காதலை சொல்லியாச்சு. தேறுமா? தேறாதா?. நாளைக்கு 'என்னடா மாப்ள! லெட்டர் குடுத்தியா? என்ன சொன்னா?' அப்படின்னு கேட்கப் போகும் மக்காவுக்கு என்ன பதில் சொல்றது? நாம ஹீரோவா..காமெடியனா? இப்படி ஏகப்பட்ட வினாக்களுக்கு விடை அந்த புள்ள சொல்லப் போற பதிலில் இருக்கிறது.
பதில் 'நீ இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கல' அப்படின்னு பதில் வந்தா, நம்ம பசங்க உலகமே கவுந்திட்ட மாதிரி சோகமாகி, ரோட்டோடமா இருக்கிற ஒரு ரெக்கார்டிங் கடைல ஒரே சோகப்பாட்டா பதிந்து, அதை ரிவைண்ட் பண்ணி ரிவைண்ட் பண்ணி கேட்டு..அந்த செட்டு ஒடைஞ்சி போயி..ம்ம்ம்...சில பேர் கவலையே இல்லாம, மறுபடி கஜினி முகம்மது மாதிரி படை எடுத்துக்கிட்டே இருப்பாங்க. சில பேர் 'நம்ம வாழ்க்கையே முடிஞ்சி போச்சு' என்று தாடி எல்லாம் வளர்த்து அப்படியாவது O.K ஆகுமா என்று பார்ப்பாங்க.
திரையில் இதுக்கு பேர் போனவர் நம்ம முரளி. 'இதயமே..இதயமே..உன் மௌனம் என்னை கொல்லுதே' என்று நம்ம முரளி சோகமா பாட ஆரம்பிச்சாலே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுதுங்க. இதுக்கெல்லாம் இப்படி மழை பெய்ய ஆரம்பிச்சா, ஊர்ல எத்தனை பயலுவ இப்படி சுத்திக்கிட்டு இருக்காணுவ. ஒரு பேய் மழைக்கே சென்னை அல்லோலப் பட்டுப் போச்சு. எல்லாருக்கும் இப்படி மழை பெய்ய ஆரம்பிச்சா, சென்னை தாங்குமா. ஊர்ல எத்தனை பேருக்கு நீச்சல் தெரியும். இதை எல்லாம் கொஞ்சம் யோசிச்சி பீலிங் வுடுங்க முரளி.
இந்த பதிவில் பாட்டுக்கு பஞ்சமே இல்லீங்க. இந்த பதிவு கிட்டத்தட்ட எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் மாதிரி தான். முதலில் மூன்று பாடல் (எஸ்.பி.பி/மனோ/யேசுதாஸ்). அப்புறம் மற்ற எஸ்.பி.பி பாடல்களை என்னால் கழிக்க முடியவில்லை. கொஞ்சம் பெரிய பதிவு தான். நேரம் இருக்கும் போது ஒவ்வொரு பாடலாய் கேட்டுப்பாருங்க.
1. ஹீரோவுக்கு ஹீரோயின் மேலே காதல் (பெரிய கண்டுபிடிப்பு..கதைய சொல்லுடே). வழக்கம் போல ஹீரோயினுக்கு புடிக்காம போய்டும். அப்புறம் ஹீரோயினுக்கு வேறு இடத்தில் நிச்சயம் ஆகி, அவரும் அங்கேயே வந்து தங்க, நம்ம ஹீரோ ஹீரோயின் மேல இருக்கிற பாசத்துல அவருக்கு பணிவிடை செஞ்சிக்கிட்டு கிடப்பார் (அதே தாங்க..'டார்லிங் டார்லிங் டார்லிங்'). ஹீரோவ மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டி 'ஓ'ன்னு அழாத குறையா பாடிக்கிட்டு இருப்பார். தியேட்டர்ல நாமலே அழுற மாதிரி உக்காந்து பாத்துக்கிட்டு இருப்போம். ஆனா அந்த பாட்டு கேட்கிற (படத்தில்) தோழிங்க எல்லோரும் ஒரு உணர்ச்சியே இல்லாம சிரிச்சிக்கிட்டே தலையாட்டி (படத்துல பாட்ட ரசிக்கிற மாதிரி செயற்கையயா தலையாட்டறத பாக்கிற கொடுமை மாதிரி வேற கொடுமையே கெடையாதுங்க) பாட்ட கேட்பாங்க. பாட்டு முடிஞ்சதும் 'ரொம்ப நல்லா பாடுனீங்க' அப்படின்னு எல்லோரும் கை கொடுக்க, ஓரமா போய் கண்ணுல முட்டிக்கிட்டு நிக்கிற கண்ணீர தட்டிவிட்டு தியாகியா சிரிப்பார். நாமும் பக்கத்துல இருக்கிறவன் பாககறதுக்குள்ள கண்ண தொடச்சிக்கிட்டு அடுத்த கூத்தை பார்க்க ஆரம்பிப்போம்.
இந்த மாதிரி பாடல்களில் முதல் பங்கு கவிஞர்களுக்கு. ஒவ்வொரு வரிய கேட்கும் போதும் 'அண்ணன் தியாகி வாழ்க!!' அப்படின்னு நாம சீட்ட விட்டு எழுந்தது கத்தணும் போல இருக்கும். அடுத்து பாடகர். சோகமாகவும் தெரியணும், ஆனா அதை மறைச்சிக்கிட்டு சிரிக்கிற மாதிரியும் தெரியணும். எஸ்.பி.பி-க்கு இதை எல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா என்ன. ஐந்து நிமிடத்தில் தான் குரலில் எத்தனை ஏற்றம் இறக்கம், என்ன சோகம், ஒரு பரிதவிப்பு.
போதும்டே பேசினது..பாட்ட எங்க...இதோ வருது.
'உள்ளக் கதவை நீ மெல்ல திறந்தால்
அந்நாளே பொன் நாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போது முத்தாடுவாள்'
படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்
பாடல்: ஓ! நெஞ்சே
பாடகர்: எஸ்.பி.பி
2. இது இன்னொரு வகை. காதலில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு சின்ன எல்.கே.ஜி படிக்கிற புள்ளைய புடிச்சி, நம்ம ஹீரோ 'ஓ'ன்னு அழுதுக்கிட்டே பாடிக்கிட்டு இருப்பார். அந்த சின்னப்புள்ளை புரியாம முழிச்சிக்கிட்டு இருக்க, நம்ம ஹீரோ உருகி உருகி பாடுவார்.
போன பாடல் எஸ்.பி.பி. இது யேசுதாஸ். அதே தாங்க..'ஈராமான ரோஜாவே..என்னை பார்த்து மூடாதே'. 'இளமைக் காலங்கள்' படத்த்தில் பாடல்கள் அத்தனையும் ஒரு ரேஞ்சில் ராஜா கொடுத்திருப்பார் ('வாடா என் வீரா' தவிர). அதில் இந்த பாடலின் தாளம் நம்மை ரொம்பவே சோகமாக்கி விடும். மழையில் நனைந்து கொண்டே மோகன் பரிதாபமா பாடுவார் (முரளி, மோகன விட்டா யாருமே இந்த மாதிரி எல்லாம் நடிக்க முடியாது..யப்பா..உங்களால தாம்பா நாட்டுல/சினிமாவுல மழையே பெய்யுது). இசையிலும் சோகப்பாட்டு தானே என்று ஒப்பேத்தாமல் அழகாக கொடுத்திருப்பார் ராஜா. யேசுதாஸின் குரலின் உருக்கத்தை பற்றி தனியா சொல்ல வேண்டியது இல்லை. உருக ஒரு பாடல். இதோ..
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டுப் போகும்.
உன் வாசலில் என்னை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
படம்: இளமை காலங்கள்
பாடல்: ஈரமான ரோஜாவே
பாடகர்: யேசுதாஸ்.
3. எஸ்.பி.பி, யேசுதாஸ் போட்டாச்சு. அடுத்ததா, மனோ பாடல் ஒன்று போட்டுடலாம். சரி தானே. இந்த பாடலில் முதலில் இளையராஜாவை சொல்லலாம். அந்த தொடக்க இசை (Prelude), கிடாரும் புல்லாங்குழலும் சேர்ந்து ஆரம்பிக்குமே, அந்த சில விநாடி இசையில் தான் எத்தனை சோகம். சே! பாட்ட சொல்லாம ஆரம்பிச்சுட்டேன். 'மைடியர் மார்த்தாண்டன்' படத்தில் இருந்து 'ஓ! அழகு நிலவு சிரிக்க மறந்ததே'. பாடலில் மனோ அழகா 'ஓ' போடுவார் :-). மனதை வருடிச் செல்லும் பாடலின் அழகான ஓட்டம், மனோவின் குரல், அழகான வரிகள் என்று இந்த பாடலும் சோகத்திலும் ஒரு சுகம் கொடுக்கும் பாடல். இதோ.
நீர் மேல் அழகிய கோலம்
போட்டேன் தினம் தினம் நானும்
நினைத்தால் இனிமை தான்
நடந்தால் அருமை தான்
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி
படம்: மைடியர் மார்த்தாண்டன்
பாடல்: ஓ! அழகு நிலவு சிரிக்க மறந்ததே
பாடகர்: மனோ
---------------------------------------------------------------------------------------------
இனி நம்ம எஸ்.பி.பி தனி ஆவர்த்தனத்தை ஆரம்பிக்கலாம். பழசு, புதுசு என்று கலந்து கொடுக்கிறேன்.
1. இதுவும் 'இளமை காலங்கள்' யேசுதாஸ் பாட்டு மாதிரி தான். பிரபு ஒரு சின்ன பையனை தூக்கி வச்சிக்கிட்டு சோகமா பாடிக்கிட்டு இருப்பார் (மழை எல்லாம் பெய்யாது). ராஜாவின் தபேலா சுகமாய் தாலாட்டும். தபேலாவில் ராஜா நிறைய பாடல்கள் கொடுத்திருந்தாலும் இந்த பாடல் எனக்கென்னமோ ரொம்ப rich-ஆ தெரியும். 'உறுதி மொழி' படத்தில் இருந்து 'அன்புக் கதை..வம்புக் கதை..எந்தன் கதை..காதல் கதையே' இப்படி கதை கதையா எஸ்.பி.பி பாடுகிறார். அவரது குரலில் இந்த பாடல் இன்னும் அழக்காக தெரியும். அனுபவித்து பாடி இருப்பார்.
படம்: உறுதி மொழி
பாடல்: அன்புக் கதை..வம்புக் கதை
2. எனக்கு எப்பவுமே எஸ்.பி.பி யோட 70ஸ்-80ஸ் பாடல்கள் என்றால் கிறக்கம் உண்டு. அது ராஜா இசையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இந்த பாடல்கள் எல்லாம் கேட்கும் போது, அடடா! இப்படி எல்லாம் ஒரு ஆரோக்கியமான இசை திரை இசையில் இசை அமைப்பாளர் வித்தியாசம் இல்லாமல் இருந்திருக்கிறதே என்று தோன்றும். 'அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை' படத்தில் இருந்து 'எதிர்ப்பார்த்தேன் இளங்கிளிய காணலையே'. இந்த பாடல்களின் இசை அமைப்பாளர் பற்றி தெரியாது. ஒவ்வொரு வார்த்தையையும் எஸ்.பி.பி பாடுவதை ரசித்துக் கொண்டே இருக்கலாம். 5 நிமிடம் நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். ம்ம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம்..
படம்: அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
பாடல்: எதிர்ப்பார்த்தேன் இளங்கிளிய..
3. 'தென்றலோ தீயோ! தீண்டியது நானோ'. இதில் வரும் பாடல்களை எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் என்று சொல்லியாச்சு. மறுபடி என்ன சொல்ல?. இளையராஜாவின் இசையில் 'ராகங்கள் மாறுவதில்லை' படப் பாடல். சில பாடல்கள் எத்தனை தடவை, எத்தனை வருடம் கேட்டாலும் அலுப்பதில்லை. இங்கே நான் கொடுக்கும் அத்தனை எஸ்.பி.பி பாடல்களும் அதில் அடங்கும்.
என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
தனிமையே! தனல் மலர் ஆனேன் நானே!
படம்: ராகங்கள் மாறுவதில்லை
பாடல் : தென்றலோ தீயோ
4. 'மலரே என்னன்ன கோலம்..எதனால் என் மீது கோபம்'. 'ஆட்டோ ராஜா' படப்பாடல். இந்த படத்தில் 'சங்கத்தில் பாடாத கவிதை' பாடல் மட்டும் தான் ராஜாவின் இசை என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் raaja.com -ல் இந்த பாடலும் ராஜாவின் இசை தான் என்று போட்டிருக்கிறார்கள். சரியாக தெரியவில்லை. ரொம்ப குறிப்பிட்டு சொல்லணும்னா இந்த பாடலின் வரிகள் அவ்வளவு அருமையா இருக்கும். வழக்கம் போல எஸ்.பி.பி :-).
அந்த ஒரு வரி 'மலரே! நலமா ' அப்படின்னு சோகத்தோட சிரிச்சிக்கிட்டே பாடுவாரே. அடடா..
படம்: ஆட்டோ ராஜா
பாடல்: மலரே என்னன்ன கோலம்.
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கே பூவேது காயேது
நினைத்தால் எட்டாத தூரம்.
எனக்கேன் உன் மீது மோகம்
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே..நீ எங்கே! நான் எங்கே.
இநத பாடலை பற்றி நம்ம புராணம் ஒன்று சிவபுராணத்தில் எழுதி இருக்கிறேன். நேரம் இருந்தா
இங்கே படிச்சி பாருங்க.
5. கடைசியா ராஜா இசையோடு பதிவை முடிச்சிக்கலாம். இந்த பாடல் எந்த அளவுக்கு இந்த தலைப்பில் ஒத்து வரும் என்று தெரியவில்லை. ஆனால் 'எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம்' போல வரிசையா போட்டுக்கிட்டு இருப்பதால் இதையும் கொடுக்கிறேன். இந்த பாடலில் 'அம்மாடி' அப்படின்னு ஹை பிட்சில ஜிவ்வுன்னு போவார். யப்பா! இதில் எஸ்.பி.பிய அடிக்கிறதுக்கு எவரும் கிடையாது. சோகம் எவ்வளவு சுகம் (பாடலில் மட்டும்) என்று இந்த பாடல் கேட்டால் தெரியும்.
படம்: கிராமத்து அத்தியாயம்.
பாடல்: வாடாத ரோசாப்பூ நா ஒன்னு பார்த்தேன்.
ரொம்ப பெரிய பதிவு தான். 8 பாடல் போட்டிருக்கிறேன். அத்தனையும் என்னை பொருத்தவரை முத்துக்கள். நேரம் கிடைக்கும் போது பொறுமையா கேட்டு சந்தோசமா (சோகமாயிடாதீங்க) இருங்க.
மீண்டும் அடுத்தக் கட்டத்தில் சந்திப்போம்.