகளா?

பொன்னான ஏட்டத் தொட்டு பூவான எழுத்தாலே
கோயில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ
ம்ம்ம்..நெறைய இருக்கே....சட்டுன்னு ஒன்னும் வர மாட்டேங்குது....

 
At 1:30 PM, Blogger சிவா said...

சதீஷ்! எனக்கு கண்ண கட்டிக்கிட்டு வருது :-). இவ்வளவு பெரிய பட்டியலா...போட்டு தாக்கிட்டீங்க. இடையில டயலாக் எல்லாம் 'கோபி..ஐ லவ் யூ' எல்லாம் நியாபகம் வச்சி சொல்லி கலக்கறீங்க. நானும் 'காதலை சொல்வது' என்று பாடலுக்கு மண்டைய போட்டு பிச்சிக்கிட்டு இருக்கறேன். இந்த 23 பாடலையும் பார்த்தேன். கண்டிப்பாக சில பாடல்களை எடுத்து கொள்ளலாம். ( ஹே ஐ லவ் யூ ஐ லவ் யூ மாதிரி சும்மா டூயட்டை எல்லாம் விட்டுடலாம்). நானும் யோசிச்சி சீக்கிரம் பதிவை போட முயற்சி செய்கிறேன்

ரொம்ப நன்றி சதீஷ். தனி மடல் ஒன்று அனுப்பி இருக்கிறேன். பதில் மடல் கொடுங்கள்.

அன்புடன்,
சிவா

 
At 12:16 AM, Blogger சாணக்கியன் said...

சிவா,
'பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா' என்று பவதாரினி பாடுவதும் அருமையாகத்தான் இருக்கிறது. நானும் படம் வெளிவந்த சமய்த்திலேயே கேட்டு ரசித்திருக்கிறேன். (நாமெல்லாம் 90-ஸ் என நீங்கள் சிரிப்பது தெரிகிறது.).

அதென்னங்க பெருசுங்க யாருமே நாம் போட்ற புதுப்பாட்ட்டு எதையும் புகழமாட்டேங்கறாங்க! நாம எல்லாம் 80,70 பாடல்களை ரசிக்கவில்லையா ! (சும்மா செல்ல அங்கலாய்ப்பு)

 
At 7:46 PM, Blogger சிவா said...

வாங்க வீ.கே! உங்க பதிவு (எம்.ஜி.ஆர் பாட்டு) பார்த்தேன். தொடர்ந்து பதியுங்கள். பழைய பாடலை உங்களை மாதிரி சொல்ல யாரும் இல்லையே..

ஆமாம்..உங்க நண்பர் சதீஷ், ஒரு கேள்வி கேட்டா 100 பதில் சொல்கிறார்...அவர் கலக்கறார் :-))

 
At 7:51 PM, Blogger சிவா said...

சாணக்கியன்! அப்பாடா..கடைசி பாட்டை ரசித்து பாராட்ட நீங்களாவது வந்தீங்களே..ரொம்ப நன்றிங்க..

//அதென்னங்க பெருசுங்க யாருமே நாம் போட்ற புதுப்பாட்ட்டு எதையும் புகழமாட்டேங்கறாங்க! நாம எல்லாம் 80,70 பாடல்களை ரசிக்கவில்லையா !// அப்படி இல்லை சாணக்கியன். இப்போ 2000 அப்புறம் வரும் ராஜா பாடல்கள் (சமீபத்திய மது வரை) எனக்கு கொஞ்சம் ஏதோ கொறஞ்ச மாதிரி தெரியும் (குறிப்பா மனுவல் இன்ஸ்ரூமென்ட்ஸ் இல்லாம ரொம்ப செயற்கையா)..ஆனா இளைய பசங்க கிட்ட கேட்டா, நல்லா இருக்கு என்று சொல்றாங்க..அதே போல தான் 80ஸ் மக்களும்..பொதுவாக நாம் இசையை ரசிக்க ஆரம்பித்த காலகட்டம் நமக்கு ரொம்ப புடிக்கும். ஆனால் அந்த கால கட்டத்திற்கு முன் வந்த பாடல்களையும் ரசிக்க முடியும். (பழைய எம்.ஜி.ஆர் பாடல் வரை)..ஆனால் பிற்காலத்தில் வரும் பாடல்கள் கொஞ்சம் இடிக்கும். அது போல தான் எல்லோருக்கும்..

ஆனாலும் ராஜா 90ஸ்-லயும் ரொம்பவே நல்லா பண்ணினார்..அது நெறைய பேருக்கு புரியறது இல்லை (விட்டு கொடுத்திருவோமா என்னா :-))))

 
At 7:05 AM, Blogger Muthu said...

:-)

 
At 7:33 PM, Blogger சிவா said...

சிவகுமார்! பதிலளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கணும். 'தண்ணீர் குடம் கொண்டு' அருமையான ஜானகி பாடல்ங்க. விஜயகாந்த் படத்தில் இந்த மாதிரி பாடல் :-). 'மனதில் ஒரே ஒரு பூ பூத்தது'ம் இந்த தலைப்புக்கு அருமையான பாடல். நீங்க கொடுத்திருக்கிற மற்ற 7 பாடல்களுமே அருமையான பாடல்கள் தான். நேரம் கிடைக்கும் போது இந்த பாடல்களை கீதத்தில் கொடுக்கிறேன்.

நன்றி சிவகுமார்.

 
At 7:33 PM, Blogger சிவா said...

முத்து! :-)). சிரிச்சிக்கிட்டே ஒன்னும் சொல்லாம போய்ட்டீங்க :-)

 
At 2:26 AM, Blogger பிரதீப் said...

காதலின் தீபம் ஒன்று பாடல் ஹைபிட்சில் மெல்லிய குரலில் பாட வேண்டிய பாடல்களில் ஒன்று. பாலு - ஜானகி ரெண்டு வெர்ஷனிலும் சிறு சிறு வித்தியாசங்கள் அருமையாக இருக்கும். இதைப் போல் அமைந்த இன்னொரு பாட்டு யுவன் இசையில் நந்தாவில் முன்பனியா! இதை நம்ம பாட்டோடு சேந்து பாடிப் பார்த்தா விளங்கும்.

பொன்னி நதி வெள்ளம் ஒன்று - ஜம்முனு தூக்கிட்டுப் போகும். நீங்க சொன்ன கொஞ்சம் பழைய பாட்டு வாசனை அடிக்கத்தான் செய்யிது. மெல்லிசை மன்னர் தாக்கம்!

என்னைத் தாலாட்ட வருவாளா பாடலின் மெட்டுதான் ஒரு electrifying மெட்டு. ஏனென்றால் அதே மெட்டில் வரும் இது சங்கீதத் திருநாளோ பாட்டையும் இதையும் மட்டுமே ஒரு கேசட்டு முழுக்க ரெக்கார்டு பண்ணி வச்சிக்கிட்டு கிறங்கிக் கிடந்தேன் காலேஜூல!

ராகவன், சரியாப் பிடிச்சீங்க! சிவா! இதே உனக்காகவே வாழ்கிறேன்ல உங்க அடுத்த கட்டத்துக்குப் பாட்டு கிடைக்கும்... கண்ணான்னு ஜானகி ஜில்லு குரலில் ஆரம்பிக்கும் போதே மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்கும். கண்ணேன்னு பாலு சேர்ந்தவுடன் உலகம் மறந்துரும்.

சந்தோஷம் இன்று சந்தோஷம் - இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும் சந்தோஷம். Non-metallic குரல்களில் சித்ராவின் குரல்தான் எனக்கு மிகப் பிடித்தமானது.

செந்தூரப் பூவே பாட்டைப் பத்திச் சொல்லவே வேணாம்.

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா பாட்டும் பவதாரிணி குரலில் ஒரு நல்ல மெலொடி.

 
At 3:20 PM, Blogger சிவா said...

பிரதீப்! ராகவன் சொன்னது சரியா தான் இருக்கு :-)). ஒவ்வொரு பாடலையும் அழகா சொல்லிட்டீங்க. ஆமாம்! யுவனின் இசையில் எனக்கு ரொம்ப பிடித்த படம் 'நந்தா' தான். கிட்டத்தட்ட ராஜாவின் ஸ்டைலில் இசை அமைத்திருப்பார். 'கள்ளி அடி கள்ளி' 'ஓராயிரம் யானை' 'எங்கெங்கோ (ராஜா பாடியது)' எல்லாமே ரொம்ப நன்றாக இருக்கும்.

பொன்னிநதி பாடல் 'முதல் வசந்தம்' படத்தில் இருக்கிறதா? யாருக்கு அந்த பாடல்?

ஓ! 'காதலுக்கு மரியாதை' வரும் போது நீங்களும் கல்லூரி தானா. உட்கார இடம் இல்லாம 3 மணி நேரம் நின்று கொண்டே பார்த்த படம் அது. ஒரு கிருஸ்மஸ்க்கு வந்தது என்று நினைக்கிறேன். 'என்னை தாலாட்ட' பாடலில் நம் மனசுக்கு ஒரு vibration கொடுக்கும். சூப்பர்.

'கண்ணா உனை தேடுகிறேன்' அடுத்த கட்டத்தில் சேர்த்து விடலாம். :-)

நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா இந்த பக்கம் வாங்க. உங்கள் suggestions சொல்லுங்க.

நன்றி

 
At 12:52 AM, Anonymous Anonymous said...

siva, enakku piditha indha paadalai kekka udhavungal, Radha Azahaikiraal from Therkathikallan

 
At 8:58 PM, Anonymous Anonymous said...

I will greatful if I can get to hear "Radha Azhaikiraal" from Therkathikallan - Sung by S.Janaki. Vijayakanth & Radhika acted in the movie. Thanks in advance.

 
At 6:00 AM, Blogger சிவா said...

Hi Anonymous ( Yaaru Neenga :-)

As I am not visiting the blog for the past few weeks, I could not reply you about your request. I am really sorry about the delay. Unfortunately I don't have 'Radha Azhaikkiral' from 'Thekkathi Kalvan'...Nalla paddu thaan..I think the music is Sankar Ganesh...or somebody..Not IR...Athan ennidam illai...

Anbudan,
Siva

 
At 7:11 AM, Blogger bart said...

hi,
does someone have an mp3 version of the song

OOrai Kootti Solven Kaathal Paattu - Idhu Namma Bhoomi

if so please email the same to me.
vbvsharma@gmail.com

i will be very much pleased.

Thanks and Regards,
Bharath V V

 
At 4:34 AM, Anonymous Anonymous said...

Hi Siva,

The song "Radha Azhaikiral" is IR's song only. Not sankar Ganesh. I will upload it if u want.

 
At 2:06 PM, Blogger Mukesh said...

hi,
does some one has the female version of the song "enaku piditha padal athu unaku pidikuma" if yes plz mail me (mukeshbalaji100@gmail.com) or atleast try to say me the name of the movie,plz ya...

 

Post a Comment

<< Home