கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Friday, April 21, 2006

தாளம் மாறிப் போச்சு.

நமக்கு ஒரே மாதிரி சாப்பாட சாப்பிட்டுக்கிட்டு இருந்தா அலுத்து போயிடும் அல்லவா. முதல் ரவுண்ட சாம்பார் ஊத்தி கட்டிட்டு, அப்புறம் ரசத்தையும் ஒரு புடி புடிப்போம்லா. இருங்க! இருங்க! இது கீதம் ப்ளாக் தான். ஏதோ பாதை மாறி வந்துட்டோமோன்னு நெனைக்காதீங்க.

ஒரு பாடல் என்றால் பல்லவி + (அனுபல்லவி) + சரணம் + பல்லவி + மீண்டும் அதே தாளத்தில் சரணம் + பல்லவி....இப்படி தான் எல்லா பாடலும் இருக்கிறது. பல்லவியும் சரணமும் கிட்ட தட்ட ஒரே இசை தாளத்தில் தான் அமையும் (சில ராஜா பாடல்கள் செமையா, அழகா ஒரு ட்ரம்ஸ்ல ஆரம்பிப்பார். சரணத்தில் டொபுக்குன்னு தபேலாவுக்கு போய்ருவார். நான் மனசுக்குள்ள 'என்னா தல, இப்படி ஜிவ்வுன்னு பாட்ட தொடங்கிட்டு இப்படி டொப்புன்னு விழ வச்சிட்டீங்களே' அப்படின்னு பொலம்பிக்குவேன். ஆனா அவருக்கு புடிச்ச ஒரு இசை கருவி தபேலா.ஒன்னுஞ்சொல்ல முடியாதுல்லா :-).

பொதுவாகவே, பாடலின் இரண்டு சரணங்களும் 99% ஒரே தாள அமைப்பில், ஒரே இசை அமைப்பில் தான் அமைக்கிறார்கள். ஆனால் ராஜா ஒரு சில பாடல்களில் இரண்டாவது பல்லவியில் ஒரு shift கொடுத்து சுத்தமாக வேறு ஒரு தாள அமைப்பில் அமைத்திருப்பார். திடீர்னு 'பாட்ட மாத்து' அப்படின்னு ஜாலியா இசை அமைச்ச மாதிரி தோன்றும்.

இப்படி மாற்றுவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அந்த காட்சிக்கு அது தேவைப்படும். இரண்டாவது, சும்மானாட்டுக்கும் (சாம்பார், ரசம் மாதிரி) மாத்தி நமக்கு ஒரு வித்தியாசம் காட்டுவது. முதல் சரணத்தையும் இரண்டாவது சரணத்தையும் பாடகர் ஒரே ஓட்டத்தில் தான் பாடுவார். ஆனால், இசை கருவிகளை வேறு படித்தும் போது அந்த பாடல் இன்னும் ஒரு தளத்திற்கு செல்வது போல தோன்றும். ராஜாவிடம் எனக்கு பிடித்த ஒரு ஸ்டைல் இது.

முதலில், காட்சிக்கு ஏற்ற மாற்றங்களை பார்க்கலாம்.

முதல் பாடல், 'நாடோடி தென்றல்' படத்தில் ஒரு அருமையான பாடல். 'ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ'. ராஜாவும், ஜானகியும் பாடினாலே அந்த பாடல் அழகு தான். தலைவனை பிரிந்த தலைவி பிரிவுத் துயரால் பாடுகிறாள். ஜானகி பாடலை ஆரம்பிக்கிறார். பாடல் ரொம்பவே மெதுவாக போகும். டோலக்கை வைத்து ஒரு மெட்டில் மெதுவாக தட்டிக்கொண்டிருப்பார்கள். அது ஆமை மாதிரி ஒரு வேகத்தை பாடலுக்கு கொடுக்கும். இப்போது தலைவன் வருகிறான். இப்போது பிரிவு இல்லை. பாடல் வேகம் பிடிக்க வேண்டும் இல்லையா. ஜானகி எப்படி பாடினாரோ அதே வேகத்தில் தான் ராஜாவும் பாடுவார். ஆனால் 'வானமும் பூந்தென்றலும்' என்று ராஜா ஆரம்பிக்கும் போதில் இருந்து பாடலை தபேலாவுக்கு மாற்றுவார். இப்போது பாடல் வேகமாக செல்வது போல் ஒரு உணர்வை கொடுக்கும். இசை கருவிகளில் situation வித்தியாசம் காட்டுவது ரொம்ப அழகு. நீங்களும் கவனித்து ரசித்து மகிழுங்கள்.



இரண்டாவது, மாவீரன் படத்தில் இருந்து 'நீ/நான் கொடுத்தத திருப்பி கொடுப்பேன்' பாடலை எடுத்துக் கொள்ளலாம். ஹீரோயின் வழக்கம் போல ராஜா மகள். திமிர் பிடித்தவள். மோதல் ஆரம்பிக்கிறது. ஹீரோ சவால் விட்டு பாடுகிறான் 'நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்..எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி'. ராஜா ட்ரம்ஸில் பாடலை கொண்டுபோகிறார். இங்கு ஹீரோவின் வீரம், கோவம் தெரியணும். இதை ராஜா ஒரு உறுதியான ட்ரம்ஸ் வைத்து காட்டி இருப்பார். பின் தமிழ் சினிமா வழக்கம் படி ஹீரோயின் காதலில் விழுகிறாள். இப்போது 'நான் கொடுத்தத திருப்பி கொடுத்தா, முத்தமா கொடு...அத மொத்தமா கொடு' என்று ஹீரோயின் ஆரம்பிக்கிறாள். இப்போது இங்கே காதல், மென்மை தெரிய வேண்டும். இங்கேயும் ட்ரம்ஸ் தான். ஆனால் இப்போது ராஜா அப்படியே இசையை அப்படியே கொஞ்சம் அமுக்கி இருப்பார். என்ன ஒரு அழகு. ஆஹா. இன்பம்..இன்பம்..



முதல் வகையில் இறுதியாக, மீண்டும் நாடோடி தென்றலில் இருந்து 'ஏல மல காட்டுக்குள்ள' பாடலை எடுத்துக்கொள்ளலாம். இது பாண்டியன் தன் முறைப்பெண் ரஞ்சிதா தனக்கு கிடைக்காமல் கார்த்திக்கை விரும்புவது தெரிந்து பாடுவது. சபையில் எல்லோர் முன்னாலும் பாடுவது போல வரும். முதல் சரணம், ஒரு அழகான ரிபீட்டா ஒரு பீட்டில் செல்லும் 'முஞ்சடக்கி கடலுக்குள்ள முங்கி முங்கி முத்து எடுத்தேன்'...இப்படி போகும். அருமையான தெளிவான ஓட்டம். முதல் சரணம் முடிகிறது. படத்தில் க்ளைமாக்ஸ் நெருங்குகிறது. ராஜா பாடலை டாப் கியரில் ஜிவ்வுன்னு ஏத்துவார். அதே மெட்டு தன். மலேசியா முதல் பல்லவி மாதிரியே தான் பாடுவார். ஆனால், தாளத்தை மாற்றுவார். பாடலும் வேகம் பிடிக்கும். .இது இன்னொரு வித்தை. கேட்டு மகிழுங்கள்.




சரி..காட்சிக்கு தேவை இல்லை..அனாலும் சும்மானாட்டுக்கும் மாத்தி கலக்குறதும் நல்லா தானே இருக்கு. அப்படி ஒரு மூனு பாட்டு இங்கே கொடுக்கிறேன்.

முதலில் சட்டென்று நினைவுக்கு வருவது 'மன்னன்' படத்தில் இருந்து எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு 'ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்'. ரஜினி-குஷ்புக்கு வரும் பாடல். ரொம்பவே அழகான பாட்டு. எஸ்.பி.பி- சுவர்ணலதாவின் குரலில் இன்னும் அழகு. பாடல் தொடக்கத்தில் இருந்து ஒரு Repeated Beat-ல டடக் டடக்னு ஓடிக்கிட்டு இருக்கும். திடீர்னு ரெண்டாவது சரணத்தில் டமக்கு டமக்குன்னு ஒரு தபேலாவுக்கு தாவுவார். செம ஆட்டம் போட ஒரு இசை. அருமை. கேட்டு மகிழுங்க மக்கா :-)



ரெண்டாவதா, இந்த பாடல் ரொம்ப புடிக்கும். ஆனா அவ்வளவா ஹிட் ஆகலை.ம்ம்ம்..'பாடு நிலாவே' ல இருந்து ஒரு teasing பாட்டு. 'குத்தம்மா நெல்லு குத்து'. என்ன அருமையானன Manual drums..அது அங்கே அங்கே வந்து 'தும்..தும்' ஒரு தட்டு தட்டிக்கிட்டு போறத கேக்கறது என்னா இதமா இருக்கு. ட்ரம்ஸ்-ம் தபேலாவும் கலந்து ஒரு Beat அமைத்திருப்பார். அருமை. சித்ராவின் குரலில் அந்த காட்சி (மோகனை வெரட்டுற) அப்படியே கண்ணு முன்னாடி வருது. அழகா ட்ரம்ஸ்ல போய்கிட்டு இருக்கிற பாட்ட, பாதில ஒரு குலவை சத்தம் கொடுத்து குத்து குத்துன்னு தபேலாவுல குத்தி இருப்பார்...செம குத்து..கலக்கிட்டிங்க தல..



இந்த பாட்ட எப்போ கேட்டீங்களோ..இதுவும் போன பாட்டு மாதிரி தான். அதே சித்ரா..கிட்டத்தட்ட teasing தான். ஆனா பெற்ற தாயை பார்த்து மகள் பாடுவது மாதிரி வரும். 'கற்பூர முல்லை' படத்தில் இருந்து 'வாம்மா! வா! சண்டிராணி'. இதிலும் ட்ரம்ஸ் அழகு..சித்ராவின் குரல் அழகு..இரண்டாவது சரணத்தில், ட்ரம்ஸ்-ல இருந்து கொட்டு (மத்தளம்)-க்கு மாறும் பாடல். அந்த அடி, அருமையா நம்மை தாளம் போட வைக்கும். நல்லா இருக்கும்டே..கேட்டு பாருங்க..


7 Comments:

At 10:34 AM, Blogger G.Ragavan said...

சிவா....நல்ல ஆய்வு. இதை விடவும் இளையராஜா மாயவித்தைகள் செய்த பாடல்கள் எக்கச்சக்கம். பூங்காற்று திரும்புமா பாட்டு ஒன்னு போதும். சோகமாத் தொடங்கி....சந்தோஷமா முடியும். எப்ப மாறிச்சி...ஏன் மாறிச்சின்னு கூட கண்டு பிடிக்க முடியாத வகைக்கு அப்படியொரு பாட்டு.

ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த வித்தைகள்ள மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் இவங்க மூனு பேருமே ரொம்பப் பெரிய ஆளுங்க. இவங்க செஞ்சதப் பாத்துப் பொதுவா அந்த அந்தக் காலகட்டத்துல மத்த இசையமைப்பாளர்கள் செஞ்சாங்க. அதுனாலதான் பழையபாட்டுன்னா யோசிக்காம விஸ்வநாதன்னு சொல்றதும்....நடுத்தரம்னா இளையராஜாதான்னு அடிச்சுச் சொல்றதும் நடக்குது. இன்னைக்கு எல்லாரும் ரகுமான் போட்ட மாதிரிதான போடுறாங்க....

இன்னும் நெறையா பாட்டுக இருக்கு. அதையெல்லாம் இந்த மாதிரி தலைப்புகள்ள எடுத்து விடும்...நாங்க கேட்டு ரசிக்கிறோம்.

 
At 4:40 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! உங்க பாராட்டு அத்தனைக்கும் நன்றி அக்கா :-)

ராஜா ரஜினிக்கு கடைசியா கொடுத்த 'வீரா' கூட ரொம்பவே கலக்கலா இருக்கும். ஆனாலும் கமல் என்றால் கூடுதல் கவனம் தான் :-))

 
At 4:49 AM, Blogger சிவா said...

ராகவன்! பாராட்டுக்கு நன்றி! ராஜாவின் வித்தைகள் நிறைய உண்டு. அதை அனுபவிக்கிற அளவுக்கு நமக்கு இசை அறிவு கம்மி :-). என் அறிவுக்கு எட்டிய, நான் ரசித்ததை எழுதுகிறேன். உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. இப்படி ஏதாவது தோன்றினால் கண்டிப்பாக எழுதுகிறேன்.

பூங்காற்று திரும்புமா- நீங்க சொன்னதுக்கு அப்புறம் மறுபடி கேட்டுப் பார்க்கிறேன். அப்படியே ரெண்டு எம்.எஸ்.பி பாட்டு ரெண்டு சொல்லிட்டு போங்க :-)

 
At 4:50 AM, Blogger சிவா said...

வருகைக்கு நன்றி திலீப்! நீங்கள் பட்டியலிட்டு இருக்கும் பாடல்கள் அனைத்தும் நம்ம தலைப்புக்கு பொருந்தும். கொடுத்தமைக்கு நன்றி.

அன்புடன்,
சிவா

 
At 1:41 AM, Blogger சாணக்கியன் said...

கலக்குறீங்க சிவா, நல்ல கவனிப்பு. நான் கவனிச்சதே இல்ல...

 
At 4:59 AM, Blogger சிவா said...

சாணக்கியன்! இப்படி கவனித்து ரசிக்க ராஜாவின் இசையில் நிறைய விசயம் இருக்கு..இசை ஞானம் இருக்கிறவர்கள் ரொம்ப ரசிப்பார்கள்..எனக்கு சுத்தமா ஒன்னும் தெரியாது..பாட்டு கேக்கறதோட சரி.. ;-))

 
At 7:14 PM, Blogger சிவா said...

சதீஷ்! பதில் அளிக்க தாமதமாகி விட்டது. கொஞ்சம் வேலைப் பளு. அவ்வளவே..
உங்களுக்கு புடிச்சப் பாட்டு ஒன்று போட்டாலே எனக்கு சந்தோசம்.
நீங்க உங்க லிஸ்ட்டும் கொடுங்க. நானும் தெரிஞ்சிக்கறேன். எனக்கும் ஐடியா கெடைக்கும்.

 

Post a Comment

<< Home