கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, May 09, 2006

அக்கம் பக்கம்

ரொம்ப நாளா இந்த பதிவு போடணும்னு யோசித்துக்கிட்டே இருந்தேன். இன்று தான் ஒரு செட் சி.டி வந்தது. சரின்னு ஆரம்பிச்சாச்சி. ராஜாவின் இசையில் மற்ற மொழி பாடல்கள்.

நம்மில் நிறைய பேர் ஹிந்தி தெரியாமலே ஹிந்தி பாட்டு கேட்டிருப்பீங்க. கைல தார் டின்னோட அலைஞ்சாலும் அலைவோமே தவிர ஹிந்தி மட்டும் கத்துக்க மாட்டோம். தமில் வலக்கறோம்..தமில் வலக்கறோம்னு சில எருமைங்க வயிறு வளர்த்தது தான் மிச்சம். புண்ணியத்துக்கு சென்னைலயே வாழ்க்கைய ஓட்டுறதால பொழைசசேன். பெங்களூர் போனோம்னா வீரப்பன் ராஜ்குமார கடத்தாம இருக்கணும் (இப்போ அந்த பிரச்சனை இல்லை), இல்லன்னா நாட்டுல நல்லா மழை பெய்யணும். இல்லன்னா பிரச்சனை தான். அதுக்கு வடக்க போனா சொல்லவே வேணாம்.

சரி! சரி! அந்த பிரச்சனை எல்லாம் எதுக்கு..பாட்ட போடுடே அப்படின்னு யாரோ திட்டற மாதிரி இருக்கு..பதிவுக்கு போய்டலாம்.

இளையராஜா ரசிகர் மன்றத்தில் (யாகூ குழுமம்) சேர்கிற வரைக்கும் எனக்கும் ராஜாவின் மற்ற மொழி பாடல்கள் பரிட்சயம் கிடையாது. அதில் சேர்ந்த பின் தான் ராஜாவின் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் பாடல்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.

பொதுவாகவே மற்ற மொழி உச்சரிப்பு கேட்டால் நமக்கு கொஞ்சம் இடிக்கும். சில இடங்களில் என்னடா பாடுறானுங்க என்று சிரிப்பு வரும். (அவனுங்க நம்ம 'இ'ய பாத்து, என்னடே இடியாப்பம் மாதிரி இருக்குன்னு சொல்வானுங்க..நாம என்னடா முட்ட முட்டையா போடறீங்க..எப்போடா எழுதுவீங்க அப்படின்னு திருப்பி சொல்லிக்க வேண்டியது தான்). ஆனால் ராஜாவின் இசைக்காக நான் எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்தேன். இப்போ தெலுங்கு, கன்னட உச்சரிப்புகள் பழகிப் போய்விட்டது. உங்களுக்கு கேட்டு பழக்கம் இல்லன்னா, ஒரு தடவையாவது கேட்டு பாருங்க..ராஜாவுக்காகா.. எஸ்.பி.பி-க்காக..ஜானகிக்காக..அப்புறம் கண்டிப்பா புடிக்கும்.

முதலில் தெலுங்கு தேசத்துக்கு செல்வோம். தமிழுக்கு அப்புறம் ராஜா ரொம்ப சிறப்பாக செய்தது தெலுங்கில் தான். அதில் நிறைய டப் ஆகி, நமக்கே இது டப் படமா என்று தெரியாமல் கலக்கிய பாடல்கள் ஏராளம் (இதயத்தை திருடாதே, சிவா, சலங்கையில் ஒரு சங்கீதம், பாடும் பறவைகள்). இதில் Aalapana (சலங்கையில் ஒரு சங்கீதம்), Abhinandana, Anweshna (பாடும் பறவைகள்) மூன்றையும் கேட்கும் போது ராஜா என் மனசில் எங்கேயோ போய்டுவார். (இந்த மூன்றுமே என்னிடம் இல்லை. ஆர்டர் பண்ணி இல்லன்னுட்டானுவ
:-((. இன்று ஒரு 5 சி.டி வந்தது. சரி அதில் இருந்து ஒரு பாடலை கொடுக்கிறேன்.

ராஜாவின் 80ஸ் முத்திரை. எஸ்.பி.பி-ஜானகி ஜோடி. சில பாடல்கள் கேட்கும் போது அதில் மனசு மாட்டிக்கும். தினமும் 10 தடவை கேட்டாலும் அப்படியே வாரக் கணக்கா சலிக்காம கேட்டுக்கிட்டே இருப்போம். அப்படித் தான் இந்த பாடலிலும் மனசு மாட்டி ஒரு மாசம் ஆச்சு. இன்னும் மீண்ட பாடில்லை. மறுபடியும் சொல்றேன். பாட்டு தெலுங்கு பாட்டு. கொஞ்சம் பொறுமை தேவை. பொறுமையா கேட்டுட்டு புடிச்சா சொல்லுங்க.

படம்: மஹரிஷி
இயக்கம்: வம்சி (வம்சி படம்னாலே ராஜா பொளந்து கட்டுவார்)
பாடல் : சுமம் ப்ரதி சுமம் சுமம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி & ஜானகி.



இப்போ கன்னடம். தெலுங்குக்கு அடுத்த படியா ராஜா கன்னடத்தில் சிறப்பாக செய்தது மாதிரி தோன்றும். நான் இது வரை ஒரு 4 படம் பாடல் கேட்டிருக்கிறேன். அத்தனையும் அவ்வளவு ப்ரஸ்ஸா, கலக்கலா இருக்கு. டிப்டூருக்கு (கர்னாடகா) சித்தி வீட்டுக்கு போகும் போது சில கன்னட படம் பார்த்து, பாட்டெல்லாம் கேட்டு 'டேய்! நீங்கெல்லாம் இந்தியாவுல தான் இருக்கீங்களா' அப்படின்னு கேட்டுட்டு வந்திருக்கேன். அப்போ ராஜாவெல்லாம் ரசிக்க ஆரம்பிக்கலை. இந்த ராஜாவின் பாடல் எல்லாம் கேட்டா, 'ஓ! நீங்க கூட இப்படி எல்லாம் கேப்பீங்களா' அப்படின்னு ஆச்சரிய பட்டுப் போனேன். 1995ல 'கண்களின் வார்த்தைகள்' என்று ஒரு டப்பிங் படம் வந்தது. ராஜாவின் இசையில் பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கும். 'நம்மூர மந்தார ஹூவே' என்ற கன்னட படத்தின் டப்பிங் தான் அது. அதில் 'அல்லி..சுந்தரவள்ளி..லாலி' என்று அருண்மொழி பாடிய பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதன் ஒரிஜினலை எஸ்.பி.பி பாடி இருப்பார். கூடுதல் இனிமை. நல்ல ஒரு வித்தியாசமான கம்போசிங்க். கேட்டு பாருங்க.



இதே பாடல். அருண்மொழி குரலில். தமிழில்.



கடைசியா மலையாளப் பாடல் ஒன்று. ராஜா மலையாளத்தில் கணிசமான அளவுக்கு இசை அமைத்திருக்கார். ஆனாலும் எனக்கென்னமோ எல்லாமே ஒரே அச்சில் வார்த்த கொழுக்கட்டை மாதிரி தான் இருக்கு. அதே யேசுதாஸ், ஸ்ரீகுமார் எல்லா பாடல்களுக்கும். அப்புறம் படங்களும் பாடல்களுக்கு ஒரு வித்தியாசமான களம் கொடுக்காது. ராஜாவும் ரொம்ப வித்தியாசம் காட்டாமல் தன் வழக்கமான ஸ்டைலாகவே கொடுத்த மாதிரி ஒரு தோற்ற்ம். அதனால் எல்லா மொழி பாடல்களையும் எடுத்தால், மலையாளம் கடைசில தான் வருது. ஆனால் ராஜாவுக்கு முழு தீனி போட்ட இரண்டு படங்களும் மலையாளத்தில் தான் உண்டு. ஒன்று குரு. இரண்டாவது சிறைச்சாலை. குருவை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். ஏதோ ஒரு உலகத்தில் அனைவருக்கும் கண் தெரியாது. அங்கு செல்லும் மோகன்லால் ஒரு கனியின் சாறினை உண்டால் கண்பார்வை கிடைக்கும் என்று தெரிந்து அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி அதை கொடுப்பார். கண்பார்வை கிடைத்து, முதன் முதலாக உலகத்தின் அழகை பார்க்கும் ஒவ்வொரின் சந்தோசத்தையும் இந்த பாடலில் இசையால் சொல்வார் ராஜா. அணு அணுவாக ரசிக்கலாம் இந்த பாடலின் இசையை. படத்தின் இசை முழுவதும் ஹங்கேரியில் ரெக்கார்டிங் செய்தார்கள். இந்த படத்தை இன்னும் பாக்கலன்னா சீக்கிரம் பாருங்க. ராஜாவின் இசைக்காக. இதோ பாடல்.(மம்முட்டியின் தொடக்க குரலோடு பாடல் ஆரம்பிக்கும்).

படம்: குரு
பாடியவர்: யேசுதாஸ் & குழுவினர்


16 Comments:

At 9:45 PM, Blogger G.Ragavan said...

கன்னடத்தில்தான் ராஜா இசை பழகினார்னு சொல்லலாம். விஸ்வநாதன் கிட்ட வயலினிஸ்ட்டா இருந்தவரு ஜி.கே.வெங்கடேஷ் கிட்ட சேந்து நல்லா தொழில் கத்துக்கிட்டாருன்னு சொல்லனும். அதுனால கன்னடத்துல முடிஞ்ச வரைக்கும் ராஜா reused tunes போட்டதில்லை.

ஆனா தெலுங்குல அப்படியில்லை. இங்க போட்டத அங்க நெறைய போட்டிருக்காரு. அதுலயும் சில பாடல்களில் பாடகர்களை மாத்தீருக்காரு. பல காரணங்களுக்காக.

தம்தன தம்தன பாட்டு எல்லாருக்கும் தெரியும். தமிழில் ஜென்சியும் வசந்தாவும். நமக்கெல்லாம் அந்தப் பாட்டு நல்ல பாட்டு. ஆனா ராஜாவுக்கில்லை. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு நிறைவேறலை. தெலுங்குல அதே பாட்டுக்கு ஜென்சிக்குப் பதிலா பி.சுசீலாவும், வசந்தாவுக்குப் பதிலா ஜானகியும் பாட வெச்சாரு.

நானொரு சிந்து பாட்டுக்குச் சித்ராவுக்குப் பதிலா தெலுகுல பாடுனது பி.சுசீலா.

தூங்காத விழிகள் ரெண்டு - தெலுங்குல வாணி ஜெயராம்.

இன்னும் நெறைய லிஸ்ட்டு போடலாம். இளையராஜா ரசிகர்கள் இன்னும் நெறையாவே போடுவாங்க.

 
At 3:21 AM, Blogger சாணக்கியன் said...

அட போங்க சிவா, சும்மா உங்களை பாராட்டிக்கிட்டே இருந்தா போரடிக்குது. உங்க கலைச்சேவை அசாதாரணமா இருக்கு. எனக்கும் ராஜாவின் பிறமொழிப் பாடல்களை கேட்பதில் ஒரு கிக் உண்டு. ஆனா இந்த மாதிரி தேடிப்புடிச்சு கேட்டதில்லை. எப்பவாவது டீ.வீ.ல கேக்கறது தான். புரியாத மொழிப் பாடல்களை கேட்கும்போது இசைவடிவத்தையும் மொழியின் ஓசை வடிவத்தையும் மட்டும் மனசு கவனிப்பதால் ஒரு கூடுதல் சுகம்... தொடர்ந்து பிற மொழிப்பாடல்களும் போடுங்கள்.

அன்புடன்,
சாணக்கியன்

 
At 4:44 AM, Blogger கார்திக்வேலு said...

சிவா
உங்கள் பதிவுகளில் நீங்கள் குறிப்பிடும் பாடல்களைவிட நீங்கள்
அதை ரசிக்கும் விதமும் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ளும் விதமும் தான் அருமை :-)

சிறப்பான பணி,வாழ்த்துக்கள்.

 
At 7:01 PM, Blogger சிவா said...

ராகவன்! //கன்னடத்தில்தான் ராஜா இசை பழகினார்னு சொல்லலாம்// உண்மை. ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் தான் சங்கீதம் கற்றுக்கொண்டதை நிறைய தடவை ராஜா கூறி இருக்கிறார். நான் ஜி.கே.வெங்கடேஷ் இசையை கேட்டதில்லை. ராஜாவின் இசையில் வெங்கடேஷ் இசையின் தாக்கம் இருக்குமா?. அவரின் இசையை கேட்டதில்லை. அதனால் தான் கேட்கிறேன். வேறு ஒரு பொருளிலும் அல்ல. :-)

ஆமாம். கன்னடத்தில் ராஜா அவ்வளவாக இங்கே போட்ட பாட்டை போட்டதில்லை. ஆனால் தெலுங்கில் பாதி தமிழில் இருந்து போனவை தான். இல்லாவிட்டால் அங்கிருந்து தமிழுக்கு வந்தவை. எப்படியோ ரொம்ப சிலவையே நாம் கேட்காததாக இருக்கும். போன மாசம் 'தெலுங்கு இளையராஜா ஹிட்ஸ்' அப்படின்னு ஒரு சி.டிய பார்த்தவுடன் வாங்கிட்டேன். அப்புறம் போட்டு பார்த்தா 'சலங்கை ஒலி' 'சிப்பிக்குள் முத்து'...எல்லாம் தெலுங்கு ஒரிஜினல். தமிழில் டப். அப்புறம் இப்போ பாத்து பாத்து தான் வாங்கறேன். ரொம்ப கொடுமை 'சின்ன தம்பி' 'இதயம்' 'சின்ன கவுண்டர்' எல்லாம் அப்படியே தெலுங்கில் இருக்கும். தெரியாம வாங்கிட்டா :-)))

நீங்க சொல்ற மாதிரி ஒரு விசயம் ரசிக்கலாம். பாடகரை மாற்றி பயன்படுத்தி இருப்பார். 'கீதாஞ்சலி' முழுசும் எஸ்.பி.பி...தமிழில் 'இதயத்தை திருடாதே' முழுசும் மனோ. நீங்க சொன்னப்புறம் 'கர்ஷனா'(அக்னி நட்சத்திரம்) சி.டிய பார்த்தேன் (சிவா படத்துக்காக இந்த டப்பிங்கையும் சேர்த்து ஒரே சிடியா வந்துட்டு). ஆமாம்! மூனு பாட்டு வாணி ஜெயராம் தான். 'ஒரு பூங்காவனம்' 'ரோஜாப்பூ' 'தூங்காத விழிகள் ரெண்டு' மூன்றுமே வாணி தான். நல்லா தான் இருக்கு :-)). ஆச்சரியம் தான். ராஜா அப்போது வாணிக்கு மூன்று பாட்டு கொடுத்தது :-)

 
At 7:05 PM, Blogger சிவா said...

சாணக்கியன்! சும்மா சும்மா பாராட்டாதீங்க :-)). எனக்கும் போரடிக்கும். பாட்ட கேட்டீங்க என்றாலே அது போதும். ( கலை சேவை எல்லாம் இல்லை..நீங்க வேற...யாராவது சண்டைக்கு வந்திட போறாங்க. :-))) நானும் தேடி பிடித்து கேட்க ஆரம்பித்தது சில வருடங்களுக்கு முன்பு தான். ராஜாவின் 700+ படப் பாடல்களையும் கேட்டு பாத்திடணும்னு ஒரு வெறி.

 
At 7:07 PM, Blogger சிவா said...

கார்த்திக்வேலு! உங்கள் முதல் வருகைக்கு நன்றிங்க. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி. ஏதோ எனக்கு தோன்றதை அப்படியே எடுத்து விடறேன். உங்களை மாதிரி ஆளுங்க நல்லா இருக்குன்னு சொன்னா சந்தோசம் தான். நேரம் கிடைக்கும் போது வந்து பாட்டு கேளுங்க.

அன்புடன்,
சிவா

 
At 1:19 AM, Blogger G.Ragavan said...

// ராகவன்! //கன்னடத்தில்தான் ராஜா இசை பழகினார்னு சொல்லலாம்// உண்மை. ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் தான் சங்கீதம் கற்றுக்கொண்டதை நிறைய தடவை ராஜா கூறி இருக்கிறார். நான் ஜி.கே.வெங்கடேஷ் இசையை கேட்டதில்லை. ராஜாவின் இசையில் வெங்கடேஷ் இசையின் தாக்கம் இருக்குமா?. அவரின் இசையை கேட்டதில்லை. அதனால் தான் கேட்கிறேன். வேறு ஒரு பொருளிலும் அல்ல. :-) //

உண்டு உண்டு. குறிப்பாக ஆரம்ப காலப் பாடல்களில். ஜி.கே.வியின் இசையில் மெல்லிசை மன்னரில் தாக்கம் நிறையவே உண்டு. ஏனென்றால் ஜி.கே.வி உதவியாளராக மெல்லிசையிடம் இருந்தார். பாவமன்னிப்பு படத்தில் கூட ஒரு பாடல் பாடியிருக்கிறார். பாடல் மறந்து போய் விட்டது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் விஸ்வநாதன் தாக்கம் இல்லாத இசையமைப்பாளர் இல்லை. எண்பதுகளிலும் ஆரம்பத் தொன்னூறுகளிலும் இளையராஜாவின் தாக்கம் இல்லாத இசையமைப்பாளர் இல்லை. அதற்குப் பிறகு ரகுமானின் தாக்கம் இல்லாத இசையமைப்பாளர் இல்லை.

ஜி.கே.வியின் தாக்கம் இளையராஜாவின் பாடகர் தேர்வில் நிறைய இருந்தது. கன்னடத்தில் விஜயபாஸ்கர், டி.ஜி.லிங்கப்பா போன்ற இசையமைப்பாளர்கள் பி.சுசீலாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஜி.கே.வி ஜானகியைப் பயன்படுத்தியிருப்பார். தமிழில் ஜானகிக்குப் பெரும் வாழ்வு தந்தது இளையராஜாதானே. இளையராஜா வருவதற்கு முன்பு மெல்லிசையின் இசையில் ஜானகி பாடிய பாடல்களை விட, பிறகு பாடிய பாடல்கள் மிக மிக அதிகம். இதுதான் உண்மை.

 
At 1:26 AM, Blogger G.Ragavan said...

// ஆமாம்! மூனு பாட்டு வாணி ஜெயராம் தான். 'ஒரு பூங்காவனம்' 'ரோஜாப்பூ' 'தூங்காத விழிகள் ரெண்டு' மூன்றுமே வாணி தான். நல்லா தான் இருக்கு :-)). ஆச்சரியம் தான். ராஜா அப்போது வாணிக்கு மூன்று பாட்டு கொடுத்தது :-) //

இது ரொம்ப ஆச்சரியம். மூனு பாட்டுகள் வாணி ஜெயராமுக்கு இளையராஜா கொடுத்தது. அவருடைய ஆரம்ப காலப் படங்களில்தான் வாணி நிறைய பாடியிருக்கிறார். அதுவும் முத்து முத்தாக.

அலைகள் ஓய்வதில்லை...தெலுகு வெர்ஷனில் எல்லாப் பாட்டும் வாணிதான் என்று நினைக்கிறேன். தமிழில் விழியில் விழுந்து பாடலை அவரை வைத்துப் பாட வைக்கத்தான் நினைத்தாராம். ஆனால் வாணி பிஸி. பி.சுசீலா பிஸி. ஜானகி பிஸி. சரியென்று பி.எஸ்.சசிரேகாவை வைத்துப் பாட வைத்தாராம். ஆனால் பி.எஸ்.சசிரேகா மிகச் சிறப்பாக பாடியிருந்தார் என்றால் மிகையாகாது. அதுனால தெலுங்குல அலலு களலுன்னு வாணிதான் பாடியிருப்பாங்க.

அதே போல பிரியா படத்துல தமிழ்ல பி.சுசீலா, ஜென்சி, ஜானகீன்னு ஆளுக்கு ஒன்னு. கன்னடத்துல மூனுமே ஜானகி. வழக்கமா நல்லாப் பாடுற ஜானகி மூனு பாட்டையும் சரியாப் பாடலைன்னு என்னோட ஜானகி ரசிகர் நண்பன் ரொம்ப வருத்தப் பட்டுக்கிட்டாரு. அதே போல இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாட்ட ஜானகியும் எஸ்.பி.பியும் தெலுங்குல சரியாப் பாடலைன்னு ரொம்ப வருத்தப் பட்டாரு. அவரு பேர் பிரதீப். இப்ப வலைப்பூவுலயும் இருக்காரு. ஒங்க பதிவைப் பாத்தா ரொம்ப சந்தோசப் படுவாரு.

 
At 2:35 AM, Blogger பிரதீப் said...

ராஜா வெங்கடேஷை குருவாக மதிப்பதென்பது என்னவோ உண்மைதான். ஆனால் லவலேசமும் வெங்கடேஷின் சாயல் அவரது இசையில் இல்லை.

இந்தப் பதிவில் எல்லா பாட்டுமே புடிச்சிருந்தாலும் சித்ராவும் பாலசுப்பிரமணியமும் பாடின "ஹள்ளி லாவணியல்லி லாலி" பாட்டுதான் எனக்கு டாப்! அருமையான பாட்டு, அழகான பின்னணி இசை, அதற்கேற்ற மாதிரி பிரேமாவும் சிவராஜ்குமாரும் (இவரு நிஜமாவே நடிச்சதுன்னு பாத்தா இது ஒண்ணுதான்) அப்படியே குழைந்திருப்பார்கள். இந்தப் படமும் என்னுடைய ஃபேவரைட்.

நன்றி சிவா

 
At 4:45 AM, Blogger சிவா said...

//ஜி.கே.வியின் தாக்கம் இளையராஜாவின் பாடகர் தேர்வில் நிறைய இருந்தது. // அப்படியா ராகவன். இவ்வளவு சின்னப் பையனா இருந்துக்கிட்டு :-), மெல்லிசை மன்னர் காலப் பாடல் பற்றி எல்லாம் எப்படி தான் தெரிஞ்சி வச்சிருக்கியலோ. உங்களிடம் இருந்து இந்த ப்ளாக் மூலம் நானும் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்.

//அதே போல இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாட்ட ஜானகியும் எஸ்.பி.பியும் தெலுங்குல சரியாப் பாடலைன்னு ரொம்ப வருத்தப் பட்டாரு. அவரு பேர் பிரதீப்// இருக்கலாம். ஜெயசந்திரனுக்கென்று சில பாடல்கள் இருக்கிறது. அதை மற்ற மொழியில் வேறு பாடகர்கள் பாடினால் நன்றாக வருமா என்று தெரியவில்லை. தெலுங்கில் தான் ராஜா ரொம்பவே ஜானகியை பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒரு வேலை தெலுங்கு உச்சரிப்பாக கூட இருக்கலாம்.

உங்க நண்பர் பிரதீப்-ஆ, நீங்க சொன்னவுடனே ஆஜராகிட்டார் பாருங்க. உங்கள் நண்பரிடம் நம் ப்ளாக் பற்றி சொன்னதுக்கு நன்றி ராகவன்.

 
At 4:50 AM, Blogger சிவா said...

வாங்க பிரதீப்! உங்கள் முதல் வருகைக்கு நன்றி. ராகவன் நண்பரா நீங்க. ரொம்ப நல்லது. அப்போ அவரு மாதிரியே நல்லா பாட்டு கேப்பீங்க என்று நினைக்கிறேன்.

'ஹள்ளி லாவணியல்லி' பாட்டு தான் அந்த படத்தில் எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு. அதான் அதை எடுத்துப் போட்டேன். உங்களுக்கும் புடிக்குமா..சந்தோசம். நான் படம் எல்லாம் பார்த்தது இல்லை. (டப் ஆகி வந்து டப்பாவாகி போச்சு..). ஒரு பாடல் மட்டும் பார்த்திருக்கிறேன். சரியாக நினைவுக்கு வரமாட்டேங்குது.

நேரம் கிடைக்கும் போது அடிக்கடி வாங்க பிரதீப்.

அன்புடன்,
சிவா

 
At 4:59 AM, Blogger நன்மனம் said...

//சும்மா சும்மா பாராட்டாதீங்க :-)). எனக்கும் போரடிக்கும். பாட்ட கேட்டீங்க என்றாலே அது போதும்.//

வந்ததுக்கு +

 
At 1:21 AM, Blogger G.Ragavan said...

// பிரதீப் said...
ராஜா வெங்கடேஷை குருவாக மதிப்பதென்பது என்னவோ உண்மைதான். ஆனால் லவலேசமும் வெங்கடேஷின் சாயல் அவரது இசையில் இல்லை. //

வாங்க பிரதீப். இனிமே இங்க ஒங்களுக்குக் கொண்டாட்டந்தான்.

இன்றைக்கு ராஜா வந்திருக்கும் தொலைவு நிறைய. ஆரம்பகாலத்தில் அவருடைய இசைகோர்ப்பில் வெங்கடேஷின் சாயலை லேசாகப் பார்க்கலாம். சில பாட்டுகளில் விஸ்வநாதனின் சாயலும் பார்க்கலாம். அதே போல இளையராஜாவைப் பார்த்து விஸ்வநாதன் படித்த பாடங்களும் உண்டு. அது இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மதிப்பதால் இருக்கும் என்று நினைக்கிறேன்.

// இந்தப் பதிவில் எல்லா பாட்டுமே புடிச்சிருந்தாலும் சித்ராவும் பாலசுப்பிரமணியமும் பாடின "ஹள்ளி லாவணியல்லி லாலி" பாட்டுதான் எனக்கு டாப்! அருமையான பாட்டு, அழகான பின்னணி இசை, அதற்கேற்ற மாதிரி பிரேமாவும் சிவராஜ்குமாரும் (இவரு நிஜமாவே நடிச்சதுன்னு பாத்தா இது ஒண்ணுதான்) அப்படியே குழைந்திருப்பார்கள். இந்தப் படமும் என்னுடைய ஃபேவரைட். //

பிரேமா இயல்பாகவே நல்ல நடிகை. ஆனா சிவராஜ்குமார். நம்மூரு மந்தாரா ஹூவே படத்துல நல்லா நடிச்சிருந்தார். வேற படம் எதுவும் எனக்கு நினைவில்லை. இன்னொன்று இருக்கிறது. ஓம். அதிலும் ஓரளவு சிறப்பே. மற்றபடி.....

 
At 1:24 AM, Blogger G.Ragavan said...

// சிவா said...
//ஜி.கே.வியின் தாக்கம் இளையராஜாவின் பாடகர் தேர்வில் நிறைய இருந்தது. // அப்படியா ராகவன். இவ்வளவு சின்னப் பையனா இருந்துக்கிட்டு :-), மெல்லிசை மன்னர் காலப் பாடல் பற்றி எல்லாம் எப்படி தான் தெரிஞ்சி வச்சிருக்கியலோ. உங்களிடம் இருந்து இந்த ப்ளாக் மூலம் நானும் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். //

பிரதீப் கிட்ட கேளுங்க...அவரு இன்னமும் எடுத்து விடுவாரு....அவரு பெரிய தில்லாலங்கடி..இளையராஜா பத்தி ஒங்களுக்குத் தெரியாததெல்லாம் சொல்வாரு.

// //அதே போல இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாட்ட ஜானகியும் எஸ்.பி.பியும் தெலுங்குல சரியாப் பாடலைன்னு ரொம்ப வருத்தப் பட்டாரு. அவரு பேர் பிரதீப்// இருக்கலாம். ஜெயசந்திரனுக்கென்று சில பாடல்கள் இருக்கிறது. அதை மற்ற மொழியில் வேறு பாடகர்கள் பாடினால் நன்றாக வருமா என்று தெரியவில்லை. தெலுங்கில் தான் ராஜா ரொம்பவே ஜானகியை பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒரு வேலை தெலுங்கு உச்சரிப்பாக கூட இருக்கலாம். //

இருக்கலாம். ஒரு இசையமைப்பாளர் இதை வைத்துத்தான் பாடகரைத் தேர்வு செய்வார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். அதுவும் இசை ஜாம்பவான்களிடம்.

// உங்க நண்பர் பிரதீப்-ஆ, நீங்க சொன்னவுடனே ஆஜராகிட்டார் பாருங்க. உங்கள் நண்பரிடம் நம் ப்ளாக் பற்றி சொன்னதுக்கு நன்றி ராகவன். //

அட..நீங்க ரெண்டு பேரும் ஒத்த விருப்பமுள்ளவங்க. அதான் அறிமுகம் செஞ்சு வெச்சேன்.

 
At 7:23 PM, Blogger சிவா said...

ராகவன்! பிரதீப்பை அறிமுகம் செய்து வைத்ததுக்காக நன்றி. நீங்க சொல்றத பார்த்தா, ரொம்ப விசயம் வச்சிருப்பாரு போலயே. நேரம் இருக்கும் போது அவரை இந்த பக்கம் கண்டிப்பா வர சொல்லுங்க.

 
At 7:28 PM, Blogger சிவா said...

சதீஷ், தெலுங்கில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து தெலுங்குக்கும் அப்படியே டப் ஆகி போன படங்கள் ஏராளம். அதை தவிர சில படங்களில் ஒரு சில பாடல்களை அங்கேயும் இங்கேயும் ராஜா பயன்படுத்தி இருப்பார். 'செண்பகமே செண்பகமே'ல வருகிற 'மஞ்சப்பொடி தேய்கையிலே' எஸ்.பி.பி தனி பாடலை தெலுங்கில் மஹரிஷி-ல டூயட்டா அதுவும் வித்தியாசமான இசை அமைப்போடு கொடுத்திருப்பார். கேட்க அருமையா இருக்கும். மஹரிஷில மற்ற பாடல்கள் அனைத்தும் ஒரிஜினல். இப்படி நிறைய இருக்கிறது.

நீங்க சொன்ன இரண்டு தெலுங்கு டப்பிங் பாடல்களும் நல்ல பாடல்கள். சில பாடல்கள் டப்பிங் மாதிரியே தெரியாது.

 

Post a Comment

<< Home